அடடே அறிவியல்: திருப்பி எழுதிய தகவல்

By அ.சுப்பையா பாண்டியன்

பள்ளிக்குச் செல்லும்போது சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாகப் போவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த வாகனங்களில் ‘AMBULANCE’ என்ற சொல் வலமிருந்து இடமாகத் திருப்பி எழுதப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இதைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? அதைத் தெரிந்துகொள்ளவும் ஒரு சோதனை இருக்கிறது. செய்து பார்ப்போமா?

தேவையான பொருள்கள்:

ஒரு குவி ஆடி (லென்ஸ்), முகம் பார்க்கப் பயன்படும் சமதள கண்ணாடி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, திரை.

சோதனை:

1. தாங்கியில் பொருத்தப்பட்ட ஒரு குவி ஆடியை மேசையின் ஓரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. மெழுகுவர்த்தியைத் தாங்கியில் உள்ள குவி ஆடி உயரத்திற்கு ஏற்ப ஏற்றிவையுங்கள்.

3. குவி ஆடிக்கு அருகில் மெழுகுவர்த்தியை நிறுத்திவையுங்கள்.

4. மெழுகுவர்த்திக்குப் பக்கத்தில் ஒரு திரையை வையுங்கள். மெழுகுவர்த்தியின் பிம்பத்தைத் திரையில் பிடிப்பதற்காகத் திரையை முன்னும் பின்னும் நகர்த்துங்கள். திரையை எங்கே வைத்தாலும் நிச்சயமாகப் பிம்பம் தெரியாது. குவி ஆடிக்குள் பார்க்கும்போது பிம்பத்தின் அளவு எப்படி இருக்கிறது எனப் பாருங்கள்.

5. இப்போது குவி ஆடியிலிருந்து மெழுகுவர்த்தியைச் சற்றுத் தொலைவில் வையுங்கள். இப்போது குவிஆடியில் மெழுகுவர்த்தியும், சுடரின் அளவைப் பாருங்கள். அது நேர்ப் பிம்பமா? தலைகீழ் பிம்பமா? எனப் பாருங்கள்.

6. மெழுகுவர்த்தியை மேசையின் ஓரத்திலும் குவி ஆடியை மறு ஓரத்திலும் வைத்து சோதனையைத் தொடருங்கள். மெழுகுவர்த்தி இருக்கும் எல்லா நிலைகளிலும் குவிஆடிக்குள் சுடரின் பிம்பம் நேராகவும் சிறியதாகவும் தெரியும். இதற்கு என்ன காரணம்?

நடப்பது என்ன?

குவி ஆடியின் முன் ஒரு பொருள் வைக்கப்படும்போது பொருளின் இருப்பிடத்தைப் பொறுத்து நேர்ப்பிம்பமா அல்லது தலைகீழ்பிம்பமா, மெய்ப்பிம்பமா அல்லது மாயபிம்பமா, பொருளைவிடச் சிறிய பிம்பமா அல்லது பெரிய பிம்பமா எனத் தெரிந்துகொள்ளலாம்.

1. குவிஆடி மையத்துக்கும் முக்கியக் குவியத்துக்கும் இடையில் பொருளை வைக்கும்போது சோதனையில் பிம்பத்தைத் திரையில் பிடிக்க முடியாத காரணத்தால் அது மாயபிம்பம் ஆகும். மேலும் மெழுகுவர்த்தியில் அளவைவிடச் சிறிய, நேரான பிம்பம் கிடைத்தது.

2. குவி ஆடியின் முக்கிய குவியத்துக்கும் வளைவு மையத்துக்கும் இடையே வைக்கும்போது நேரான, சிறிய மாயபிம்பம் கிடைக்கிறது.

3. வளைவு ஆரத்துக்கு வெளியே பொருளை வைக்கும்போதும் நேரான, சிறிய மாயபிம்பம் உருவாகிறது.

சோதனையில் குவி ஆடிக்கு அருகிலும் சற்று தள்ளியும், இறுதியாக மேசையின் ஓரத்தில் மெழுகுவர்த்தியை வைக்கும்போது மெழுகுவர்த்தியின் எல்லா நிலைகளிலும் அளவில் சிறிய நேரான மாயபிம்பத்தை குவி ஆடிக்குள் பார்க்க முடிகிறது.குவி ஆடியில் வரையப்பட்ட கதிர் படத்திலிருந்து பொருளை எங்கே வைத்தாலும் எப்போதும் அளவில் சிறிய, நேரான மாய பிம்பம் கிடைக்கிறது என்பது தெளிவாகிறதல்லவா?

சோதனையைத் தொடர்க

லென்ஸுக்குப் பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து சோதனை செய்து பாருங்களேன். அதாவது மெழுகுவர்த்தியைக் கண்ணாடிக்கு முன்னால் வெவ்வேறு இருப்பிடங்களில் வைக்கும்போது எத்தகைய பிம்பம் கிடைக்கிறது எனப் பாருங்கள். கண்ணாடியில் பொருளின் அளவு சம அளவிலும், நேரான மாய பிம்பத்திலும் பார்க்கலாம்.

பயன்பாடு

குவி ஆடிகள் மோட்டார் வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட எல்லா வாகனங்களிலும் பின்புல ஆடிகளாகப் பயன்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்குப் பக்கவாட்டில் பின்னால் வரக்கூடிய வாகனங்களைப் பார்த்து வண்டியைத் திருப்பவும், முன்பின் வண்டியை இயக்கவும் பின்புல ஆடிகள் பயன்படுகின்றன.

சோதனையில் பயன்படுத்திய குவி ஆடியை வாகனங்களில் உள்ள குவி ஆடியாகவும், மெழுகுவர்த்தியை வாகனத்துக்குப் பின்னால் உள்ள காட்சியாகவும் கற்பனை செய்து கொள்ளுங்களேன். குவி ஆடிக்கு முன்னால் வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி குவி ஆடிக்குள்ளே சிறிய, நேரான மாயப்பிம்பத்தை தோற்றுவித்தது அல்லவா? அதைப் போலவே வாகனங்களில் உள்ள பின்புல ஆடிக்குள்ளே வாகனத்துக்குப் பின்னால் உள்ள காட்சி (பொருள்) சிறிய நேரான, மாயப்பிம்பம் கொண்ட காட்சியைத் தோற்றுவிக்கும்.

இதனால், முன்னால் உள்ள காட்சியின் வாகன ஓட்டியின் கண்களைப் பார்த்தும் பின்புலக் காட்சியைக் குவி ஆடியினுள்ளே தோன்றும் பிம்பத்தைப் பார்த்தும் வாகனத்தை விபத்தில்லாமல் ஓட்டலாம். சமதள ஆடியிலும் குவி ஆடியிலும் சிறிய, நேரான மாய பிம்பங்களே தோன்றுகின்றன. குவி ஆடியில் தோன்றும் பிம்பக் காட்சியின் பரப்பு சமதள ஆடியில் தோன்றுவதைவிட அதிகம். இதனால் தான் குவி ஆடிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

அவசர ஊர்திகளில் AMBULANCE என்று எழுதப்பட்டிருந்தால் அது ஆடியில் எதிரொளிக்கப்பட்டு இடவலமாற்றம் கொண்ட எழுத்துகளாக தெரியும். இதனால் ஓட்டுநர் குழப்பமடைந்து வண்டியை இயக்குவதற்குச் சிரமப்படுவார். இதைத் தவிர்க்க எதிரொளிக்கப்பட்ட பிம்பம் நேராகத் தெரிய வேண்டுமானால் பொருளை இடவல மாற்றத்துடன் எழுதிவிட்டால் போதுமானது. ஓட்டுநர் உடனடியாகப் படித்து, புரிந்து அவசர ஊர்திக்கு வழிவிடுவார்.

- கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: aspandian59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்