கிராமத்தில் ஒரு குருவி இருந்தது. அதற்கு ஒரு நெல்மணி கிடைத்தது. அதை ஒரு திருகையில் திரித்து அரிசியாக்க முயன்றது. அப்போது, அரிசியில் ஒரு பாதி திருகையின் மைய அச்சுக்கு அடியில் சிக்கிக்கொண்டது. குருவி அந்தப் பாதி அரிசியை எடுக்க முயன்றது. முடியவில்லை. உடனே அது ஒரு விறகுவெட்டியிடம் சென்றது.
“விறகுவெட்டியே, திருகையின் மர அச்சுக்கு அடியில் அரிசியில் பாதி சிக்கியிருக்கிறது. அந்த மர அச்சை உடைத்து, அரிசியை எடுத்துத் தா” என்றது.
விறகுவெட்டி, “அரிசித் துண்டுக்காகத் திருகையின் அச்சை உடைப்பதா? போ.. போ..” என்று குருவியை விரட்டினார்.
குருவிக்குக் கோபம் வந்துவிட்டது. நேராக அரசரிடம் சென்றது. “அரசே, அந்த விறகுவெட்டியைத் தண்டியுங்கள். என் அரிசி திருகையில் சிக்கியிருக்கிறது. அந்த அச்சை உடைத்து அரிசியை எடுத்துத் தர விறகுவெட்டி மறுக்கிறார். நான் எப்படிச் சாப்பிடுவது?” என்று முறையிட்டது.
பாதி அரிசிக்காக விறகுவெட்டியைத் தண்டிக்க முடியாது என்று அரசர் குருவியின் வேண்டுகோளை மறுத்துவிட்டார். உடனே குருவி அரசியிடம் சென்றது. “அரசியே, அரசரிடம் எடுத்துச் சொல்லுங்கள். என் அரிசி திருகையில் சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகுவெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். நான் பிறகு எப்படிச் சாப்பிடுவது?” என்றது. இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் அரசரிடம் என்னால் பேச முடியாது என்று அரசி மறுத்துவிட்டார்.
அடுத்ததாக குருவி ஒரு பாம்பிடம் சென்றது. “பாம்பே, என் அரிசி திருகையில் சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகு வெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். அரசருக்கு எடுத்துச் சொல்ல அரசி மறுக்கிறார். பிறகு நான் எப்படிச் சாப்பிடுவது?” என்றது.
“நீ என்ன பைத்தியமா? ஒரு அரிசித் துகளுக்காக ராணியைக் கடிக்க முடியுமா?” என்று பாம்பு மறுத்தது. வெறுத்துப்போன குருவி, ஒரு பெரிய தடிக்கம்பிடம் போய், “தடியே, நீ பாம்பை அடித்துக் கொல். என் அரிசி திருகையில் சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகு வெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். அரசருக்கு எடுத்துச் சொல்ல அரசி மறுக்கிறார். அவரைக் கடிக்க இந்தப் பாம்பு மறுக்கிறது. பிறகு நான் எப்படிச் சாப்பிடுவது?” என்றது. தடிக்கம்பும் குருவிக்கு உதவ மறுத்துவிட்டது.
ஆனாலும் குருவி நம்பிக்கை இழக்கவில்லை. நெருப்பிடம் சென்றது. “ஓ... நெருப்பே, தடிக்கம்பை எடுத்துப் பொசுக்கிவிடு. என் அரிசி திருகையில் சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகு வெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். அரசருக்கு எடுத்துச் சொல்ல அரசி மறுக்கிறார். அவரைக் கடிக்க இந்தப் பாம்பு மறுக்கிறது. அந்தப் பாம்பை அடித்துக் கொல்ல தடிக்கம்பு மறுக்கிறது. பிறகு நான் எப்படிச் சாப்பிடுவது?” என்றது.
“இங்கிருந்து ஓடிப் போ. ஒரு பாதி அரிசிமணிக்காக நான் ஒரு தடிக்கம்பை எரிக்க மாட்டேன்” என்றது நெருப்பு.
குருவி இப்போது நேராகக் கடலிடம் சென்றது. “ஓ... கடலே, இந்த நெருப்பை நீ அணைத்துவிடு. என் அரிசி திருகையில் சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகு வெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். அரசருக்கு எடுத்துச் சொல்ல அரசி மறுக்கிறார். அவரைக் கடிக்க இந்தப் பாம்பு மறுக்கிறது. அந்தப் பாம்பை அடித்துக் கொல்ல தடிக்கம்பு மறுக்கிறது. அந்தத் தடிக்கம்பை எரித்துவிட நெருப்பு மறுக்கிறது. பிறகு நான் எப்படிச் சாப்பிடுவது?” என்றது.
கடலும் குருவிக்கு உதவ மறுத்துவிட்டது. குருவி ஒரு யானையிடம் பறந்து சென்று தனது வேண்டுகோளை வைத்தது.
“யானையாரே, இந்தக் கடல் முழுவதையும் குடித்துவிடுங்கள். திருகையில் என் அரிசி சிக்கி இருக்கிறது. அதை எடுத்துத் தர விறகு வெட்டி மறுக்கிறார். அவரைத் தண்டிக்க அரசர் மறுக்கிறார். அரசருக்கு எடுத்துச் சொல்ல அரசி மறுக்கிறார். அவரைக் கடிக்க இந்தப் பாம்பு மறுக்கிறது. அந்தப் பாம்பை அடித்துக் கொல்ல தடிக்கம்பு மறுக்கிறது. அந்தத் தடிக்கம்பை எரித்துவிட நெருப்பு மறுக்கிறது. நெருப்பை அணைக்கச் சொல்லிக் கேட்டால் கடல் மறுக்கிறது. பிறகு நான் எப்படிச் சாப்பிடுவது?” என்றது.
யானைக்கும் அப்போது ரொம்பத் தாகமாக இருந்தது. எனவே, குருவிக்கு உதவியது மாதிரியும் இருக்கும், தாகமும் தீரும் என்று நினைத்து கடலுக்குக் கிளம்பியது. வேகமாக பெரிய யானை தன்னை நோக்கி வருவதைப் பார்த்த கடல் பயந்துவிட்டது. “தயவு செய்து என்னைக் குடித்து விடாதே. நான் நெருப்பை அணைத்து விடுகிறேன்” என்று சொல்லி நெருப்பிடம் சென்றது. கடலைப் பார்த்து பயந்த நெருப்பு, “என்னை அணைத்துவிடாதே, நான் அந்தத் தடிக்கம்பை எரித்து விடுகிறேன்” என்றது.
நெருப்பு தடிக்கம்பைப் பிடிக்கச் சென்றதும், கம்பு தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியது. “நான் பாம்பைக் கொன்று விடுகிறேன்” என்றது.
தடிக்கம்பு பாம்பைத் தேடிச் சென்றதும் பாம்பு, “என் மீது இரக்கம் காட்டு. நான் அரசியைக் கடிக்கிறேன்” என்றது.
பாம்பைப் பார்த்துப் பயந்த அரசி அரசரிடம் வேண்டுகோள் விடுக்க, அரசர், “கவலைப்படாதே, நான் அந்த விறகுவெட்டியைத் தண்டிக்கிறேன்” என்றார்.
அரசர் விறகுவெட்டியைக் கைது செய்து அழைத்து வரச் சொன்னதும், விறகுவெட்டி, “அரசே, தயவுசெய்து என்னைத் தண்டிக்காதீர்கள். நான் குருவிக்காகத் திருகையின் அச்சை உடைத்து அதன் அரிசியை எடுத்துத் தந்து விடுகிறேன்” என்றார்.
இப்படியாகத் திருகையில் சிக்கியிருந்த அரிசியை எடுத்துத் தின்ற குருவி, உற்சாகமாகப் பறந்து சென்றது.
மைதிலி மொழிக் கதை
தமிழில்: ச.சுப்பாராவ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago