புதிய கண்டுபிடிப்புகள்: புதிதாகப் பிறந்த நிலா!

By த.வி.வெங்கடேஸ்வரன்

விண்வெளியில் புத்தம் புது நிலாக்கள் பிறப்பதை அண்மையில் வானவிய லாளர்கள் படம்பிடித்துள்ளனர். இதன் மூலம் பூமியின் நிலா எப்படிப் பிறந்தது என்பதைக் குறித்தும் அறிய முடியும் என்று நம்புகிறார்கள்.

பூமிக்கு ஒரே ஒரு நிலா. சூரியனுக்கு அருகில் உள்ள புதன், வெள்ளி கோள்களுக்கு நிலாக்கள் இல்லை. செவ்வாய்க் கோளுக்கு இரண்டு நிலாக்கள். வியாழன் கோளுக்கு 79 நிலாக்கள். இவற்றில் 53 நிலாக்கள் உறுதி செய்யப் பட்டிருக்கின்றன. சனிக்கு 82, யுரேனஸுக்கு 27, நெப்டியூனுக்கு 14 நிலாக்கள் உள்ளன.

சூரியக் குடும்பத்துக்கு வெளியே வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களை, புறக்கோள்கள் என்பார்கள். அந்தப் புறக்கோள்களுக்கு நிலா உண்டா என்கிற மர்மத்தை விடுவிக்கும் விதமாகத் தற்போது சிலி நாட்டில் உள்ள ALMA தொலைநோக்கி வழியே இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

பூமியிலிருந்து சுமார் 370 ஒளியாண்டு தொலைவில் செண்டாரஸ் விண்மீன் தொகுதி உள்ள திசையில், PDS-70 விண்மீனைச் சுற்றிவரும் போது, PDS 70c என்கிற நிலா பிறப்பதைக் கண்டனர். பூமியின் நிலாவைப் போல இரண்டரை மடங்கு அதிக நிறை இந்த நிலாவில் உள்ளது.

நிலா பிறந்தது எப்படி?

மூன்று விதமான கருத்துகளை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பூமியும் நிலாவும் ஒன்றாகப் பரிணமித்தவை. முன்னொரு காலத்தில் பூமியும் நிலாவும் சூரியனும் இருக்கவில்லை. பெரும் வாயுப் பந்து சுழன்று திரண்டபோது மையத்தில் உள்ள பொருள்கள் சூரியனாக மாறின. அதனைச் சுற்றி வந்த பொருள்கள் பல்வேறு கோள்களாகப் பரிணாமம் அடைந்தன. அப்படி வாயுப் பந்தாகப் பூமி சுற்றிக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பகுதி பூமியாகவும் மறுபகுதி நிலாவாகவும் மாறியது என்பது சிலரின் கருத்து.

இன்னும் சிலர் பூமி பெற்ற பிள்ளைதான் நிலா என்கிறார்கள். பூமி திரண்டு உருவானபோது அதன் மீது பல முறை விண்கற்கள் மோதி, அதில் தெறித்த பொருள் திரண்டு நிலாவாக உருவானது என்பது இவர்கள் வாதம்.

நிலா எங்கோ பிறந்தது; பூமி வேறு இடத்தில் உருவானது. தற்செயலாக பூமியின் அருகே நிலா சென்றபோது, தன்னுடன் இணைத்துக் கொண்டது பூமி. நெப்டியூனின் ட்ரைடன் நிலா வேறு எங்கோ பிறந்தது, பிறகுதான் நெப்டியூன் ஈர்த்து தனது நிலாவாக வைத்துக்கொண்டது என்கிறார்கள். மற்ற எல்லாக் கோள்களும் நிலாக்களும் இடஞ்சுழி பாதையில் வலம் வர, இந்த நிலா மட்டும் வலஞ்சுழி பாதையில் வலம் வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்த மூன்று கருத்துகளில் எது சரி என்பதை முழுமையாக உறுதிசெய்யும் அளவுக்குச் சான்றுகள் இதுவரை இல்லை.

பிரேசிலில் உள்ள தொலை நோக்கி (Pico dos Dias Survey) இந்த விண்மீனை முதலில் கண்டது. விண்மீனின் பெயர் PDS 70. 2019 ஜூலை முதல் இந்த விண்மீனைக் கூர்ந்து நோக்கி ஆய்வு செய்தனர்.

பொதுவாக PDS 70a என்பது விண்மீனைக் குறிக்கும். PDS 70b அந்த விண்மீனைச் சுற்றும் அருகில் உள்ள புறக்கோள். PDS 70c என்றால் இரண்டாவதாகச் சுற்றும் புறக்கோள். இந்த இரண்டு கோள்களும் வியாழன் கோள் போன்று ராட்சசக் கோள்கள்.

இந்த விண்மீன் குடும்பம் பிறந்து 54 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நம் சூரியக் குடும்பம் தோன்றி 457.1 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இளம் வயதில் இருக்கும் இந்த விண்மீன் குடும்பத்தைத் தொலைநோக்கி வழியே காணும்போது எப்படி நிலாக்கள் உருவாகின்றன என்று அறிய முடிகிறது.

வளர் பருவத்தில் உள்ள PDS-70 விண்மீனைப் போலவே இந்த இரண்டு கோள்களும் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன. அவற்றைச் சுற்றி உள்ள பொருள்களை விழுங்கி, இந்தக் கோள்கள் வளர்ந்துவருகின்றன. விழுங்கும்போது வாயுக்கள், சிறுசிறு கற்கள், பாறைகள் அடங்கிய திரள்வட்டு போன்ற வடிவத்தில் இவை காட்சி தருகின்றன.

PDS 70c சுற்றி வளையம் போல அமைந்துள்ள திரள்வட்டை ALMA தொலைநோக்கி வழியே உற்றுநோக்கியபோது, வளரும் கோளைச் சுற்றிப் புதிதாகப் பிறக்கும் நிலாவைக் காண முடிந்தது. ஒரு தாய் பிள்ளைகள் போல கோளும் நிலாவும் ஒன்றாக உருவாகி வருவதைக் காண முடிந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்