சூரியன் வந்தது போலவும் இருக்க வேண்டும், வராதது போலவும் இருக்க வேண்டும். இருள் விலகியது போலவும் இருக்க வேண்டும், விலகாதது போலவும் இருக்க வேண்டும். தூங்கியது போதும், விழித்துக்கொள் என்று வலது கண் அதட்டும். இனிதான் சுகமான கனவு வரப் போகிறது, நீ தூங்கு குழந்தை என்று இன்னொரு கண் ஆசையாக மயக்கும். இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் விடியற்காலையை வைகறை நேரம் என்று சொல்வார்கள். சுமாராக ஐந்து மணி என்று வைத்துக்கொள்ளலாம்.
உ.வே. சாமிநாதர் படுக்கையை விட்டுப் படக்கென்று எழுந்திருக்கும் நேரம் இதுதான். எழுந்தவுடன் குடுகுடுவென்று கதவைத் திறந்து வெளியில் வருவார். அக்கம் பக்கத்துக் குழந்தைகளும் அவரைப் போலவே விழித்துவிடுவார்கள். பிறகு எல்லாரும் ஒன்றாகப் பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள்.
கொஞ்சம் இருங்கள். காலையில் எழுந்தவுடன் பல் எல்லாம் தேய்க்க வேண்டாமா என்றால் வேண்டாம். காபி, தேநீர், காலை உணவு எல்லாம் கிடையாதா என்றால் கிடையாது. ஐந்து மணிக்குப் பள்ளிக்கூடம் திறந்திருக்குமா என்றால் ஆம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உ.வே.சாபடித்துக்கொண்டிருந்தபோது ஐந்து என்ன, அதற்கு முன்பேகூடப் பள்ளி திறந்துதான் இருக்கும்.
ஏனென்றால், அவர் படித்தது திண்ணைப் பள்ளிக்கூடத்தில். இன்று நாம் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கிறோம் அல்லவா? அதேபோல் அன்று ஆசிரியரிடம் சேர்ந்து குழந்தைகள் படிப்பார்கள். அவர் வீட்டுத் திண்ணைதான் பள்ளிக்கூடம். திண்ணைக்கு மழை வந்தால் என்ன, இரவு வந்தால் என்ன, வெயில் அடித்தால்தான் என்ன? அது பாட்டுக்கு எந்நேரமும் விழித்துக்கொண்டுதான் இருக்கப் போகிறது.
குழந்தைகள் திண்ணையில் ஏறி உட்கார்ந்துகொள்வார்கள். முறை சொல்லுதல் தொடங்கும். முந்தைய நாள் என்ன கற்றுக்கொண்டார்களோ அதை ஒப்பிப்பதற்குதான் இந்தப் பெயர். ஒவ்வொரு மாணவரும் கடகடவென்று ஒப்பிப்பார். சில நேரம் ஆசிரியர் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டு மாணவர்கள் சரியாக முறை சொல்கிறார்களா என்று கவனிப்பார். பெரும்பாலும் அவர் வெளியில் வரவே மாட்டார். உள்ளே ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார். அவர் காது மட்டும் வெளியே நீண்டு கேட்டுக்கொண்டிருக்கும். யாராவது ஒரு சின்ன தவறு செய்துவிட்டாலும் வெளியே பாய்ந்து வந்து, தவறு செய்த மாணவரைக் கண்டுபிடித்து ஒரு போடு போடுவார்.
உ.வே.சா படித்தபோது சிலேட்டுகூட இல்லை. ஆசிரியர் தன் கை விரலால் மணலில் கோடு போட்டு, ‘ஆவன்னா’, ‘ஈயன்னா’, ஊவன்னா’ என்று எழுதிக் காட்டுவார். உ.வே.சா தன் முன்பு இருக்கும் மணலில் அந்த எழுத்தை எழுதிக் காட்ட வேண்டும். ஆசிரியர் சொல்வதுபோல் உச்சரித்துக் காட்ட வேண்டும். பிறகு காலை இடைவேளை.
திண்ணையில் இருந்து குதித்து அருகிலுள்ள குளத்துக்கோ ஏரிக்கோ உ.வே.சாவும் நண்பர்களும் நடப்பார்கள். அங்கே உடலை சுத்தம் செய்துகொள்ளலாம். கடவுளே, இன்று ஆசிரியர் என்னைப் பிரம்பால் வெளுக்காமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளலாம். கிளம்பும்போது மணலைத் துணியில் அள்ளி எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வருவார்கள். பழைய மணலைத் தள்ளிவிட்டு புதிய மணலை நிரப்புவார்கள். ஒன்பது மணி வரை வகுப்பு நடக்கும்.
இரண்டாம் இடைவேளை. வீட்டுக்கு ஓடோடிச் செல்வார் உ.வே.சா. காலை உணவு சாப்பிடுவார். மீண்டும் திண்ணைக்கு ஓட்டம். 12 மணி வரை படிப்பு. உணவு இடைவேளை. மூன்று மணிக்குத் திண்ணை. ஏழு மணியோடு அன்றைய வகுப்பு முடியும். கணக்கு, தமிழ், இலக்கணம் போக ஒவ்வொரு நாளும் மண், பறவை, ஊர், விலங்கு ஆகியவற்றின் பெயர்களை ஆசிரியர் அறிமுகம் செய்வார். மறுநாள் இந்தப் பெயர்களைச் சரியாகச் சொல்லிக் காட்ட வேண்டும்.
மணலில் நன்கு எழுதிப் பழகிய பிறகு அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றார் உ.வே.சா. அதே திண்ணை. ஆனால், இந்த முறை நாம் பை கொண்டு போவதுபோல் கையோடு சுவடித் தூக்கை அவர் வீட்டிலிருந்து கொண்டுசெல்ல வேண்டும். வேறு ஒன்றுமில்லை. பனை ஓலை ஏடுகளை எடுத்து ஒரு மரப்பலகை மீது அடுக்கி வைத்துக் கட்டியிருப்பார்கள். பார்க்க நோட்டுப் புத்தகம் போல் இருக்கும். இடது கையால் பனை ஓலையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். வலது கையால் எழுத்தாணி கொண்டு கீறி, கீறி எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும் என்று மட்டுமல்ல, ஓலைச்சுவடியை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதையும் ஆசிரியரே சொல்லிக்கொடுப்பார்.
சில ஆண்டுகள் கழித்து, ஒரு பள்ளியிலிருந்து இன்னொன்றுக்குப் போவது போல் ஓர் ஆசிரியரிடமிருந்து இன்னொருவருக்கு மாறினார் உ.வே.சா. ஒரு திண்ணையிலிருந்து இன்னொரு திண்ணை. ஒரு சுவடியிலிருந்து இன்னொரு சுவடி. ஒரு செய்யுளிலிருந்து இன்னொன்று. ஒரு பாடலிலிருந்து இன்னொன்று. இலக்கணத்திலிருந்து இலக்கியம். இலக்கியத்திலிருந்து சங்கத் தமிழ். சங்கத்திலிருந்து நவீன தமிழ்.
பள்ளிகளும் கல்லூரிகளும் வளர்ந்தன. நோட்டும் பேனாவும் பென்சிலும் பெருகின. மாணவராக இருந்த உ.வே.சா ஆசிரியராகவும் கல்லூரிப் பேராசிரியராகவும் உயர்ந்தார். இருந்தாலும் என்ன? அதே வைகறையில் விழித்துக்கொள்வார். அமர்ந்து படித்த திண்ணைகளை வரிசையாக நினைவில் கொண்டுவருவார். கற்றுக்கொடுத்த எல்லா ஆசிரியர்களையும் வணங்குவார். கதவைத் திறந்துகொண்டு குடுகுடுவென்று ஓடுவார். எங்கெங்கோ அலைந்து, திரிந்து கைகள் நடுங்க, நடுங்க சுவடிகளை அள்ளிக்கொண்டு வருவார். தாத்தா நீங்கள் இன்னுமா சுவடிகளை விடவில்லை என்று குழந்தைகள் கேட்டால் சிரிப்பார்.
‘நம்முடைய இலக்கியச் செல்வங்கள் எல்லாம் ஓலைச்சுவடிகளில்தாம் இருக்கின்றன. அவற்றை ஒன்றுவிடாமல் கண்டுபிடிக்க வேண்டும். கவனமாக ஆராய வேண்டும். உங்கள் எல்லாருக்கும் புரியும்படி, உங்கள் எல்லார் கைகளுக்கும் கிடைக்கும்படி புத்தகமாக அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும். தமிழ்தான் என் சொத்து. அதுதான் உங்கள் சொத்தும். உங்களுக்காக இதோ என் திண்ணையில் தமிழோடு எப்போதும் நான் காத்திருப்பேன்.’
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago