மாய உலகம்: நம் ஆப்கானிஸ்தானை மீட்போம்!

By மருதன்

‘‘ஐயோ, மலாலாய், விரைந்து வா! நம் வீரர்கள் அடிபட்டு விழுந்து கிடக்கிறார்கள். பொல்லாத பிரிட்டிஷ்காரர்கள் நம் ஆப்கனிஸ்தானைச் சுருட்டி விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். நம் வீரர்களைக் காப்பாற்றுவோம், ஓடி வா!’’

பதறியடித்துக்கொண்டு வெளியில் வந்தேன்.அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லோரும் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்து ஓடினேன். என் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது. மலை, மேடு கடந்து ஓடினோம். கல் குத்தியதோ முள் குத்தியதோ யாருக்கும் தெரியவில்லை. குனிந்து பார்க்க நேரமில்லை. வலியும் இல்லை. அப்படியே வலித்தால்தான் என்ன?

எவ்வளவு நேரம் மூச்சு வாங்க, வாங்க ஓடினோம் என்று நினைவில்லை. மைவாந்த் போர்க்களத்தை அடைந்தோம். அப்பப்பா, நான் கண்ட பயங்கரத்தை விவரிக்க என்னிடம் சொற்கள் இல்லை. நாலாபுறமும் ஈசல்கள்போல் வீரர்கள் சுருண்டுகிடந்தார்கள். தலைப்பாகைகளும் வாள்களும் கம்புகளும் சிதறிக்கிடந்தன. ‘ஆ, அம்மா’ என்னும் முனகல் சத்தம் மட்டுமே அங்கே ஒலித்தது. மற்றபடி முழு அமைதி. சத்தமா, அமைதியா எது என்னை அச்சுறுத்தியது என்று சொல்லத் தெரியவில்லை.

வழிந்துகொண்டிருந்த ரத்தத்தைச் சிலர் துடைக்க ஆரம்பித்தனர். சிலர் கட்டுப் போட ஆரம்பித்தனர். எங்கே அடி பட்டிருக்கிறது, எங்கே வலிக்கிறது என்று ஒவ்வொருவரிடமும் குனிந்து சில பெண்கள் விசாரித்துக்கொண்டிருந்தனர். சிலர் உணவு கொண்டு வந்திருந்தனர். சிலர் நீர் கொண்டு வந்திருந்தார்கள். நான் மட்டும்தான் வெறும் கையோடு ஓடிவந்துவிட்டேனா?

என் தலை மட்டும்தான் கிறுகிறுவென்று சுற்றிக்கொண்டிருக்கிறதா? என் உடல் மட்டும்தான் நடுங்கிக்கொண்டிருக்கிறதா? இப்போது என்ன செய்ய வேண்டும் நான்? எதற்காக ஓடிவந்தேன் இங்கே? யாரை மீட்க வேண்டும் நான்? அவரையா, இவரையா, அதோ அங்கே மரத்தடியில் விழுந்து கிடப்பவரையா? யாருடைய காயத்துக்கு மருந்திட வேண்டும் நான்? யாருடைய வலியைப் போக்க முடியும் என்னால்?

இங்குள்ள அக்காக்களிடமும் அம்மாக் களிடமும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். ‘மலாலாய், வீரர்கள் இல்லாமல் நாம் இல்லை. அவர்கள் இல்லாமல் நம் வீடு இல்லை. நம் குழந்தைகள் இல்லை. நம் எதிர்காலம் இல்லை. அவர்கள் காயத்தைப் போக்குவதும் அவர்களை மீட்பதும் நம் கடமை. ஆண்கள் இறைவனை நம்பி இருக்கிறார்கள். நாம் ஆண்களை நம்பி இருக்கிறோம். இது உனக்குத் தெரிந்தது தானே?’

ஆம், தெரிந்ததுதான். ஆனால், இங்கே நான் காணும் காட்சி எனக்கு வேறோரு செய்தியை அல்லவா சொல்கிறது? இவ்வளவு காலமாக நம் ஆண்கள் நம்மிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள்? ‘நாங்கள் வலிமையானவர்கள். எங்களால்தான் தேசத்தைக் காக்க முடியும். ஆபத்து என்று வந்தால் எங்களால்தான் போர்க்களம் செல்ல முடியும். எங்களால்தான் எதிரிகளோடு போரிட முடியும், வெல்லவும் முடியும். தேசத்தை மட்டுமல்ல பெண்களாகிய உங்களையும் எங்களால்தான் காக்க முடியும். நீங்கள் வீட்டைக் கவனித்துக்கொள்ளுங்கள். நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’

இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது? ஆண்கள் எல்லாரும் அடிபட்டு விழுந்திருக் கிறார்கள். அவர்களை மீட்க பெண்களாகிய நாங்கள் ஓடி வந்திருக்கிறோம். நிச்சயம் நாங்கள் உங்களை மீட்போம். அதில் சந்தேகமில்லை. உங்கள் காயங்களுக்கு மருந்திடுவோம். உங்களைத் தேற்றுவோம். மீண்டும் நீங்கள் போர்க்களத்துக்குப் போகத்தான் போகிறீர்கள்.

ஆனால், அடுத்தமுறை உங்களோடு நாங்களும் இணைந்து வருவதை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கான உணவையோ நீரையோ ஆயுதங்களையோ சுமந்து வருவதற்கு அல்ல. எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு. இங்கே விழுந்துகிடப்பது எனது ஆப்கானிஸ்தான். இங்கே காயமடைந்திருப்பது எனது ஆப்கானிஸ்தான். அதை மீட்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு என்னால் வீட்டுக்குள் அடைந்திருக்க முடியாது.

‘அதெப்படி மலாலாய் உனக்குப் போரிடத் தெரியாதே’ என்று நீங்கள் கேட்கலாம். தெரியாதுதான். ஆனால், கற்றுக் கொள்வோம். நாளை என் இடத்தில் நூறு மலாலாய்கள் தோன்றுவார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்குள் நுழைவார்கள். கல்லூரிகளை வெல்வார்கள். மருத்துவம் பார்ப்பார்கள். தொழில்நுட்பம் கற்பார்கள். விமானம் ஓட்டுவார்கள். விளையாடுவார்கள். ஆட்சி புரிவார்கள். ஆபத்து என்றால் பாய்ந்து போரிடவும் தயங்க மாட்டார்கள்.

‘‘வீரர்களே, எழுந்திருங்கள்! எங்களை இணைத்துக்கொள்ளாமல் உங்களால் எந்தப் போரிலும் வெல்ல முடியாது. இது உங்கள் காயமல்ல. நம் காயம். இது உங்கள் போரல்ல. நம் போர். இது உங்கள் ஆப்கானிஸ்தான் அல்ல. நம் ஆப்கானிஸ்தான். ஆயுதம் ஏந்தி நீங்கள் தொடுக்கும் போர் முடிவற்றது. பொருளற்றது. இன்று பிரிட்டன். நாளை இன்னொருவன் வருவான். எவ்வளவு காலத்துக்கு இப்படியே போரிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? எப்போது கற்பீர்கள்? எப்போது உலகைக் காண்பீர்கள்? எப்போது இயற்கையின் எழிலை உணர்வீர்கள்? நம் மலைகளையும் மலர்களையும் பறவைகளையும் பள்ளத்தாக்குகளையும் என்றாவது ஒரு நிமிடமாவது நிதானமாக நின்று பார்த்ததுண்டா நீங்கள்? எப்போதுதான் வாழ ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

நீங்கள் இப்படி இருக்கும்வரை நம் தேசம் இப்படித்தான் இருக்கும். எங்களை இணைத்துக்கொள்ளுங்கள். எல்லாம் மாறுவதை உணர்வீர்கள். வலிமை என்பது போரில் வெல்வது அல்ல. போரை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வதுதான். காயம் என்றால் என்ன, வலி என்றால் என்ன, இருள் என்றால் என்ன என்பதை உங்கள் எல்லாரையும்விட நாங்கள் நன்கு அறிவோம். ஒரு தேசத்தை ஆக்கிரமிப்பது என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். விடுதலைக்காக எப்படிப் போராடுவதுஎன்பதை நாங்கள் கண்டறிவோம். அதை நாங்கள் கண்டறியும்போது நம் ஆப்கானிஸ்தான் ஒரு புத்தம் புது பூவாக மலர்ந்திருக்கும்.”

(மலாலாய் - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆப்கானிஸ்தான் விடுதலைப் போராட்ட வீராங்கனை. ஆப்கானிஸ்தானின் ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ என்று அழைக்கப்படுகிறார்.)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்