ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லி விடுகிறேன். என் வீட்டுக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்கள் உறவினர்களை அழைத்து வாருங்கள். நண்பர்களை அழைத்து வாருங்கள். குழந்தை, குட்டிகளோடு வாருங்கள். நாய், பூனைக்குட்டிகளை அழைத்துச் சென்றால் பெர்னாட்ஷா கோபித்துக் கொள்வாரோ என்று யோசிக்காதீர்கள். நாய், பூனை, மனிதன் எல்லோரையும் நேசிப்பவன் நான்.
இரவு ஆகிவிட்டதே, இப்போது கதவைத் தட்டினால் தொந்தரவாக இருக்குமா? மழை நேரத்தில் போகலாமா? அதிகாலை மூன்று மணிக்கு ஒருவர் வீட்டுக்குப் போனால் நன்றாகவா இருக்கும் என்றெல்லாம் தயங்கவே தயங்காதீர்கள். என் வீட்டுக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். ஒருவேளை பூச்சி பொட்டுக்குப் பயந்து சாத்தியிருந்தாலும் தயங்காமல் தட்டுங்கள். யாராவது வந்து கதவைத் திறப்பார்கள். உங்களை இன்முகத்தோடு வரவேற்பார்கள்.
உங்கள் வீடுபோல் நினைத்து உங்கள் விருப்பப்படி இருந்துகொள்ளலாம். உங்களுக்கும் உங்களோடு வருபவர்களுக்கும் எல்லா வசதிகளும் செய்து தரப்படும். நன்றாகச் சாப்பிடுங்கள். கதை பேசுங்கள். சத்தம் போட்டுச் சிரித்து மகிழுங்கள். வரவேற்பறையில் உள்ள சோபாவில் படுத்து உருளுங்கள். பாடுங்கள், ஆடுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களிடம் நான் மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். என்னைச் சந்திக்க வேண்டும் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
நான் ஓர் எழுத்தாளன். என்னைச் சந்திக்க வேண்டும் என்றால் நான் எழுதிய ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கி, திறந்து பாருங்கள். ஒவ்வொரு வரியிலும் நான் தெரிவேன். நேரில் வந்து என்னைப் பார்த்து என்ன ஆகிவிடப் போகிறது? ஏற்கெனவே ஆடிக்கொண்டிருக்கும் என் கையைப் பிடித்துக் குலுக்குவதன் மூலம் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்? கரடிபோல் முறைக்கும் என் பக்கத்தில் நின்று, என்னை இடித்துக்கொண்டு படம் எடுத்துக்கொள்வதால் யாருக்கு, என்ன பலன் வந்துவிடப் போகிறது?
உங்களுக்கு என் கதையோ கட்டுரையோ நாடகமோ பிடித்திருந்தால் நாலு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். அடுத்த பத்தாண்டுக்குள் நிச்சயம் நேரம் ஒதுக்கிப் படித்துவிடுவேன். அதற்கும் அடுத்த பத்தாண்டுக்குள் விரிவாக ஒரு வரி பதிலும் போட்டுவிடுவேன். என் எழுத்து பிடிக்கவில்லையா? ஏன் பிடிக்கவில்லை என்று விளக்கி எழுதுங்கள். எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள். நான் எப்படியும் படிக்கப்போவதில்லை. மாற்றுக் கருத்துகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்!
என் வாசகர்களை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை என் வீடே சொல்லிவிடும். எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம் என்று சொன்னேனே, அந்த வீடு அல்ல. அந்த வீட்டுக்குப் பின்புறம், மறைவான இடத்தில் நான் எனக்கென்று ஒரு சின்ன மர வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். சுமார் 60 அடிகள் இருக்கும். சின்ன நாற்காலி, பொம்மை மேஜை. எழுதுவதற்குச் சில பேனாக்கள். ஒரு மை கூடு. ஒரு சின்னக் கட்டில். அவசரம் என்றால் அழைப்பதற்கு ஒரு டெலிபோன். (அதன் எண் உங்களுக்குக் கிடைக்காது). இவ்வளவுதான் இருக்கும் என் மர வீட்டுக்குள்.
தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கரடி குகைபோல் இருக்கும். தப்பித்தவறி குழந்தைகள் நெருங்கிவிட்டால் கரடிபோல் அன்போடு உறுமி அவர்களை ஓட வைப்பேன். ஒரு சிலருக்குத் தவிர வேறு யாருக்கும் என் பொந்து தெரியாது.
பெர்னாட்ஷா இருக்கிறாரா என்று யார் தேடி வந்தாலும், அடடா, நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்தால் இன்று அண்டார்டிகாவைச் சுற்றிப் பார்க்கப் போகாமல் இருந்திருப்பாரே, நீங்கள் ஏன் கடிதம் எழுதிவிட்டு வரக் கூடாது என்று என் வீட்டில் இருப்பவர்கள் வருந்துவார்கள். ஒருவேளை நான்தான் எழுதினேனே என்று அவர் சொன்னால், அடடா, அந்தக் கடிதம் மட்டும் எப்படி வராமல் போய்விட்டது என்று இன்னமும் வருந்துவார்கள்.
மதிப்புக்குரிய பெர்னாட்ஷா தனது அடுத்த நாடகம் குறித்து ஆய்வு செய்ய அமேசான் காட்டுக்குப் போயிருக்கிறார். திரும்பி வருவதற்கு 13 மாதங்கள் ஆகும் என்று நானே சிலரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறேன். இப்போதுதான் கிளம்பினார், நோபல் பரிசு வாங்கப் போனவர் அப்படியே நார்வேயில் குடியேறிவிட்டார். நோபல் பரிசை லண்டனில் தொலைத்துவிட்டார். அதைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி வாசகர்களைத் திருப்பி அனுப்புவேன். என் கற்பனை வளம் என் தாடியோடு போட்டிப்போட்டுக்கொண்டு வளர்வது இப்படித்தான்.
என் மர வீட்டுக்கு அடியில் சக்கரங்கள் உள்ளன. வெயிலோ விருந்தினரோ அதிகமானால் வீட்டை நகர்த்தி, நகர்த்தி வேறு இடத்துக்குப் போய்விடுவேன். விருந்தோம்பலில் என்னை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று நானே பலமுறை பல கூட்டங்களில் மனம் திறந்து சொல்லியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் ஒரு பெயர்பெற்ற எழுத்தாளராக எப்படி மாறினீர்கள் என்று கேட்கும் ஒவ்வொருவரிடமும் நான் சொல்வது ஒன்றுதான். அதை நான் சொன்னால் உங்களுக்குப் புரியாது. என் வீட்டுக்கு வாருங்கள். நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்!
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago