அறிவியலில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த நீண்ட காலம் ஆகலாம். ஆனால், 1879-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு பரிசோதனை, 2100-ம் ஆண்டில்தான் முடியப்போகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! தற்போது இந்தப் பரிசோதனையின் வயது 137 ஆண்டுகள். இன்னும் 84 ஆண்டுகள் கழித்துதான் பரிசோதனையின் முடிவு தெரியவரும். அப்படி இது என்ன பரிசோதனை? இதை ஆரம்பித்து வைத்தது யார்?
அமெரிக்காவைச் சேர்ந்த தாவரவியலாளர் டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் பீல், மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து விதை முளைப்புப் பரிசோதனையைச் செய்தார். இந்தப் பரிசோதனைக்குக் காரணம் விவசாயிகள். விளைநிலங்களில் பறிக்க பறிக்க முளைக்கும் களைகளுக்கு ஏதாவது தீர்வு காண முடியாதா என்ற அவர்களின் கேள்வி, வில்லியம் ஜேம்ஸை யோசிக்க வைத்தது. இதற்காக விதைகளைப் பரிசோதித்து, விடை கண்டுபிடிக்க முடிவு செய்தார்.
ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு உயிரோடு இருக்கும் என்பதுதான் இந்த பரிசோதனையின் நோக்கம். 23 விதமான செடிகளில் இருந்து விதைகளைச் சேகரித்தார். 20 பாட்டில்களை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு செடியிலிருந்தும் 50 விதைகளை பாட்டிலில் போட்டு வைத்தார். ஈர மண்ணால் பாட்டில்களை நிரப்பினார். பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள் ரகசியமாக பாட்டில்களை, தலைகீழாகப் புதைத்து வைத்துவிட்டார். இப்படிப் பாட்டில்களை வைக்கும்போது தண்ணீர் உள்ளே செல்ல முடியாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பாட்டிலை வெளியே எடுத்து, அதில் உள்ள விதைகளை விதைத்து, முளைக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.
வில்லியம் ஜேம்ஸ் தன்னுடைய ஆயுள் காலத்தில் 6 பாட்டில்களைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்தார். பிறகு தன்னுடைய சக இளம் ஆராய்ச்சியாளரிடம் இந்தப் பரிசோதனையை ஒப்படைத்தார். 137 ஆண்டுகள் பலருடைய கைகளுக்கு மாறி, இன்று ஃபிரான்க் டெலிவ்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் அந்தப் பரிசோதனை வந்து சேர்ந்திருக்கிறது.
100 ஆண்டுகளில் இந்தப் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிட வேண்டும் என்பதுதான் வில்லியம் ஜேம்ஸின் திட்டம். 1920-ம் ஆண்டு ஜேம்ஸுக்குப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் பெரிதாக மாற்றம் இல்லாததால், அதாவது விதைகள் முளைத்துக்கொண்டே இருந்ததால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டில்களை எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.
2000-ம் ஆண்டில் ஃபிரான்க் டெலிவ்ஸ்கி ஒரு பாட்டிலைத் தோண்டி எடுத்தார். இந்த முறை 2 விதமான செடிகளில் இருந்து 23 விதைகள் வெற்றிகரமாக முளைத்தன. அதாவது 50 விதைகளில் 23 விதைகள்தான் முளைத்திருக்கின்றன. இது குறிப்பிடத்தகுந்த விஷயம் என்கிறார் டெலிவ்ஸ்கி. இதுவரை 15 பாட்டில்கள் தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 5 பாட்டில்களை எடுப்பதற்கு 2100-ம் வருடம் ஆகிவிடும்!
இன்றும் வயல்களில் களைகளைக் கைகளால் பிடுங்குகின்றனர். அல்லது களைக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். 137 ஆண்டுகளில் அறிவியல் எவ்வளவோ முன்னேற்றங்களைக் கண்டுவிட்டது. நிறைய களைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. இந்த பாட்டிலில் உறங்கும் விதைகள், அழிந்துபோன தாவரங்களை மீண்டும் மண்ணில் துளிர்க்க வைக்க வாய்ப்புகளை வழங்கலாம் என்கிறார் டெலிவ்ஸ்கி.
137 ஆண்டுகளுக்குப் பிறகும் பாட்டில் விதைகளிலிருந்து வெற்றிகரமாக முளைவிடும் 2 தாவரங்கள், அமெரிக்காவில் சர்வசாதாரணமாக வளரும் வெர்பஸ்கம் பிளட்டாரியாவும் மால்வா ரோடன்டிஃபோலியாவும்தான்! இன்னும் 84 ஆண்டுகளுக்குப் பிறகும் இவை தாக்குப்பிடிக்குமா என்பதை உங்களைப் போன்ற வருங்காலத் தலைமுறையினரால்தான் பார்க்க முடியும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago