கதை: என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?

By கீர்த்தி

அது வித்தியாசமான காடு. காட்டில் வசிக்கும் யாரும் யாரிடமும் பேசிக்கொள்வதில்லை. அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு, அமைதியாகச் சென்றுவிடுவார்கள்.

அந்தக் காட்டிற்குள் புத்திசாலி குரங்கு ஒன்று நுழைந்தது. அமைதியான காட்டைக் கண்டு குரங்குக்குக் கொஞ்சம் அச்சமாக இருந்தது. சற்றுத் தொலைவு சென்றவுடன் மரத்தடியில் கரடி ஒன்று படுத்திருந்ததைக் கண்டது.

“கரடியாரே, நான் இந்தக் காட்டிற்குப் புதிதாக வந்திருக்கிறேன். இனி இந்தக் காட்டிலேயே வசிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று பணிவாகக் கேட்டது குரங்கு.

குரங்கை முறைத்துப் பார்த்த கரடி, “குரங்கே, உன்னை யாரென்றே தெரியாது. நான் ஏன் உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? பேசாமல் வந்த வழியே ஓடிப் போய்விடு” என்று கோபத்தோடு சொன்னது.

குரங்குக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் சிறிது தொலைவு காட்டிற்குள் நடந்துசென்றது. அங்கே ஒரு காட்டெருமை நின்றிருந்தது. அதைக் கண்ட குரங்கு, “எருமையாரே, நான் இந்தக் காட்டிற்குப் புதிதாக வந்திருக்கிறேன். என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டது.

“உன்னை நான் ஏன் நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதெல்லாம் முடியாது, இங்கிருந்து ஓடிப் போய்விடு. இல்லையென்றால் உன்னை முட்டித் தள்ளிவிடுவேன்” என்று சிடுசிடுத்தது காட்டெருமை.

குரங்கு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியது.

சிறிது தொலைவு சென்றதும், வரிக்குதிரையைக் கண்டது குரங்கு. வரிக்குதிரையிடமும் அதே கேள்வியைக் கேட்க, வரிக்குதிரையும் குரங்கிடம், “அடேய் பொடியா, நீ யார்? ஒரு உதை விட்டேனென்றால் உன் உயிர் போய்விடும். ஓடிப் போய்விடு” என்றது.

இப்படியாகக் குரங்கு அந்தக் காட்டிலுள்ள காண்டாமிருகம், காட்டுப்பன்றி, ஆந்தை, கழுகு, மயில் உள்படப் பலரிடமும் சென்று, தன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டது. ஆனால், “உன்னை எனக்கு யாரென்றே தெரியாது, உன்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அனைத்தும் துரத்திவிட்டன.

அன்று இரவு குரங்கு ஒரு மரத்தின் மீது ஏறி இரவுப் பொழுதைக் கழித்தது. மறுநாள் காலை மெதுவாகக் கீழே இறங்கிவந்தது.

அது நேற்று பார்த்த அதே கரடி வந்துகொண்டிருந்தது. “கரடியாரே, இப்போது என்னை உங்கள் நண்பராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டது குரங்கு.

“குரங்கே, உன்னிடம் நேற்றே சொல்லிவிட்டேனே, எனக்கு உன்னை யாரென்றே தெரியாது என்று. ஏன் மறுபடியும் நண்பனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறாய்?”

“நண்பரே, என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? என்னை உங்களுக்குத் தெரியும். நேற்று நாம் இதே இடத்தில் சந்தித்துப் பேசினோம் அல்லவா? நீங்கள்கூட என்னை அடிக்க வந்தீர்களே. இன்றும் என்னைத் தெரியாது என்று எப்படிச் சொல்வீர்கள்?” என்று அப்பாவியாகக் கேட்டது குரங்கு.

குரங்கு சொன்னதைக் கேட்டு கரடிக்குச் சிரிப்பு வந்தது. “சரி, நாம் நண்பர்களாக இருக்கலாம். உன் நட்பை ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன நன்மை?” என்று கேட்டது கரடி.

“நண்பரே, நான் மரத்திலிருந்து தேனடையை எடுத்துத் தருகிறேன். உங்களுக்குத் தேனடை மிகவும் பிடிக்குமே!”

தேனடைக்கு ஆசைப்பட்ட கரடியும் குரங்குடன் நட்பாக இருக்கச் சம்மதித்துப் புறப்பட்டது. குரங்கும் கரடியும் வழியில் காட்டெருமையைச் சந்தித்தன.

“எருமையாரே, இன்றாவது என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்வீரா?” என்று கேட்டது குரங்கு.

“உன்னை எனக்குத் தெரியாது என்று நேற்றே சொல்லிவிட்டேனே. பிறகு ஏன் நட்புகொள்ள வந்திருக்கிறாய்?” என்று முறைத்தது காட்டெருமை.

“எருமையாரே, இன்றும் என்னைத் தெரியாது என்று எப்படிச் சொல்வீர்கள்? நாம் இருவரும் நேற்று சந்தித்துப் பேசினோமே. நீங்கள்கூட என்னை முட்ட வந்தீர்களே. இந்தக் காட்டிலேயே வசிக்கும் இந்தக் கரடியாரையும் உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். கரடியாரும் நானும் நண்பர்களாகி விட்டோம். நாம் மூன்று பேருமே இனி நண்பர்களாக இருக்கலாமே. மரத்தின் மீது ஏறி எங்கே பசுமையான புல்வெளி இருக்கிறதென்று உங்களுக்குச் சொல்கிறேன். அதிக அலைச்சல் இல்லாமல் பசியாறலாம்.”

இதுநாள் வரை யாரிடமும் பேசாமல் சலிப்புற்றிருந்த காட்டெருமைக்கும் அது சரியென்று தோன்ற, குரங்கின் நட்பை ஏற்றுக்கொண்டது.

குரங்கு, கரடி, காட்டெருமை ஆகிய மூன்றும் காட்டுக்குள் சென்றன. குரங்கு நேற்று சந்தித்த வரிக்குதிரை, காண்டா மிருகம், காட்டுப்பன்றி, ஆந்தை, கழுகு, மயில் ஆகியோரிடமும் பேச்சுக் கொடுத்து, எல்லோரையும் தன் நண்பர்களாக்கிக்கொண்டது.

“நண்பர்களே, இயற்கையில் எல்லாமே ஒன்றை மற்றொன்று சார்ந்தே வாழ்கின்றன. தனியாக நம்மால் வாழ்ந்துவிட்டுப் போக முடியாது. அதனால், பார்க்கும்போது புன்னகை செய்யலாம். நலம் விசாரிக்கலாம். ஆபத்து வரும்போது உதவலாம். ஓய்வு நேரத்தில் அரட்டையடிக்கலாம்.கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். அப்படி இருந்தால் அன்பும் மகிழ்ச்சியும் இந்தக் காட்டில் நிறைந்திருக்கும்” என்றது குரங்கு.

குரங்கு சொன்ன யோசனை மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ரொம்பவே பிடித்துவிட்டது. புத்தாண்டில் புதிய காடு பிறந்துவிட்டது! மகிழ்ச்சி களைகட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்