“இன்னிக்கி என்னப்பா விளையாடலாம்?” ஆர்வமாகக் கேட்டாள் எழிலரசி.
“ராஜா ராணி விளையாட்டு விளையாடலாம்ப்பா?” என்றான் சுந்தர்.
“வேண்டாம்ப்பா, கேரம் போர்டு ஆடலாம்!” சொல்லிவிட்டு வீட்டுக்குள் போன கவின்மொழி, கேரம் போர்டைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.
“அய்… நானும் கேரம் போர்டுக்கு வர்றேங்க்கா!” என்றபடி ஓடி வந்து உட்கார்ந்துகொண்டான் பக்கத்து வீட்டு பஷீர். நான்காம் வகுப்பு படிக்கும் குட்டிப் பையன்.
எழிலரசி, சுந்தர், கவின்மொழி மூவரும் நண்பர்கள். அருகேயிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். கவின்மொழி ஏழாம் வகுப்புவரை தனது பாட்டி ஊரில் படித்தாள். இப்போதுதான் பிறந்த ஊருக்கே படிக்க வந்திருக்கிறாள்.
பள்ளி விடுமுறை விட்டால் போதும்; எழிலரசி வீட்டுக்கு வந்து விடுவாள் கவின்மொழி. எழிலரசி வீட்டின் பக்கத்திலேயே சுந்தர் வீடும் இருப்பதால் அவனும் சேர்ந்துகொள்வான். மூவரும் ஒன்று சேர்ந்துவிட்டால், விளையாடுவது, படிப்பது என உற்சாகம் களைகட்டிவிடும்.
கவின்மொழியின் வீடு சற்று தூரத்தில் இருந்தது. அதனால், அவள் சைக்கிளில் வந்துவிடுவாள்.
அன்று எழிலரசியின் அப்பா, அம்மா இருவருமே பக்கத்து ஊரில் நடக்கும் திருமணம் ஒன்றுக்குப் போயிருந்தார்கள்.
சுந்தரையும் எழிலரசியையும் தன் வீட்டுக்கு வந்துவிடுமாறு முன்னரே கூப்பிட்டிருந்தாள் கவின்மொழி. சுந்தரின் சைக்கிளில் எழிலரசி ஏறிக்கொள்ள, இருவரும் கவின்மொழி வீட்டுக்கு வந்தார்கள்.
இருவரையும் மிகுந்த அன்போடு வரவேற்றாள் கவின்மொழி.
பஷீரையும் விளையாட்டில் மூவரும் சேர்த்துக்கொண்டனர். நால்வரும் திண்ணையில் உட்கார்ந்து கேரம் போர்டு விளையாட ஆரம்பித்தனர்.
கவின்மொழியின் அம்மா வீட்டினுள்ளே ஏதோ வேலை யாய் இருந்தார். அவளது அப்பா நடுக்கூடத்தில் உட்கார்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார். அவளது அண்ணன் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.
அம்மா கவின்மொழியைக் கூப்பிட்டு, “இந்தா, உன் பிரண்ட்ஸோட சாப்பிடு...” என்று அவித்த வள்ளிக்கிழங்குகளைக் கொடுத்தனுப்பினார்.
காய்கறியை நறுக்கி முடித்து எழுந்தார் அப்பா. உள்ளே போய் அழுக்குத் துணிகளை அள்ளி வந்தார். அதை வாளியில் போட்டு, துவைப்பதற்குத் தண்ணீரில் ஊற வைத்தார்.
வீட்டைப் பெருக்கி முடித்த அண்ணன், “தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊத்திட்டு வர்றேம்ப்பா..!” என்று சொல்லிவிட்டுப் போனான்.
“எங்க கவின், உங்க அக்காவைக் காணோம்?” என்று எழிலரசி கேட்க,
“அக்கா மாடியில படிச்சிக்கிட்டு இருக்காங்க..!” என்றாள் கவின்மொழி.
வீட்டில் நடப்பதையெல்லாம் விளையாடிக்கொண்டே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த சுந்தர், “ஏன் கவின், உங்கம்மாவுக்கு உங்க அப்பாவும், அண்ணனும்தான் உதவி செய்வாங்களா? நீயும் உங்க அக்காவும் உதவி செய்ய மாட்டீங்களா?” என்று கேட்டான்.
“இல்லியே, நாங்களும் செய்வோமே. எங்க பாட்டி வீட்ல நான் இருக்கும்போதே எங்க அத்தை, மாமாவுக்கு உதவியா வேலை செய்வேன். எங்க வீட்டைப் பொறுத்தவரை எல்லா வேலையையும் எல்லாரும் பகிர்ந்துகொண்டு செய்வோம். சில நேரங்கள்ல எங்கப்பா சமைப்பாரு. எங்க அண்ணன், அக்காகூட நல்லா சமைப்பாங்க. நான் இப்பத்தான் சமையல் செய்ய கத்துக்கிட்டு இருக்கேன்!” என்று சொன்னாள் கவின்மொழி.
“எங்க வீட்ல எங்கப்பாவும் தம்பியும் எதுவும் செய்ய மாட்டாங்க. எங்கம்மாவுக்கு நான் உதவி செய்வேன்!” என்றாள் எழிலரசி.
“எங்க வீட்டில எங்கம்மாவுக்கு உதவியா நானும் கூடமாட வேலை செய்வேனே..!” என்றான் குட்டிப் பையன் பஷீர்.
உடனே, சுந்தர் முகம் என்னவோ போலாகிவிட்டது. இதைக் கவனித்த கவின்மொழி, “என்னாச்சு, சுந்தர்? ஏன் திடீர்னு என்னவோ மாதிரி ஆயிட்டே?” என்று கேட்டாள்.
“உங்க வீட்டில எல்லாரும் வேலையப் பகிர்ந்துகொண்டு செய்யிறதைப் பார்த்தா, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க வீட்டில எங்கம்மாவுக்கு உடம்பு முடியலேன்னாகூட, யாரும் உதவி செய்ய மாட்டாங்க. ரொம்ப முடியலேன்னா கடையிலேர்ந்து சாப்பாடு வாங்கி வந்து சாப்பிடுவோம். உங்க வீடு மாதிரி எல்லா வீடும் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும் இல்லே. இனி நானாச்சும் எங்கம்மாவுக்கு உதவியா வீட்டு வேலைகளைச் செய்யப் போறேன்!” என்று உற்சாகம் பொங்க சுந்தர் சொன்னான்.
கவின்மொழியும், எழிலரசியும் “சூப்பர் முடிவு” என்று சுந்தரைப் பாராட்டினார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago