உலகின் பழைய சட்டை!

By எஸ். சுஜாதா

எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொல்லியல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கே கந்தலான V கழுத்து லினன் சட்டை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம்!

1913-ம் ஆண்டு டர்கன் என்ற இடத்திலிருந்த கல்லறைகளைத் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது இந்தச் சட்டை கிடைத்தது. டர்கன் கல்லறைகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தினரைச் சேர்ந்தவை. கல்லறைக்குள் நுழைந்தபோது ஏராளமான கலைப் பொருட்கள் இருந்தன. இந்த லினன் துணி மண்ணோடு மண்ணாகத் தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். எதிர்கால ஆய்வுக்காக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். பிறகு மறந்தும் போய்விட்டார்கள்.

65 ஆண்டுகளுக்குப் பிறகு ஷெய்லா லாண்டி என்ற துணி ஆராய்ச்சியாளர், இந்தச் சட்டையில் உள்ள களிமண்ணை நீக்கியபோது ஆச்சரியத்தில் மூழ்கினார். V வடிவ கழுத்து, மடிப்புகள் வைத்து தைத்த விதத்தைப் பார்த்து அவரது கண்கள் விரிந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்லறையிலிருந்து எடுத்த சட்டையாக அது தெரியவில்லை. கந்தலாக இருந்தாலும் இப்போது பயன்படுத்தும் சட்டை போலவே இருந்தது! சட்டை 3 பாகங்களாகக் கத்தியால் வெட்டப்பட்டு, கையால் தைக்கப்பட்டிருந்தது.

வெளிர் சாம்பல் வண்ண லினன் துணியாக இருந்தது. சட்டை முழுவதுமாக இல்லாததால், இது ஆண்கள் அணியும் சட்டையா, பெண்கள் அணியும் சட்டையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சட்டையின் வடிவமைப்பைப் பார்க்கும்போது இன்றைய இளம் பெண்ணுக்குப் பொருந்துவதாக உள்ளது!

40 ஆண்டுகளுக்கு முன் துணியின் வயதைக் கண்டுபிடிக்கக்கூடிய ரேடியோகார்பன் இல்லை. டர்கன் கல்லறையின் வயது கி.மு.3100. அதனால் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சட்டையாக இருக்கலாம் என்று கணித்தனர்.

பீட்ரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் ஆலிஸ் ஸ்டீவன்சன், “இதுவரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான துணிகள்தான் கிடைத்திருக்கின்றன. அதுவும் தாவர நார்கள், விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட துணிகள்தான். உடலைச் சுற்றிக்கொள்ளும் துணியாக மட்டுமே அவை இருந்தன. ஆனால் இந்தச் சட்டை லினன் துணியில் அழகாக வெட்டப்பட்டு, கைகளால் தைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலத் துணி தைக்கப்பட்டது போலவே இருக்கிறது!’’ என்று சொன்னார்.

2015-ம் ஆண்டு நவீன ரேடியோ கார்பன் பரிசோதனைக்கு இந்தத் துணியிலிருந்து சிறிய பகுதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி துணியின் வயது 95 சதவீதம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. 5,100 முதல் 5,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள். அந்தக் கால எகிப்தியர்கள் நீண்ட அங்கி அணிந்திருந்ததால் இது சட்டையாக இல்லாமல், நீண்ட அங்கியின் மேல் பகுதியாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

உலகின் மிகப் பழமையான கம்பளியால் செய்த கால் சட்டை, இன்றைய சீனாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாடோடி தலைவர் ஒருவரின் கல்லறையில் இருந்து இந்தக் கால் சட்டை எடுக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் கம்பளியில் டிசைன்கள் போடப்பட்டு மிக அழகாக இருக்கிறது!

இவற்றை எல்லாம் பார்க்கும்போது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இன்றைய நாகரிகத்துடன் போட்டி போடும் அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறதல்லவா? எந்த வித இயந்திரங்களும் இல்லாமல், துணிகளை நெய்து, வெட்டி, கைகளால் அழகான ஆடைகளை வடிவமைத்திருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் திறமைகளை என்னவென்று சொல்வது?!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்