அந்தக் காட்டில் நிறைய மரங்களும் செடிகளும் கொடிகளுமாக இருந்தன. அந்த அடர்த்தியான காட்டில் ஒரு மரத்திலே இரண்டு காக்கைகள் வசித்து வந்தன. ஒரு கிளையில் ஒரு காகம் கூடு கட்டியிருந்தது. இன்னொரு கிளையில் மற்றொரு காகம் கூடு கட்டியிருந்தது.
இரண்டும் அதிகாலையிலேயே காட்டை விட்டுப் புறப்படும். மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்துக்குப் பறந்து போகும். அங்கே அவற்றுக்கு வேண்டிய தின்பண்டங்கள் எல்லாம் கிடைக்கும். திருமண நாட்களிலே அல்வா, ஜாங்கிரி, வடை, போண்டா, முறுக்கு எல்லாம்கூடக் கிடைக்கும். அந்த ஊர் மக்களும் சாப்பிடுவதற்கு முன்பு ‘கா கா' என்று கூவி அழைத்துச் சோற்றை ஓரிடத்தில் வைப்பார்கள். இந்த இரண்டு காக்கைகளும் மற்ற காக்கைகளையும் ‘கா கா’ என்று கத்தி அழைத்துக் கொண்டுபோய், அவர்கள் வைத்த சோற்றைப் பங்கு போட்டுத் தின்னும்.
ஒருநாள் இந்த இரு காக்கைகளும் ஒன்றாகப் பறந்து வந்து குளத்தங்கரையில் தனியாக இருந்த ஒரு மரத்தின் கிளையில் உட்கார்ந்தன. அவை எடுத்துவந்த தின்பண்டங்களைக் காலடியில் வைத்து, சிறிது சிறிதாகச் சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன.
அப்போது ஒரு காக்கை இன்னொரு காக்கையைப் பார்த்து, “நாம் தினந்தோறும் காட்டிலே இருந்து இந்த ஊருக்குப் பறந்து வருகிறோம். இந்த ஊரிலேதான் நமக்கு வேண்டிய உணவெல்லாம் கிடைக்குது. இவ்வளவு தொலைவு தினமும் பறந்து வரணுமா? இதோ இப்போ நாம் இருக்கிற மரத்திலே நீ ஒரு பக்கமும், நான் ஒரு பக்கமுமாகக் கூடு கட்டிக்கிட்டு இருக்கலாமே! வீணா அலைய வேண்டாமே” என்றது.
அதற்கு இன்னொரு காக்கை, “இது ஒரு தனி மரம். நெட்டையாக ஒல்லியாக இருக்குது. பார்த்தால் ரொம்ப வயசானது போலத் தோணுது. இதிலே கூடு கட்டுறது ஆபத்து! நாம கூடுகட்டி, அதிலே முட்டையிட்டு, அடைகாக்கிற காலத்திலே ஜாக்கிரதையா இருக்கணும். இந்த ஊர்ப் பசங்களிலே சிலர் பொல்லாதவங்களா இருப்பாங்க. நாம் இரை தேடப் போற நேரம் பார்த்து, அவங்க மரத்து மேலே ஏறுவாங்க. நம்ம கூட்டில் இருக்கிற நீல நிற முட்டைகளைப் பார்த்ததும், அதுகளை எடுத்துட்டுப் போனாலும் போயிடுவாங்க. காடுதான் நமக்குச் சரி. இந்தத் தனிமரம் சரிப்படாது” என்று விவரமாகச் சொன்னது.
ஆனால், முதலில் சொன்ன காக்கை கேட்கவில்லை. ”நாம ரெண்டு பேரும் இந்த மரத்திலே தங்கலாம். ஏன் நாம ஒவ்வொரு நாளும் காலையிலே எழுந்திருச்சு, காட்டிலே இருந்து இங்கே பறந்து வரணும்? அப்புறம் இருட்டுறப்போ திரும்பிப் பறந்து காட்டுக்குப் போகணும்? இது வீண் வேலை” என்று திரும்பத் திரும்பச் சொன்னது.
“நான் காட்டிலேதான் இருப்பேன். இந்த மரத்திலே வசிக்க மாட்டேன்."
“சரி, அப்படின்னா நீ காட்டுக்குப் போய் அங்கேயே இரு. நான் இந்த மரத்திலேயே கூடு கட்டுறேன்.''
‘‘உன் மனசை மாத்தவே முடியாது. நீ இங்கேயே இரு. நான் காட்டுக்குப் போறேன்” என்று கூறிவிட்டு, காட்டுக்குச் சென்ற காக்கை, தினமும் அதிகாலையில் காட்டிலிருந்து பறந்து, கிராமத்தில் உள்ள குளக்கரை மரத்துக்கு நேராக வரும். பிறகு, இரண்டும் சேர்ந்து ஊருக்குள் இரை தேடப் போகும். இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. காட்டில் இருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. குளக்கரை மரத்தில் இருந்த காக்கையும் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்திருந்தது. இரண்டு காக்கைகளின் குஞ்சுகளும் ஓரளவு வளர்ந்துவிட்டன. இன்னும் நான்கைந்து நாட்களிலே பறக்க ஆரம்பித்துவிடும்.
அன்றைக்கு அதிகாலை, மூன்று அல்லது மூன்றரை மணி இருக்கும். ‘மட, மட'வென்று இடி இடித்தது. ‘பளிச், பளிச்'சென்று மின்னல் மின்னியது. ‘விர், விர்'ரென்று புயல் காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது. சுழற்றிச் சுழற்றி அடித்த புயல் காற்றிலே, குளக்கரையிலிருந்த மரம் 'தடால்' என்று தரையிலே விழுந்துவிட்டது. அப்போது அதிலிருந்த காக்கைக்கூடும் கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுகளும், பாவம் கீழே விழுந்து நசுங்கிப் போயின. தாய்ப் பறவை மட்டும் தப்பிவிட்டது.
தப்பிப் பிழைத்த தாய்ப் பறவை குளக்கரையிலிருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தது. அப்போது காட்டிலிருந்து வந்த காக்கை, தூரத்தில் வரும்போதே மரத்தைக் காணாமல் திடுக்கிட்டது. அருகிலே வந்ததும், மரம் சாய்ந்து கிடப்பதையும் கல்லின் மீது அந்த மரத்தில் வசித்த காக்கை அமர்ந்து அழுதுகொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தது. உடனே கல்லின் மீது இருந்த காக்கையின் அருகிலே சென்று விசாரித்தது. விவரம் தெரிந்ததும் மிகவும் வருந்தியது. அதற்கு ஆறுதல் கூறித் தேற்றியது.
‘‘காட்டிலேயும் புயல் வீசியிருக்குமே! நீ இருந்த மரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லையே!'' என்று கேட்டது, அழுகையை நிறுத்திய காகம்.
‘‘நான் இருந்த காட்டிலேயும் புயல் பலமாகத்தான் வீசியது. ஆனால், பக்கத்திலேயே நிறைய மரங்களும் செடி கொடிகளும் இருந்ததால், புயலின் வேகத்தை அவை தடுத்துவிட்டன. ஒரு மரம்கூட விழவில்லை. இங்கே நீ இருந்த மரம் தனி மரமா இருந்ததாலே புயல் அதைச் சுலபமாகச் சாய்ச்சிடுச்சு.”
‘‘ஆமா, நீ சொல்றது சரிதான். கூடி இருந்தால், கோடி நன்மை என்பாங்க. மரங்களெல்லாம் சேர்ந்திருந்த காரணத்தினாலே, புயலாலே ஒண்ணும் செய்ய முடியலே. அன்னிக்கு நீ சொன்னதைக் கேட்டு, அதன்படி நடந்திருந்தால், என் குழந்தைகளை நான் பறிகொடுத்திருப்பேனா? இன்னிக்கு ராத்திரியே நான் உன்னோடு காட்டுக்கு வந்துடுறேன். உன்னோடு அந்த மரத்திலேயே நானும் முன் போலக் கூடு கட்டி வசிக்க முடிவு பண்ணிட்டேன்.”
‘‘சரி, அப்படியே செய்யலாம்.”
அன்று பொழுது சாயும் நேரத்தில் இரண்டு காக்கைகளும் ஒன்றாகச் சேர்ந்து காட்டை நோக்கிப் பறந்து சென்றன.
(குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர். பாடல்கள், கதைகள், நாவல்கள் என ஏராளமாக எழுதியிருக்கிறார்.)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago