டிங்குவிடம் கேளுங்கள்: இறந்த பின் ரத்ததானம் செய்யலாமா?

By செய்திப்பிரிவு

மனிதன் இறந்த பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதுபோல், ரத்தத்தைத் தானம் செய்ய முடியுமா, டிங்கு?

- வி. சிந்தாணிக்கா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

உடல் உறுப்புகள் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படும் வகையில் இருப்பதால், அவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று, பயன்படுத்த முடியும். ஆனால், ரத்தம் அப்படி அல்ல. இதயம் துடிக்காததால், ரத்தம் பாயாது. விரைவில் உறைந்துவிடும். அதனால், ரத்தத்தைப் பிற உறுப்புகள்போலப் பயன்படுத்த முடியாது. அடிப்படையான விஷயம், ரத்தத்தை இன்னொருவருக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால், ரத்தம் கொடுக்கக்கூடிய அந்த மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், சிந்தாணிக்கா.

வாசலில் சாணம் தெளிப்பது ஏன், டிங்கு?

- என். விஸ்வேஸ்வரன், ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கூத்தூர், திருச்சி.

வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்டால், மகாலட்சுமி வீட்டுக்கு வருவார் என்று நம்பப்படுகிறது. சாணம் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது, தீய சக்திகளை வீட்டுக்குள் நுழைய விடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. வாசலில் சாணம் தெளித்தல் என்பது மக்களின் நம்பிக்கையே. இவற்றுக்கு அறிவியல்ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. தண்ணீரைத் தெளித்தால் சற்று நேரத்தில் ஈரம் காய்ந்து, புழுதி கிளம்பிவிடும். அதுவே சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளித்தால் புழுதி, மண் போன்றவை பறக்காமல் ஒரு போர்வைபோல் மூடிவிடுகிறது. எரிவாயு, உரம் போன்றவை சாணத்தின் மூலம் கிடைக்கின்றன. வாசலில் சாணம் தெளிப்பதற்கு நம்பிக்கை மட்டுமே காரணம், விஸ்வேஸ்வரன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE