சித்திரக்கதை: பயத்தை வென்ற பிளாக்கி

By ஏ.ஆர்.முருகேசன்

குஞ்சுக் காகங்களான ஆஷாவுக்கும் பிளாக்கிக்கும் சிறகுகள் முளைத்துவிட்டன. பறக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டன. முதலில் ஆஷா காகம் கூட்டை விட்டுத் தத்தித் தத்தி வெளியே வந்தது. இதைப் பார்த்த அம்மா காகம் பிரவுனி, ஆஷாவை உற்சாகப்படுத்தியது.

“பரவாயில்லையே! உடலைச் சமநிலைப்படுத்திக் கிளையில் அமர்ந்துவிட்டாயே! கவனத்துடன் பறந்தபோ பார்க்கலாம்!” என்றது.

அம்மா பேச்சைக் கேட்டு சட்டென்று சிறகை விரித்து ஆஷா பறந்து ஒரு மரத்தின் நுனிக் கிளையில் உட்கார்ந்தது. முதல்முறை பறந்ததால் உடலைச் சமநிலைக்குக் கொண்டுவர அது கஷ்டப்பட்டது. ஆனாலும், ‘நான் வானில் பறக்கப் போகிறேன்!’ என்ற எண்ணம் உற்சாகத்தைக் கொடுத்தது.

கிளையிலிருந்து மேலெழும்பி ஒரு வீட்டின் சுவரில் கால் உட்கார முயற்சித்தபோது தடுமாறிக் கீழே விழுந்தது.

அம்மா பிரவுனி பதறினாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஆஷா அருகே பறந்து வந்து, ‘முதல் முறை அப்படித்தான் இருக்கும். போகப் போகத் தரை இறங்கக் கற்றுக்கொள்வாய். ம்… பறந்து பழகு!” என்றது.

மீண்டும் எழுந்து ஆஷா பறந்தது. உயரமாகப் பறக்காமல் தாழ்வாகப் பறந்து தரையில் நிலைகொள்ள சீக்கிரமே பழகியது. அடுத்து, கொஞ்சம் உயரமாகப் பறந்தது. அப்புறம், இருப்பிடத்தைத் துல்லியமாக அடையாளம் கண்டு தன் கூடு இருக்கும் மரத்துக்கு ஆஷா வந்தடைந்தது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு குஞ்சுக் காகமான பிளாக்கிக்குச் சந்தேகம் வந்தது. ஆஷாவைப் போலப் பறக்க முடியுமா என நினைத்தது.

அப்போது அம்மா பிரவுனி அருகில் வந்து, “ஏய் பிளாக்கி! ஆஷாவைப் பார்த்தாயா? எவ்வளவு அழகா பறக்கிறது! நீயும் போ” என்றது.

“அம்மா! என்னால் பறக்க முடியுமா?” என்று கேட்டது பிளாக்கி.

“ஏன் முடியாது? உன்னோடு பிறந்தவள்தானே ஆஷா. அவள் பறக்கவில்லையா? எல்லோரும் பிறக்கும்போதே கற்றுக்கொண்டு பறப்பதில்லை. முயற்சி செய்துதான் கற்றுக்கொள்ள முடியும்” என்றது பிரவுனி.

“எனக்குதான் கறுப்பான கழுத்து இருக்கே. என்னால் எப்படிப் பறக்க முடியும்?”

“அதனால் என்ன? நிறத்துக்கும் பறப்பதற்கும் என்ன சம்பந்தம்? என்றது பிரவுனி.

“இருக்கிறதம்மா. ஒரு நாள், மரத்தடியில் இரண்டு மனிதர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டேன். அதில் ஒருவன் சிவப்பாக இருந்தான். இன்னொருவன் கறுப்பாக இருந்தான். சிவப்பாக இருந்தவன், கறுப்பாக இருந்தவனை அடிமை போல நடத்தினான். கறுப்பு நிறம் உள்ளவர்களை திறமையற்றவர்கள் என்ற தொனியில் அவன் பேசினானே” என்றது பிளாக்கி.

“ஓ… இதுதான் பிரச்சினையா? மனிதர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு உன்னை நீயே தாழ்வாக நினைத்திருக்கிறாய். உடனே நீ மரக்கிளைகளில் உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்லும் சாம்பல் நிறக் கழுத்துடைய காகங்களையும் உன்னையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறாய். உடனே கறுப்பு நிறக் கழுத்துடைய தன்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்துவிட்டாய்… சரிதானே?” என்று கேட்டது பிரவுனி.

“சரிதான் அம்மா. நான் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்களே!” என்று ஆச்சர்யப்பட்டது பிளாக்கி.

“மனிதர்கள் பேசுவதை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. தங்கள் சுயநலத்துக்காகச் சிலரை இப்படி மட்டம் தட்டுவார்கள்” என்றது பிரவுனி.

“இருந்தாலும் எனக்கு அந்தப் பேச்சு நினைவுக்கு வருதே. என்னால் பறக்க முடியுமா என்ற கேள்வி எழுந்து என்னை ஒன்றும் செய்யவிடாமல் செய்கிறதே!” என்று விரக்தியாகப் பேசியது பிளாக்கி.

“சரி, ஆஷாவின் கழுத்தும் கறுப்பாகத்தானே இருக்கு. அவள் பறக்கவில்லையா?” எனக் கேட்டது பிரவுனி. ஆனால், அதற்கு பிளாக்கியால் பதில் சொல்ல முடியவில்லை.

சலிப்படைந்த பிரவுனி, “இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உனக்கும் சேர்த்து நான் இரை தேடுவது?!” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.

மறு நாள்...

மழை வருவதற்கான அறிகுறி வானத்தில் தெரிந்தது. கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் மழை கொட்டியது. அன்று முழுவதும் பெய்த மழை, மறுநாளும் தொடர்ந்தது. ஜனங்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்தார்கள்.

இலை கிளைகளைத் தாண்டி கூட்டுக்குள்ளும் மழைத்துளிகள் விழுந்ததால் ஆஷா மறைவான இடத்துக்குப் பறந்துபோனது. அம்மா பிரவுனியும் கிளம்பத் தயாரானது.

“பிளாக்கி! இப்போதாவது உன் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் விட்டு விட்டுப் பறந்து வா!” என்றது பிரவுனி.

மழையில் நனைந்துகொண்டிருந்த பிளாக்கி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது. அதற்கு இன்னும் பயம் விலகவில்லை. சில நொடிகள் காத்திருந்த பிரவுனியும் வேறு இடத்துக்குப் பறந்து போனது.

அந்த மரத்திலிருந்து சிறிது தூரத்தில் ஏரி ஒன்று இருந்தது. அது, மழை நீராலும், காட்டாற்று வெள்ளத்தாலும் நிரம்பி வழிந்தது. அதிக நீரின் அழுத்தத்தால் ஏரியின் கரை உடைந்தது. வெள்ளம் ஊருக்குள் நுழைந்தது. வந்த வேகத்தில் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுபோனது வெள்ளம்.

பிளாக்கியின் கூடு இருந்த மரம் ரொம்ப வயதானது. அதனால் வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மரம் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த வேகத்தில் பிளாக்கியின் கூடு கிளை முறிந்து வெள்ளத்தில் வேகமாக அடித்துபோனது. பிளாக்கிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வெள்ள நீரில் நனைந்ததால் குளிரில் நடுங்கியது.

கிளை சென்ற வழியில் பெரிய பாறாங்கல் ஒன்று குறிக்கிட்டது. கிளை வந்த வேகத்தில் அந்தப் பாறாங்கல்லில் மோதினால் கூடு சுக்கு நூறாக உடைந்து விடும்.

‘அய்யோ, கூடு உடைந்துவிட்டால், தண்ணீரில் மூழ்கிவிடுவேனே?’ என்ற பயம் ஏற்பட்டதும், தன்னிச்சை செயலாக பிளாக்கி தன் சிறகுகளில் இருந்த நீரை ஒரு உதறு உதறியது. சட்டென்று தாவி வேகமாகச் சென்றுகொண்டிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. அடுத்து சட்டென்று சிறகை விரித்து வேகமாக மேலும் கீழுமாக அசைத்தது. அட, பிளாக்கி பறக்கிறது.

பறந்து சென்ற பிளாக்கி அருகிலிருந்த சிமெண்ட் மேடையில் உடலைச் சமநிலைப்படுத்தி இறங்கியது. ரொம்பத் தடுமாறியது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டது. வெள்ள நீர் அந்த சிமெண்ட் மேடையையும் மூழ்கடிக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்த பிளாக்கி, அங்கிருந்து பறந்து அருகிலிருந்த மரத்தின் கிளையில் சரியாக உட்கார்ந்தது.

பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துவிட்ட மகிழ்ச்சியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த பிளாக்கியின் அருகில் சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தது. அருகிலிருந்த மற்றொரு கிளையில் அம்மா பிரவுனி உட்கார்ந்திருந்தது.

“பிளாக்கி! இப்போது எப்படிப் பறந்தாய்?” என்று கேட்டது பிரவுனி.

“ஆமாம்… நான் எப்படிப் பறந்தேன்?! என்னை அறியாமலேயே பறந்துவிட்டேன் போல!” என்று வியப்படைந்தது பிளாக்கி.

“முயற்சி செய்யாமலேயே ‘என்னால் முடியாது’ என்று முடிவெடுத்துவிட்டாய். உன்னால் முடியும் என்று உனக்கு இயற்கையே சொல்லிகொடுத்துவிட்டது. உன் பறக்கும் திறமையைப் பயன்படுத்த நெருக்கடி கொடுத்திருக்கிறது போல” என்ற பிரவுனி சிறிது இடைவெளி விட்டு மீண்டும், “எல்லோரிடமும் திறமை இருக்கிறது. அதை வெளிக்காட்டத் தன்னம்பிக்கையற்ற மனம்தான் தடையாக உள்ளது!” என்றது..

“உண்மைதான் அம்மா…” என்று பிளாக்கி ஆமோதித்தபோது மழையும் விட்டிருந்தது. பிளாக்கி மீண்டும் தன் சிறகை விரித்துத் தயக்கமும் பயமுமில்லாமல் ஆனந்தமாகக் காற்றில் ஜிவ்வென்று பறக்க ஆரம்பித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்