கெவின் பர்ன்ஸ் நியூசிலாந்து வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர். ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் மனித நடமாட்டம் அற்ற ‘லார்ட் ஹோவ்’ தீவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். மற்ற தாவரங்களில் படர்ந்து வாழும் ஒட்டுண்ணிகளை ஆராய்வதுதான் அவரின் இலக்கு.
பெரணி என்று அழைக்கப்படும் ஸ்டாகார்ன் ஃபெர்ன் (staghorn fern) தாவரம், அந்தத் தீவில் வளரும் தேவதாரு மரங்களில் ஒட்டுண்ணியாக இருந்தது. மரத்தின் தலைப் பகுதியில் வளர்ந்த இந்தப் பெரணிகளின் வேர் தரையைத் தொடுவதில்லை.ஆனால், செடியின் வேர் மற்ற செடிகளோடு பின்னிப்பிணைந்து இருந்தது.
சில நாட்கள் அந்தத் தீவில் ஆய்வு செய்தபோது, ஒரு விஷயம் அவர் கவனத்தை ஈர்த்தது. எப்போதும் ஸ்டாகார்ன் ஃபெர்ன் தாவரம் கொத்துக் கொத்தாகத்தான் தேவதாரு மரங்களில் ஒட்டி இருந்து. சில இடங்களில் பெரும் கொத்தாக இருந்தது. பல இடங்களில் சிறிய கொத்தாக இருந்தது. ஒரே ஒரு தாவரம் மட்டும் தனியாக இருந்ததை அவர் பார்க்கவில்லை.
தனியே வளரவே வளராத ஸ்டாகார்ன் ஃபெர்ன்களும் தேனீக்களைப் போலக் கூட்டுச் சமூக வாழ்க்கை வாழ்கிறதா என்கிற எண்ணம் கெவினுக்குத் தோன்றியது. கறையான் புற்று மாதிரி வேலை பிரிவினையோடு கூட்டாக வாழ்வதைத்தான் ‘சமூக வாழ்க்கை’ என்கிறோம்.
பொதுவாக யானை கூட்டமாகத்தான் உணவு தேடிச் செல்லும். மூங்கிலும் தோப்பாகவே வளரும். ஆயினும் ஒரே இடத்தில் மான்கள் கூட்டமாக வாழ்வதற்கும் தேனீக்களின் கூட்டு வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. ராணித் தேனீ முட்டைகளைப் போட்டுக்கொண்டே இருக்க, வேலைக்காரத் தேனீ தேனைச் சேகரித்து வருகிறது. காவல் தேனீ எதிரிகளை உள்ளே விடாமல் காவல் காக்கிறது. ஏவல் தேனீ கூட்டைத் துப்புரவு செய்கிறது. இதே மாதிரி எறும்புகளிலும் வேலை பிரிவினை உள்ளது.
வேலை பிரிவினைப் பாகுபாட்டோடு பல தலைமுறைகள் ஒன்றாக வாழ்கின்ற நிலையைத்தான் ‘சமூக வாழ்கை’ என வகுத்திருக்கிறார்கள். இதில் சில அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களாக இருக்கலாம். சில அடுத்த தலைமுறை குட்டிகளை ஈனும் இனப்பெருக்கப் பணியில் இருக்கலாம். கறையான், எறும்பு போன்ற பூச்சிகளின் சமூக வாழ்க்கை குறித்து நமக்குத் தெரியும் என்றாலும் இதுவரை சமூக வாழ்க்கை வாழும் தாவரங்கள் இனம் காணப்படவில்லை.
பழம், விதைகள் இல்லாத பெரணிச் செடிகள் ஸ்போர் எனப்படும் வித்துகள் வழியாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஆயினும், எல்லா பெரணிகளிலும் ஸ்போர் உருவாவதில்லை. பத்தில் நான்கு பெரணிகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் ஸ்போர் உருவாகின்றன என்று கெவின் பர்ன்ஸ் கண்டுபிடித்தார். மற்ற ஆறு செடிகளும் இனப்பெருக்கம் செய்யும் நான்கு செடிகளுக்கு நீரைச் சேமித்துத் தருகின்றன என்றும் கண்டுபிடித்தார்.
தலைகீழாகப் பிடித்த குடை போன்ற வடிவில் இந்தப் பெரணிகள் உள்ளன. தரையிலிருந்து நீரை வேர்மூலம் எடுக்க முடியாத பெரணிகள், குடை போன்ற அமைப்பில் விழும் நீர்த்துளிகளைச் சேகரித்துதான் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்கின்றன.
ஸ்போர்கள் உருவாகும் செடியின் இலை பச்சை நிறத்தில் மெழுகு பூசியது போல் உள்ளது. அந்த இலையில் விழும் நீர்த்துளிகள் உருண்டு ஓடி அதன் மட்டை வழியாக அருகே உள்ள இனப்பெருக்கம் செய்யாத செடியின் இலையில் விழுகிறது. இந்தச் செடியின் இலையின் மையத்தில் ஸ்பாஞ்சுபோல நீரை உறிஞ்சக்கூடிய பொருள் உள்ளது. அருகே உள்ள இலைகளில் விழும் நீரை எல்லாம் சேகரிக்கும் ஸ்போர் உருவாகாத செடிகள், தமது வேர்கள் மூலமாகத் தமக்கு அருகில் இருக்கும் இனப்பெருக்கம் செய்யும் செடிக்குத் தருகின்றன. கொத்துகொத்தாக வளரும் இந்தத் தாவரத்தில் சில செடிகளின் பணி இனப்பெருக்கம்; சில செடிகளின் பணி நீர் போன்ற ஊட்டத்தைச் சேகரித்து, இனப்பெருக்கம் செய்யும் செடிகளுக்குத் தருவது. அதாவது எறும்புகளில் உணவைச் சேகரித்து வரும் வேலைக்கார எறும்பு, இனப்பெருக்கம் செய்யும் ராணி எறும்புக்கு உதவுவதுபோல வேலை பிரிவினை இருக்கிறது.
இந்தப் பெரணிகளைக் குறித்து மேலும் ஆராய்வதன் மூலமாக, கூட்டாகச் சமூக வாழ்க்கை வாழும் முறை இயற்கையில் எப்படி உருவாகிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் கெவின் பர்ன்ஸ்.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago