குத்துச்சண்டை வளையத்துக்குள் நான் தனியாக நின்று கொண்டிருக்கிறேன். இல்லை, இல்லை ஒரு பந்துபோல் எழும்பி, எழும்பிக் குதித்துக்கொண்டிருக்கிறேன். இன்று என் வளையத்துக்குள் யார் நுழையப்போகிறார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் அவர் பாவம்தான். அவரால் இங்கிருந்து தனியாக நடந்து போக முடியாது. யாராவது கைத்தாங்கலாக அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒருமுறை வாட்டம் சாட்டமாக ஒரு பெரிய மனிதர் என் முன்பு வந்து நின்றார். அவரைச் சில விநாடிகள் மேலும் கீழுமாகப் பார்த்தேன். ‘என்ன, முகமது அலி பயந்துவிட்டாயா?’ என்றார் அவர். ‘இல்லை, உங்கள் உயரம் என்னவென்று தெரிந்தால்தான், நீங்கள் விழும்போது தள்ளி நிற்க முடியும்’ என்றேன். சொன்னதுபோல் சில நிமிடங்களில் அவர் சரிந்து விழுந்தார். முன்பே கணக்கு போட்டு வைத்திருந்ததால் நான் கவனமாகத் தள்ளி நின்றுகொண்டேன். ஐயோ பாவம் இல்லையா என் கால்?
நடப்பது விளையாட்டு. நான், குத்துச்சண்டை வீரன். நான் சுருண்டு விழ விரும்பவில்லை. தரையில் அரை மயக்கத்தோடு கிடக்க விரும்பவில்லை. என்னை வெளியில் இழுத்துவரும் பொறுப்பை என் நண்பர்களுக்கு ஒருபோதும் அளிக்க விருப்பமில்லை. என் எதிர்பார்ப்பு எளிமையானது. எப்படி உள்ளே சென்றேனோ, அப்படி வெளியில் வர வேண்டும்.
வெளியில் வந்தவுடன் என் கையுறைகளை அகற்றிவிடுவேன். வேறொரு முகமது அலியாக மாறிவிடுவேன். வளையத்துக்குள் நான் சந்தித்தவர்கள் எதிரில் வந்தால், கையைப் பிடித்துக் குலுக்குவேன். தேநீர் அருந்துவோமா என்று அழைப்பேன். அமர்ந்து கதை பேசுவோம். நாளை அதே மனிதரோடு வளையத்துக்குள் நான் நுழையலாம். அந்தக் கணம் நான் அவரை ஒரு குத்துவிடலாம். அது வேறு முகமது அலி.
எனக்கு இந்த அமெரிக்காவில் புரியாததெல்லாம் ஒன்றுதான். இங்குள்ள வெள்ளையர்கள் என்ன மாதிரியான விளையாட்டை விளையாடுகிறார்கள்? நான் ஏன் இதைக் கேட்கிறேன் என்று சொன்னால் உங்களுக்குப் புரியும். ஒருமுறை ரோமிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தேன். உற்சாகத்தோடு உணவகத்துக்குள் நுழைந்தபோது என்னைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். அது எல்லோருக்குமான உணவகம் இல்லையாம். வெள்ளையர்களுக்கு மட்டும்தான் அனுமதியாம். நீங்கள் ஏன் உங்களுக்கான இடத்துக்குப் போய்ச் சாப்பிடக் கூடாது என்று வெளியில் தள்ளி, வீதியில் நிறுத்தி, கதவைச் சாத்திக்கொண்டார்கள்.
ஒரே நேரத்தில் நூறு கரங்கள் என் இதயத்தில் குத்தியதுபோல் இருந்தது. கையுறை அணியாத கரங்களிடமிருந்து நான் பெற்ற முதல் குத்து. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முதல் முறையாகத் திகைத்து நின்றேன். இதயத்தில் குத்து விழுந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்லிக்கொடுத்ததில்லை. எனவே அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.
என்ன மாதிரியான விளையாட்டு இது? யார் கண்டுபிடித்தார்கள் இதை? அவர்கள் மட்டும் வாழும் வீடுகளும் அவர்கள் மட்டும் அமர்ந்து பேசி மகிழும் பூங்காக்களும் அவர்கள் மட்டும் பயணம் செய்யும் பேருந்துகளும், அவர்கள் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடங்களும் ஏன் இருக்க வேண்டும் இங்கே? அமெரிக்கா என்பது வெள்ளையர்களின் வளையமா? என்னைப் போல் கறுப்புத் தோல் கொண்ட யாரும் உள்ளே நுழையக் கூடாதா? மீறி நுழைகிறவர்களைப் பிடித்துத் தள்ளலாமா? தள்ளினால், எதுவுமே நடக்காததுபோல் வீட்டுக்குப் போய்விடவேண்டுமா?
அமெரிக்கா உங்களுக்கு மட்டுமேயான வளையம் என்று நீங்கள் நினைத்தால், அதற்குள் நான் நுழைவேன். கையுறை அணிந்துகொண்டு உங்களை வரவேற்பேன். உங்கள் கண்களை நேருக்கு நேர் பார்ப்பேன். உங்கள் எடையை, உங்கள் உயரத்தை அளந்துகொள்வேன். என்ன முகமது அலி, பயந்துவிட்டாயா என்று நீங்கள் கேட்கும்போது நான் திடமாகச் சொல்வேன்.
‘நீங்கள் எவ்வளவு உயரமாக வளர்ந்து நின்றாலும், எவ்வளவு பலமிக்கவராக இருந்தாலும் விழுந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால், உங்கள் விளையாட்டு பிழையானது. சட்டத்துக்கு விரோதமானது. மனிதத்தன்மையற்றது. எனது கரம் உங்கள் முகத்தை நெருங்குவதை நீங்கள் காண்பீர்கள். ஒரே ஒரு முகமது அலியின் குத்து என்னை என்ன செய்துவிட முடியும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே இடிபோல் என் கரம் உங்களைத் தாக்கும். அதை என் கரம் என்று நீங்கள் நினைத்தால் தவறு. உங்கள் முகத்தில் குத்தும் கரம் என் கறுப்புச் சகோதரர்களின் கரம். என் கறுப்புச் சகோதரிகளின் கரம்.
நீங்கள் சரிந்து விழுவதை நாங்கள் பார்ப்போம். உங்கள் வளையம் உடைந்து சிதறுவதை நாங்கள் பார்ப்போம். அமெரிக்கா எல்லோருக்குமானதாக மாறுவதை, உலகம் எல்லோருக்குமாக மாறுவதை நாங்கள் பார்ப்போம். விதிமுறை இல்லாத உங்கள் விளையாட்டை நொறுக்கி முடித்த பிறகு என் கையுறையை நான் அகற்றுவேன்.
கீழே விழுந்து கிடக்கும் உங்களைக் கைகொடுத்து மேலே தூக்குவேன். தேநீர் அருந்துவோமா என்று உங்களிடம் கேட்பேன். அதே உணவகத்துக்கு உங்களை அழைத்துச் செல்வேன். செலவு என்னுடையது.
இந்த விளையாட்டுக்கு நீங்கள் தயாரா?’
(அமெரிக்கரான முகமது அலி உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago