குரங்குக்கு இடம் கிடைக்குமா?

By கீர்த்தி

பொதிகைமலைக் காட்டில் கோடைக்கால வெயில் கொளுத்தியது. மரங்களில் இலைகள் உதிர்ந்துவிட்டன. எங்கும் வெக்கையும் வறட்சியுமாக இருந்தது. வெயில் தாங்க முடியாத குரங்கு ஒன்று எங்கே போய் மறைந்துகொள்வது என்று தவித்துக்கொண்டிருந்தது.

அப்போது மரத்தின் தாழ்வான கிளையில் தையல்சிட்டு ஒன்று அமர்ந்து சத்தமிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தது. அழகான இலைகளை இணைத்து, தைக்கப்பட்ட கூட்டில், வெயிலின் கொடுமை இல்லாமல் பாடிக்கொண்டிருந்தது தையல்சிட்டு.

‘நான் வெயிலில் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறேன். இந்தத் தையல்சிட்டு மகிழ்ச்சியாகப் பாடிக்கொண்டிருக்கிறதே’ என்று குரங்கின் மனத்தில் ஏக்கமும் பொறாமையும் வந்தன.

உடனே மரத்தில் ஏறி தையல்சிட்டை விரட்டிவிட்டு, அந்த அழகான கூட்டைப் பிய்த்துப்போட்டது குரங்கு. பாவம் தையல்சிட்டு ‘கீச் கீச்' என்று சத்தமிட்டபடி அங்கிருந்து பறந்து போய்விட்டது.

குரங்கின் நடவடிக்கைகளை அருகிலிருந்த மரத்திலிருந்து ஓர் அணில் பார்த்துக்கொண்டிருந்தது. அது குரங்கிடம், “குரங்கே, தையல்சிட்டைப் பார்த்து உனக்கேன் பொறாமை? அது தன் சொந்தத் திறமையால் அழகான கூட்டைக் கட்டி வசிக்கிறது. அதை ஏன் பிய்த்துப் போட்டாய்?” என்று கேட்டது.

“யாரது அணிலா? நீயும் வெயில் படாதவாறு மரப்பொந்தில் வசிக்கிறாய். அதனால்தானே என்னைக் குற்றம் சொல்கிறாய்? என் துன்பம் உனக்கு எப்படித் தெரியும்? இதோ உன் வீட்டையும் என்ன செய்கிறேன் பார்” என்று கோபத்தில் கத்தியது குரங்கு.

மரத்தில் ஏறி, அணிலின் மரப்பொந்துக்குள் குப்பைகளையும் மண்ணையும் கொட்டி, மூடிவிட்டது.

“குரங்கே, எங்கள் வீட்டை நீ சேதப்படுத்தினாலும் நாங்கள் வேறு இடத்தில் போய் வசிப்போம். ஆனால், உன்னுடைய பொறாமைக் குணத்தால் நீதான் துன்பப்படுவாய்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டது.

நாட்கள் கடந்தன. வெயில் காலம் முடிந்தது.மழைக்காலம் தொடங்கியது. வானில் கார்மேகங்கள் சூழ்ந்தன. கடுமையான காற்றுடன் மழையும் வீசத் தொடங்கியது.

முன்பு வெயிலில் தவித்த குரங்கு இப்போது மழையில் தவிக்கத் தொடங்கியது. எங்கே போய் ஒதுங்கலாம் என்று தெரியாமல் காட்டில் அங்கும் இங்கும் ஓடியது. களைத்துப்போன குரங்கு, உடலெங்கும் நீர் வழிய ஒரு மரத்தடியில் போய் நின்றது. பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால், உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. பசியாலும் குளிராலும் நடுங்கிக்கொண்டிருந்தது.

“என்ன குரங்கே,எப்படி இருக்கிறாய்? நீ நடுங்கிக் கொண்டிருக்கிறாயா அல்லது நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாயா?” என்று மேலே இருந்து ஒரு குரல் வந்தது.

குரல் வந்த திசையில் குரங்கு அண்ணாந்து பார்த்தது. அன்று பார்த்த அதே அணில், மரத்தின் ஒரு பொந்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

“அணிலே,பசியாலும் குளிராலும் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். என் மீது கொஞ்சம்கூட இரக்கப்படாமல் இப்படிக் கேலி செய்கிறாயே?” என்று பரிதாபமாகக் கேட்டது குரங்கு.

குரங்கின் நிலையைப் பார்த்து அணிலுக்கும் இரக்கம் வந்தது. அன்று குரங்கு தன் வீட்டை நாசப்படுத்தியதை அது மன்னித்துவிட்டது. தன் பொந்தில் சேமித்து வைத்திருந்த பழங்களையும் கொட்டைகளையும் குரங்கிடம் கொடுத்து, “முதலில் இதை உண்டு பசியாற்றிக்கொள்” என்றது. குரங்கு மகிழ்ச்சியாக எடுத்து உண்டது. பசி தீர்ந்ததும் ஓரளவு தெம்பு வந்தது.

பிறகு அணில், “குரங்கே, அன்று நீ ஒரு தையல்சிட்டின் கூட்டைப் பிய்த்துப் போட்டாயே... அதுவும் அருகில்தான் அழகான கூடு கட்டி வசிக்கிறது. உனக்கும் ஒரு கூட்டைக் கட்டித்தரச் சொல்கிறேன். மழைக்காலம் முடியும் வரை அந்தக் கூட்டுக்குள் நீ பாதுகாப்பாக வசிக்கலாம்” என்றது.

“அணிலே, நான் அன்று அந்தத் தையல்சிட்டின் கூட்டைப் பிய்த்துப் போட்டேன். இன்று எனக்காகக் கூடு கட்டித் தருமா?” என்று ஏக்கத்தோடு கேட்டது குரங்கு.

“அதெல்லாம் நான் பேசிக்கொள்கிறேன். நீ என்னுடன் வா” என்று சொன்ன அணில், குரங்கைத் தையல்சிட்டுவிடம் அழைத்துச் சென்று, தான் வந்த காரணத்தைச் சொன்னது.

இரக்கம் கொண்ட தையல்சிட்டு, “என்னால் மனிதர்களைப் போல் பாதுகாப்பான கூட்டை உருவாக்க முடியாது. அதோ அந்தத் தேக்கு மரத்தில் பெரிய பெரிய இலைகள் இருக்கின்றன. அவற்றை இணைத்து ஒரு கூடு பின்னித் தருகிறேன். அது எந்த அளவுக்கு உனக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது” என்றது.

தையல்சிட்டு தன் கூரிய அலகால் எங்கிருந்தோ நார்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தேக்கு இலைகளை இணைத்து, ஒரு கூட்டைத் தைத்து முடித்தது.

“உங்கள் இருவருக்கும் நான் கெடுதல் செய்தாலும் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், எனக்கு உதவியிருக்கிறீர்கள். உங்கள் இருவரிடமிருந்தும் இந்தப் பண்பை நான் கற்றுக்கொண்டேன். உங்கள் அன்புக்காகவும் தையல்சிட்டின் உழைப்புக்காகவும் இந்தக் கூட்டில் தற்போதைக்குத் தங்கிக்கொள்கிறேன். நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு மரப் பொந்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன்” என்றது குரங்கு.

“குரங்கே, இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. சிலருக்குத் திறமை அதிகமாகவும் இருக்கிறது. அவர்களைக் கண்டு பொறாமையோ வெறுப்போ கொள்வதால் நமக்கு எந்த நன்மையும் இல்லை. கூடவே நம் மனத்தில் பகைமையும் வெறுப்பும்தான் வளரும். அதற்குப் பதிலாக அவர்களை நம் நண்பர்களாக்கிக் கொண்டால், நாம் அனைவருமே நன்றாக வாழலாம்” என்றது அணில்.

குரங்கும் அதை ஏற்றுக்கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்