எனக்குக் கதை பிடிக்கும். யானைக்கு எந்த அளவுக்குக் கரும்பு பிடிக்குமோ அந்த அளவுக்கு. வானத்துக்கு எந்த அளவுக்கு நட்சத்திரங்களைப் பிடிக்குமோ அந்த அளவுக்கு. பறவைக்கு எந்த அளவுக்குப் பறக்கப் பிடிக்குமோ அந்த அளவுக்கு. இனிப்பு வாங்கிக் கொடு என்றோ பொம்மை வாங்கிக் கொடு என்றோ அல்ல; அம்மா கதை சொல்லு, அம்மா கதை சொல்லு என்று மட்டுமே நான் அடம் பிடிப்பது வழக்கம்.
‘சரி வா, சினுவா ஆச்சிபி’ என்று இழுத்து உட்கார வைத்து அம்மாவும் சொல்வார். இன்னொன்று, இன்னும் ஒன்றே ஒன்று, இறுதியாக ஒன்று, இறுதி இறுதியாக ஒன்று என்று அட்டைப்பூச்சிபோல் அம்மா காலைப் பிடித்துக்கொண்டு நச்சரிப்பேன். இதற்கு மேல் கதைகள் இல்லை போ என்று அவர் விரட்டும் வரை உட்கார்ந்திருப்பேன். பிறகு எழுந்து அக்காவிடம் ஓடுவேன். அக்கா, அக்கா இன்று யாருமே எனக்குக் கதை சொல்லவில்லை. ஒரேயொரு குட்டி கதை சொல்வாயா? பிறகு தாத்தாவிடம் ஓடுவேன். நான் கடைசியாகக் கதை கேட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது என்று சாதிப்பேன். அடுத்து பாட்டி. அடுத்து பக்கத்து வீட்டுத் தாத்தா. எதிர் வீட்டு மாமா. விடிந்ததும், மீண்டும் அம்மாவிடமிருந்து தொடங்குவேன்.
நான் கொஞ்சம் வளர்ந்து, படிக்க ஆரம்பித்த பிறகுதான் கதை கேட்கும் வழக்கம் குறைந்தது. மணி கணக்கில் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து சுற்றியிருந்தவர்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தார்கள், தெரியுமா?
அதன்பின் மனிதர்களை விட்டுவிட்டுப் புத்தகங்களைத் துரத்தத் தொடங்கினேன். பெரிய, பெரிய எழுத்தாளர்கள் எழுதிய குண்டு, குண்டு கதைகளை எல்லாம் இரவு பகலாகப் படித்து முடித்தேன். ஆங்கிலம் இப்போது கிட்டத்தட்ட என் தாய்மொழிபோல் மாறிவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி எல்லாம் என் பக்கத்து ஊர்களாக மாறிவிட்டன. ஷேக்ஸ்பியர் தொடங்கி எல்லா இலக்கிய மேதைகளையும் வண்டுபோல் துரத்தினேன்.
ஒரு நாள் பக்கத்து வீட்டுத் தாத்தா வாசலில் குழந்தைகளை அமர வைத்து ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தார். நான் என் அறைக்குள் அமர்ந்துகொண்டு புகழ்பெற்ற இலக்கிய நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். என் கண்கள் என்னவோ புத்தகத்தில்தான் இருந்தன. ஆனால், காதுகள் மட்டும் சொல்பேச்சு கேட்காமல் நீண்டு, நீண்டு தாத்தா பக்கம் சென்றுவிட்டன. அவ்வளவுதான் தெரியும் எனக்கு. என் கைகள் தாமாகவே புத்தகங்களை மூடின. என் கால்கள் தாமாகவே நடந்து வெளியில் வந்தன. குழந்தைகளுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டேன்.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. தாத்தா சொன்ன கதையைக் கேட்டதும் ஏன் உடல் சிலிர்த்துக்கொண்டது? கேட்டு முடித்து இவ்வளவு நேரம் ஆகியும் ஏன் எனக்குள் இவ்வளவு மகிழ்ச்சி? நான் இதுவரை படித்த எந்தப் புத்தகமும் இவ்வளவு சிலிர்ப்பை, இவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுபோல் தெரியவில்லையே! தாத்தாகதையில் அப்படி என்ன மாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது?
விடியும்போதுதான் எனக்கு விடை கிடைத்தது. நான் படித்த புத்தகங்கள் எல்லா நாடுகளையும், எல்லா மனிதர்களையும், எல்லா நிலங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தின. ஆனால், நான் படித்த எந்தக் கதைகளிலும் ஆப்பிரிக்கா இல்லை. ஆப்பிரிக்கர்கள் இல்லை. நான் பிறந்த நைஜீரியாவை யாரும் எழுதியதுபோல் தெரியவில்லை. என் தாய்மொழியான இக்போ பற்றி ஒரு சொல்கூடப் படித்த நினைவில்லை. எங்கோ இருக்கும் ஐரோப்பியர்களை நான் புத்தகங்களில் பார்த்துவிட்டேன். என்னோடு வசிக்கும் மக்களை நான் எந்தப் புத்தகத்திலும் பார்க்கவில்லை.
ஆப்பிரிக்கக் கதைகளே எழுதப்பட வில்லை என்று சொல்ல மாட்டேன். நிறைய பேர் எழுதிக் குவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லோரும் அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் அல்லது வேறு யாரோ. நான் படித்த எந்தப் புத்தகத்திலும் ஆப்பிரிக்காவின் கதை ஓர் ஆப்பிரிக்கரால் சொல்லப் படவில்லை. தாத்தா சொன்ன கதை உயிர்ப்போடு இருந்ததற்குக் காரணம் தாத்தாவின் கதையில் ஆப்பிரிக்கா உயிர்ப்போடு இருந்ததுதான்.
என் நிலத்தின் கதையை, என் மக்களின் கதையை, என் காட்டின் கதையை, என் இரவின் கதையை, கறுப்பு உதடுகள் சொல்லும்போது அந்தக் கதைகள் என் நெஞ்சில் தங்குகின்றன. எங்கள் கனவுகளை, எங்கள் கவலைகளை, எங்கள் கோபங்களை எங்களைத் தவிர வேறு யாரால் புரிந்துகொள்ள முடியும்? நைஜீரியாவின் கதையை நைஜீரியாதானே சொல்ல வேண்டும்? நைஜீரியாவால் மட்டும்தானே அதை முழுமையாகவும் நேர்மையாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்ல முடியும்?
நான் கேட்டு வளர்ந்த ஆப்பிரிக்காவின் கதையை இதுவரை யாரும் எழுதவில்லை என்பது புரிந்தது. ஆனால், அதற்கு நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. நான் படிக்கத் துடிக்கும் கதையை இன்னொருவர் எழுத முடியாது. நான்தான் எழுதியாக வேண்டும்.
கதை கேட்பவனாக என் வாழ்க்கையைத் தொடங்கிய நான், கதை படிப்பவனாக வளர்ந்து, கதை எழுதுபவனாக மாறினேன். என் கறுப்பு விரல்களைக் கொண்டு என் கறுப்பு மக்களின் கதையை எழுத ஆரம்பித்தேன். ஆப்பிரிக்காவின் பெருமிதத்தை, ஆப்பிரிக்காவின் கண்ணீரை, ஆப்பிரிக்காவின் இருளை, ஆப்பிரிக்காவின் ஒளியை எழுத ஆரம்பித்தேன். ஆப்பிரிக்காவின் இதயத் துடிப்பைக் காது கொடுத்து கேட்டவன் என்பதால் என் கதைகளில் அந்தத் துடிப்பை அப்படியே கொண்டுவந்தேன்.
உலகின் கதைகளைப் பலர் எழுதிவிட்டார்கள். பலர் படித்துவிட்டார்கள். சொல்லப்படாத கதைகளை இனி சொல்ல ஆரம்பிப்போம். ஆப்பிரிக்காவின் குரலை உலகம் கேட்கட்டும்.
(Chinua Achebe – ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago