தொட்டுப் பார்க்கலாம், படித்து ரசிக்கலாம்

By பிருந்தா சீனிவாசன்

ஒரு கதைப் புத்தகம் எப்படி இருக்கும்? கதையும், ஆங்காங்கே சித்திரங்களும் இருக்கும். படக் கதைப் புத்தகமாக இருந்தால் புத்தகம் முழுக்கப் படங்கள், வசனங்களுடன் இருக்கும். ஆனால் 1964-ம் ஆண்டு ஃபிரான்ஸில் வெளிவந்த LOVE என்ற புத்தகம் கொஞ்சம் வித்தியாசமானது. வெளிவந்ததுமே உலகம் முழுவதும் 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்குமே புதிய அனுபவத்தைத் தந்தது இந்தப் புத்தகம். அனைத்துக்கும் காரணம், யாரும் யோசித்துப் பார்க்காத அற்புதமான வடிவமைப்புதான்.

கதையை எழுதியவர் லோவெல். வடிவமைப்பும் படங்களும் கியான் பெர்ட்டோ வன்னி. புத்தகத்தை வாசிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அதே அளவு அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் பார்க்கும்போதும் ஏற்படுகிறது. ஒவ்வொரு பக்கமும், பார்த்துப் பார்த்து அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தின் உள்ளே படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. காகிதத்தை வெட்டியும், குடைந்தும் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதையின் வரிகள் கையால் எழுதப்பட்டிருக்கின்றன.

சிறுமியின் தனிமை

பெற்றோர் இல்லாமல் தனியாக வளரும் சிறுமியைப் பற்றிய கதை இது. எளிமையான கதை. ஆனால் மிகவும் உணர்வுபூர்வமானது. ஒரு ஊரில் ஒரு சிறுமி இருந்தாள். எல்லோரைப் போல அவளுக்கும் பெற்றோர் இருந்தனர். அவளுக்கு ஒன்பது வயதானபோது, அவர்கள் இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். பார்த்தவுடனே யாரையும் ஈர்த்துவிடுகிறவள் இல்லை அவள். யாருமே அவளைக் கொஞ்சியதும் இல்லை. அவளுக்கு உறவு என்று யாருமே இல்லை. அதனால் அநாதை இல்லத்தைச் சேர்ந்த ஒருவர், அவளை அழைத்துச் சென்றுவிட்டார்.

அந்த அநாதை இல்லத்தில் அவளைப் போலவே நிறைய குழந்தைகள் இருந்தனர். ஆனாலும், அவள் அங்கே தனியாகவே இருந்தாள். அவள் மீது யாருமே தனி கவனம் செலுத்தவில்லை. எப்போதும் தனியாகவே விளையாடினாள். மற்ற குழந்தைகள் அவளை வித்தியாசமானவளாக நினைத்து ஒதுக்கினார்கள்.

இயற்கையே நண்பர்கள்

பார்க்கிறவர்களைப் பயமுறுத்துகிற மாதிரி பெரிய கண்கள் அவளுக்கு. அதை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவளுக்கு அந்த அநாதை இல்லத்தைச் சுற்றி நடந்துகொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும். கீழே கிடக்கும் ஒரு இலையை எடுப்பதற்காகவோ, பறந்துகொண்டிருக்கும் ஒரு பறவையை ரசிப்பதற்காகவோ, நடந்து கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவோ அவள் நிற்பாள். மற்றபடி தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பாள். சுற்றியிருக்கும் பச்சை மரங்களும், சூரியஒளி பிரகாசிக்கும் காலை வேளையும் அவளுக்குப் பிடித்தமான நண்பர்கள்.

இயற்கை நண்பர்களுடனும் தனது சிந்தனைகளோடும் அவள் தனியாகவே இருப்பாள். சமயங்களில் அவள் செய்கிற செயல்கள் நல்லபடியாக இருக்காது. எதிரில் இருக்கும் சிறுமி மீது எச்சிலைத் துப்புவாள், சாப்பாட்டு மேஜையில் ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிட மாட்டாள். அந்த இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவளைப் பிடிக்கவே இல்லை. அவளைப் பற்றி எப்போதும் ஏதாவது ஒரு புகாரை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மற்ற குழந்தைகள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று, அந்த இல்லத்தின் இயக்குநர் நம்பினார். அதனால் அவளை வேறு ஒரு இல்லத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த இயக்குநர் நினைத்தார்.

நேசத்தைச் சொல்லும் கடிதம்

ஒரு நாள் அநாதை இல்லத்தின் வாசல் அருகில் இருந்த மரத்தின் பொந்தில் அவள் ஒரு கடிதத்தை வைப்பதை, அந்த இல்லத்தின் பணியாளர் ஒருவர் பார்த்துவிட்டார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து இயக்குநரிடம் கொடுத்தார். இயக்குநருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்தக் கடிதத்தை வைத்தே அவளை அந்த இல்லத்தை விட்டு வெளியேற்றிவிடலாம் என்று நினைத்தார். காரணம் அங்கிருக்கும் யாரும், யாருக்கும் கடிதம் எழுதக் கூடாது என்பது இல்லத்தின் விதி.

இயக்குநர் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது
‘யார் இதைப் படிக்கிறீர்களோ,உங்களை நான் நேசிக்கிறேன்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

59 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்