சித்திரக்கதை: செந்திலை மடக்கிய கேள்வி

By மு.முருகேஷ்

வீட்டின் திண்ணை மீதேறி நின்றபடி, செந்தில் சத்தம் போட்டுச் சொன்னான்.

“நான் கதை சொல்லப் போறேன்...!”

அவனது அழைப்புக்காகவே காத்திருந்ததுபோல், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளெல்லாம் உற்சாகமாக ஓடி வந்தார்கள்.

அந்தச் சிறிய திண்ணையில் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்தார்கள். பத்துப் பனிரெண்டு குழந்தைகளாவது இருப்பார்கள்.

எந்த சத்தமுமின்றி, ‘கப்சிப்’ என்று அமைதியானார்கள். செந்திலின் முகத்தையே ஆர்வமாய் உற்றுப் பார்த்தார்கள்.

செந்தில் எட்டாம் வகுப்பு படிக்கிறான். கதை சொல்வதில் மிகவும் தேர்ந்தவன். அவன் சொல்லும் கதைகள் உண்மையா, கற்பனையா என்று கண்டுபிடிப்பது கடினம். அப்படியே நேரில் பார்த்ததுபோல் கதை சொல்லுவான். தேவைக் கேற்ப குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கொள்வான். கண்களை அங்குமிங்கும் சுழல விடுவான். அவன் சொல்கிற கதைக்கேற்ப அவனது உடம்பும்கூட வளைந்து நெளியும். அதுவும் பேய்க் கதை சொல்வதில் படுகில்லாடி. அவன் சொல்லும் பேய்க் கதைகளைக் கேட்டுக் குழந்தைகள் நடுநடுங்கிப் போவார்கள்.

இதனால் அந்தத் தெருவில் இருக்கும் சின்னக் குழந்தைகள் எல்லாம் செந்தில் வீட்டுத் திண்ணையில் கதை கேட்க அடிக்கடி கூடிவிடுவார்கள். அவன் பாட்டுக்கு மனம்போன போக்கில் கதையென்று எதையாவது சொல்லிவைப்பான். அவன் கதை சொல்லும்போது குழந்தைகளுக்கு அதில் நிறைய சந்தேகங்கள் வரும். கேள்வி கேட்க நினைப்பார்கள். ஆனால், யாரும் கேள்வியே கேட்க முடியாது. அப்படி யாராவது கேட்டுவிட்டால், அடுத்த முறை கதை கேட்க வரவிட மாட்டான் செந்தில்.

அன்று செந்தில் குழந்தை களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

“ அன்னிக்கி நல்லா ச்சோன்னு மழை பெய்ஞ்சது. வனிதா மட்டும் வீட்டில தனியா இருந்தா. கரண்ட் வேற கட்டாயிடுச்சு. வீடே இருட்டா இருந்துச்சு. மெழுகுவர்த்தி ஏத்த வனிதா தீப்பெட்டியக் கையிலெடுத்தா. தீப்பெட்டியிலிருந்து வெள்ளையா புகை வந்துச்சு. அப்புறம் ‘ஊஊ’ன்னு சத்ததோட அதுக்குள்ளயிருந்து பெரிய பூதமொன்னு வந்துச்சு...!”

செந்தில் சொல்வதைக் குழந்தைகள் கண்களில் மிரட்சியோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். சிறு குழந்தைகளின் கண்கள் பயத்தில் கலங்கியே விட்டன.

‘அது எப்படி சின்னத் தீப்பெட்டிக்குள்ளிருந்து பெரிய பூதம் வரும்...?’ என்று ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மனோகர் கேட்க நினைத்தான். அதற்குள், “யாரும் குறுக்கே பேசக் கூடாது...!” என்று வாயடைத்து விட்டான் செந்தில். யார் கேள்வி கேட்டாலும்தான் அவனுக்குப் பிடிக்காதே...!

அடுத்த நாளும் ஒரு பேய்க்கதையைத்தான் செந்தில் சொன்னான்.

ஆரம்பத்திலேயே வேறு சொல்லிவிட்டான்.

“இந்தக் கதை சொல்லும்போது, குறுக்கே யாரும் கேள்வி கேட்கக்கூட வாயைத் திறக்கக்கூடாது. மீறித் திறந்தா, அப்புறம் உங்க வாயை யாராலும் மூடவே முடியாது...” என்று பயமுறுத்தினான்.

குழந்தைகள் பயந்துபோய் இரு கைகளாலும் வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டனர்.

எப்போதும்போல் கதை சொல்ல ஆரம்பித்தான் செந்தில்.

விடுமுறையில் மாமா வீட்டுக்கு வந்திருந்தாள் கவிதா. செந்தில் வீட்டுக்குப் பக்கத்தில்தான் கவிதாவின் மாமா வீடும் இருக்கிறது.

அன்று கவிதாவும் கதை கேட்க, செந்தில் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்திருந்தாள். கவிதா ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அறிவியலை அலசி ஆராயும் துளிர் இல்லத்தில் உறுப்பினராகவும் இருக்கிறாள்.

“ ஒரு குருட்டுப் பேயி உள்ளே வந்துச்சு. அங்கே படுத்திருந்த செழியனோட வலது காதைப் பிடிச்சு அப்படியே தூக்குச்சு...!” கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் பயந்துபோனார்கள்.

“அதுதான் குருட்டுப் பேயாச்சே. அது எப்படி கரெக்டா உள்ளே வந்து, காதைப் பிடிச்சுத் தூக்கும்...?” என்று பயம் ஏதுமின்றி துணிச்சலாகக் கேள்வி கேட்டாள் கவிதா.

செந்தில் கதை சொல்லும்போது, இடையில் வாயைத் திறந்து கேள்வி கேட்ட கவிதாவின் நிலைமை என்னாகுமோ என்று கவலையோடு அவளையே உற்றுப் பார்த்தார்கள் மற்ற குழந்தைகள்.

ஆனால், பதிலேதும் சொல்ல முடியாமல், வாயை மூடி அமைதியானது யார் தெரியுமா? கதை சொன்ன செந்தில்தான்.

கவிதாவோடு சேர்ந்து எல்லாக் குழந்தைகளும், “ நல்லாக் கேட்டே ஒரு கேள்வி…!” என்றபடி வாயைத் திறந்து சிரித்தார்கள்.



பசுமைப் பள்ளி: நக்கீரன் பதிலளிக்கிறார்

பசுமைப் பள்ளிக்கு லீவு விட்டுவிட்டாலும், கவலை வேண்டாம். இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் தொடர்பாக எந்தச் சந்தேகமாக இருந்தாலும், அதை சூழலியல் எழுத்தாளர் நக்கீரனிடம் கேட்கலாம். உங்கள் கேள்விகளை அருகில் உள்ள முகவரிக்கோ மின்னஞ்சலுக்கோ ‘பசுமைப் பள்ளி - நக்கீரன் பதில்கள்’ என்று குறிப்பிட்டு அனுப்புங்கள்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்