ஒருவேளை நீங்கள் என் பள்ளியில் பயின்ற மாணவராக இருந்தால் என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான், கே.ஏ. கேலுஸ்கர். வில்சன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். தெரியாவிட்டாலும் பரவாயில்லை. என்னைப் பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை. என் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோய்விட்ட ஒரு மாணவரை உங்களுக்கு எல்லாம் அறிமுகம் செய்யவே வந்திருக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்ததும் அருகிலுள்ள பூங்காவுக்கு நடந்து செல்வது என் வழக்கம். ஐந்து மணிக்கு நுழைவேன். எப்போது கிளம்புவேன் என்பது அன்று என் கையிலுள்ள புத்தகத்தைப் பொறுத்தது. அமைதியான, அழகான சூழலில் அமர்ந்து படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் தற்செயலாக அந்த மாணவரைப் பார்த்தேன். இந்த உலகில் நானும் என் புத்தகமும் மட்டும்தான் இருக்கிறோம் என்பதுபோல் மரத்தடியில் காலை நீட்டி அமர்ந்துகொண்டு மும்முரமாக ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.
மறுநாள் அதே இடத்தில் அதே காட்சி. யார் இவர்? அப்படி எதைத்தான் விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருக்கிறார்? அதன்பின் ஒவ்வொரு நாளும் உள்ளே நுழையும்போதே அந்த மரத்தடியைத்தான் என் பார்வை தேடும். ஒரு நாளும் மாணவர் என்னை ஏமாற்றவில்லை. பாடப் புத்தகம் அல்லது கதைப் புத்தகமாக இருக்கும் என்று நினைத்தேன். தவறு. பொருளாதாரம், வரலாறு, சமூகம் என்று பெரியவர்களே திணறும் தலைப்புகளைச் சர்வ சாதாரணமாக அவர் படித்துக்கொண்டிருந்தார். அதற்கு மேல் என்னால் வியப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
மாணவரை நெருங்கிப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். அவ்வளவுதான். அன்று நானும் படிக்கவில்லை. அவரையும் படிக்கவிடவில்லை. பூங்காவை விட்டுக் கிளம்பும்போது நன்றாகவே இருட்டிவிட்டது. நாளை சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டோம். அவரது குரல் உற்சாகமாகவும் என் குரல் உடைந்தும் போயிருந்தது. அன்று இரவெல்லாம் தூக்கமில்லை. மனம் மிகவும் கனத்திருந்தது.
காலை எழுந்ததும் சுடச்சுட காபி வந்து சேர்ந்தது. அம்பேத்கருக்கும் இப்படி ஒரு கோப்பை கிடைத்திருக்குமா என்று யோசித்தேன். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் என் வீட்டுச் சமையலறையைவிடச் சிறிய அறையில்தான் அவர் குடும்பமே வசித்துவருகிறது. அப்பாவே அம்மாவாகவும் மாறி அன்பைப் பொழிந்துவருகிறார். நீ முதலில் படுத்துக்கொள் என்று அம்பேத்கரைத் தூங்க வைத்துவிட்டு அப்பா அருகில் காத்திருப்பாராம். நள்ளிரவில் மகனை எழுப்பி, படிக்கச் சொல்லிவிட்டு அவர் படுத்துக்கொள்வாராம். எந்தக் குழந்தையாவது அந்நேரத்துக்குப் படிக்குமா? ஆனால், அம்பேத்கர் விடியும்வரை படிப்பாராம்.
இப்படி இரவெல்லாம் படிக்கிறாயே, பூங்காவிலாவது கொஞ்சம் விளையாடலாமே என்றேன். என்னால் எப்படி விளையாட முடியும் என்று பதில் வந்தது. “நகைகளை அடமானம் வைத்தும் விற்றும் நான் கேட்கும் புத்தகங்களை வாங்கிக்கொடுக்கிறார் அப்பா. எனக்காக அவர் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் நானும் அண்ணனும் படிக்க முடியாது என்பதால் பாவம், என் அண்ணன் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். எனக்காக அவர்கள் எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் செய்ய முடிந்தது படிப்பது ஒன்றுதான் ஐயா!”
இதுதான் என் உயிர் என்று புத்தகத்தைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டிருக்கும் இந்த மாணவரை நம் சமூகம் எப்படி நடத்துகிறது தெரியுமா? ஒரேயொரு நிகழ்ச்சியைத்தான் சொன்னார். அதை நினைத்தால் இப்போதும் உடலில் மின்சாரம் பாய்வதுபோல் இருக்கிறது.
யாராவது இந்தக் கணக்குப் பாடத்தை வந்து போடுங்கள் பார்ப்போம் என்று கணக்கு வாத்தியார் ஒருமுறை வகுப்பில் சொல்லியிருக்கிறார். சட்டென்று அம்பேத்கர் எழுந்து கரும்பலகையை நெருங்கியிருக்கிறார். உடனே, ‘ஆ, ஐயோ’ என்று வகுப்பில் இருக்கும் பலர் அலற ஆரம்பித்துவிட்டார்கள். ‘அங்கே போகாதே, போகாதே’ என்று ஒரே கூச்சல். வாத்தியாருக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
அம்பேத்கருக்கும் குழப்பம். நான் கணக்கு போடத்தான் போகிறேன் என்று அமைதியாக விளக்க முயன்றிருக்கிறார். ஆனால், அவரைப் பேசவிட்டால்தானே? “கணக்குப் போடுகிறாயா, கணக்கு? நீ எதற்காக அங்கே போகிறாய் என்று எங்களுக்குத் தெரியாதா? பலகைக்குப் பின்னால்தான் நாங்கள் எங்கள் உணவுப் பொட்டலங்களை வைத்திருக்கிறோம். தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நீ பலகையை நெருங்கினால் எங்கள் உணவெல்லாம் அசுத்தமாகிவிடாதா? அதுதானே உன் திட்டம்?”
இதைச் சொல்லும்போது நிலவின் ஒளியில் அம்பேத்கரின் கண்கள் மின்னிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தக் கண்களை என்னால் இனி ஒருபோதும் மறக்க முடியாது. அந்தக் கண்களில் அச்சமில்லை. குழப்பம் இல்லை. அவநம்பிக்கை இல்லை. எதிர்காலம் குறித்த கலக்கம் இல்லை. நான் கற்கத்தானே விரும்புகிறேன்? என்னை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்னும் கோபம் இல்லை. வெறுப்பின் நிழல்கூட இல்லை.
மாறாக, நான் ஒருபோதும் படிப்பதை நிறுத்திக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்தன அந்தக் கண்கள். ‘படிக்க முடியாமல் தவிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்காக நான் படிப்பேன். அவர்கள் வீடுகளில் ஒளி நிறையும்வரை படிப்பேன். எங்களை ஒதுக்கும் சமூகத்துக்கும் சேர்த்துப் படிப்பேன். அவர்கள் மனத்திலிருந்து இருள் விலகும்வரை, நாங்களும் மனிதர்களே என்பதை அவர்கள் மெய்யாக உணரும்வரை நான் படிப்பேன்.’
அன்று முழுக்கப் பள்ளியில் அம்பேத்கர்தான் என்னை ஆக்கிரமித்திருந்தார். மாலை மணி அடித்ததும் விறுவிறுவென்று நடந்து பூங்காவை அடைந்தேன். எனக்காக அம்பேத்கர் காத்திருந்தார். அவரை நெருங்கியதும் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன். கையோடு எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தை அவர் கைகளில் வைத்து அழுத்தினேன். “அம்பேத்கர், இது புத்தர் பற்றி நான் எழுதியுள்ள புத்தகம். உன்னைப் போல் தேடித் தேடி அறிவைத் திரட்டியவர். கிடைத்த வெளிச்சத்தை உலகெல்லாம் பகிர்ந்துகொண்டவர். இவர் உன்னை நிச்சயம் கவர்வார் என்று நம்புகிறேன்.”
சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். கதவைத் திறந்துகொண்டு வெளியேறுவதற்கு முன்பு ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நட்சத்திரங்களுக்கு அடியில் அம்பேத்கர் புத்தரைப் பற்றிக்கொண்டிருந்தார். புத்தர் அம்பேத்கரைப் பற்றிக்கொண்டிருந்தது போலவும் தெரிந்தது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago