யூரி ககாரின், உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ஏதோ வீட்டைவிட்டுக் கிளம்புவதுபோல் நீங்கள் பூமியை விட்டுக் கிளம்பிப் போய்விட்டீர்களாமே? நிஜமாகவா? எப்படி இருந்தது விண்வெளி? வேற்றுகிரகவாசிகள் யாரையாவது கண்டீர்களா? வானத்தில் இருந்து குனிந்து நம் பூமியைப் பார்த்தீர்களா? எப்படி இருந்தது பூமி? என்னவெல்லாம் கண்டீர்கள் அங்கிருந்து? பூமியில் என்னவெல்லாம் தெரிந்தது? சொல்லுங்களேன்!
என்னைச் சூழ்ந்துகொண்டு கடகடவென்று கேள்விகளை வீசிய குட்டிக் குழந்தைகள் முன்பு அமர்ந்துகொண்டேன். வியப்பில் விரிந்திருந்த அவர்களது கண்களைப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினேன்.
சின்ன வயதிலிருந்தே எனக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை. தட்டான்பூச்சிபோல், குயில்போல், கழுகுபோல் வானில் பறந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டுகொண்டே இருப்பேன். வளர்ந்து என்னவாகப் போகிறாய் ககாரின் என்று ஒவ்வோர் ஆண்டும் புதிய, புதிய ஆசிரியர்கள் வந்து என்னிடம் கேட்பார்கள். என் பதில் எப்போதும் ஒன்றுதான். பறவையாக மாற வேண்டும்! வகுப்பறையில் எல்லோரும் கடகடவென்று சிரிப்பார்கள்.
பறவையாக மாற முடியாது என்பதைக் கொஞ்சம் வளர்ந்ததும் புரிந்துகொண்டேன். என் கனவையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன். அதன்பின் விசாரித்த அனைவரிடமும் சொன்னேன். நான் விமானியாக மாற விரும்புகிறேன்!
மெல்ல, மெல்ல என் கனவு நிறைவேற ஆரம்பித்தது. விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன். அறிவியலும் கணிதமும் எனக்கு எப்போதும் பிடிக்கும் என்பதால் இரண்டும் இரண்டு இறக்கைகளாக மாறி உதவின. நான் பறக்கத் தொடங்கினேன். பறவைகளுக்கு இணையாகப் பறந்தேன். பறவைகளைக் கடந்து மேலே, மேலே உயர்ந்தேன். மேகங்களோடு மேகமாக மிதந்தேன். மழையை அது தோன்றும் இடத்தில் இருந்து பார்த்தேன். மின்னலை என் விமானத்தின் கண்ணாடி வழியே அருகில் பார்த்தேன்.
நீ பறப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. என் அகலத்தை, என் உயரத்தை நீ கற்பனைகூடச் செய்ய முடியாது என்றது வானம். என் கனவை இன்னொரு முறை மாற்றிக்கொண்டேன். நாடு விட்டு நாடு பறந்துகொண்டிருந்த நான், விண்வெளிப் பயணத்துக்கான ஆராய்ச்சிகளில் இணைந்துகொண்டேன். சொன்னபடியே விமானி ஆகிவிட்டாய்; மகிழ்ச்சிதானே என்றார்கள் நண்பர்கள். மகிழ்ச்சிதான். ஆனால், இன்னும் பறக்க வேண்டும். விண்வெளியில் சுற்ற வேண்டும் என்றேன்.
ஒரு நாள் அழைப்பு வந்தது. விண்கலம் என்னை ஏந்திக்கொண்டது. பலமுறை பறந்தவன்தான். விமானத்தைப் பொம்மையாக நினைத்து குலுங்கி, வட்டமடித்து, சுழன்று விளையாடியவன்தான். ஆனால், இது முற்றிலும் புதிய, ஆபத்தான விளையாட்டு. எந்த மனிதனும் அதுவரை விளையாடாதது. தயங்கினாயா என்றால் ஆம், தயங்கினேன். பயந்தாயா என்றால் ஆம், பயந்தேன். ஆனால், என் பயமும் தயக்கமும் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை.
புதிய மனிதனாக, புதிய உடுப்பில், புதிய திசை நோக்கி சீறிப் பாய்ந்தேன். பூமியை விட்டு விலகி, மேலே, மேலே, மேலே உயர்ந்தேன். மலைகளும் பள்ளத்தாக்குகளும் நதிகளும் வனங்களும் மறைந்துபோயின. நாடுகளும் கண்டங்களும் தொலைந்துபோயின. இது என் நாடு, அது உன் நாடு என்று முட்டி, மோதி, சண்டையிட்டு நிலத்தில் நாம் போட்டு வைத்திருந்த கோடுகள் எல்லாம் இருந்த இடமே தெரியாமல் அழிந்துபோயின. யானை, புலி, சிங்கம், கரடி, மனிதன், புழு, பூச்சி என எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை.
ஒரே ஒரு பந்து மட்டும் கீழே இருந்தது. ஒரே ஒரு பூமி. எல்லாக் கண்டங்களும் எல்லா நாடுகளும் எல்லா நதிகளும் எல்லாக் காடுகளும் அதற்குள் அடங்கியிருந்தன. கறுப்பு, மஞ்சள், பழுப்பு, வெள்ளை என்று எல்லா வண்ண மனிதர்களும் அதற்குள் அடங்கியிருந்தனர். தூங்கும் பூனைபோல் அவ்வளவு அழகாக, அமைதியாகச் சுருண்டிருந்தது அந்தப் பந்து.
என்னைச் சுற்றி எந்த உயிரும் இல்லை. எந்த அசைவும் இல்லை. எந்த ஒலியும் இல்லை. நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம். வேறு யாருமில்லை என்று சொல்வதுபோல் இருந்தது வானம். 1 மணி நேரம், 48 நிமிடங்கள். விண்வெளியில் நான் வாழ்ந்தது அவ்வளவுதான்! அந்த 1 மணி நேரமும் அந்த 48 நிமிடங்களும் என் மனம் ஏங்கித் தவித்தது ஒன்றுக்குத்தான்.
என் பந்து. நான் எப்போது அங்கே திரும்புவேன்? எப்போது என் மக்களை, என் குழந்தைகளை, என் பறவைகளை, என் சோவியத் யூனியனை மீண்டும் பார்ப்பேன்? புழுதியாக இருந்தாலும் அது என் பூமி. ஆயிரம் சண்டை போட்டுக்கொண்டாலும் அது என் உலகம். ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் அவர்கள் என் மக்கள்.
தரைக்கு இறங்கி வந்தபோது ஒரு புதிய கனவு எனக்குள் வளர்ந்திருந்தது. நான் மேலிருந்து கண்ட அந்த அழகிய பூமியை உருவாக்க வேண்டும். போர் இல்லாத, பிரிவினை இல்லாத, அமைதியான, அழகான ஒரே ஒரு பூமி. ஒரே வானம்போல் ஒரே பூமி. என் எல்லாக் கனவுகளைப் போல் இதுவும் ஒரு நாள் நிறைவேறும். நீங்கள் நிறைவேற்றுவீர்கள்தானே?
(யூரி ககாரின் - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். பூமியை வலம் வந்த முதல் மனிதர்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு : marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago