நிகினி, காட்டை ஒட்டியுள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்துவந்தாள். காட்டு உயிரினங்கள் அவளை நேசித்தன. அன்று நிகினியின் அப்பா ஒரு பரிசுப் பொருளுடன் வந்தார்.
“அது என்னப்பா?” என்று ஆவலுடன் கேட்டாள் நிகினி.
“நாளை உன் அம்மாவின் பிறந்தநாள். அதற்காகத்தான் இந்தப் பரிசு.”
நிகினிக்கு இப்போதுதான் நினைவு வந்தது. ‘அம்மா, என் பிறந்தநாளை மறந்ததேயில்லை. அம்மாவின் பிறந்தநாளை நான் மறக்கலாமா? அம்மாவுக்கு ஒரு பரிசு தர வேண்டும்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
‘அம்மாவுக்கு என்ன பரிசு தரலாம்?’ என்று யோசித்தாள். அழகான அம்மாவுக்குத் தரும் அளவுக்கு உயர்ந்த பரிசு எது என்று அவளுக்குத் தெரியவில்லை. யோசனையில் ஆழ்ந்தாள்.
நடு இரவில் அவளைச் சந்திக்க வந்த மின்மினி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தது. நிகினியைப் பார்த்து, “தூங்காமல் என்ன செய்றே?” என்று கேட்டது.
“நாளை அம்மாவோட பிறந்தநாள். என் அன்பு அம்மாவுக்கு உலகிலேயே உயர்ந்த பரிசைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன கொடுப்பது என்றுதான் தெரியவில்லை” என்றாள் நிகினி.
“வானம் தொடும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டுமா?” என்று அப்பாவியாகக் கேட்டது மின்மினி.
“மின்மினியே, நான் சொல்வது உயரத்தை அல்ல. இந்த உலகிலேயே மிகப் பெரியது அம்மாவின் அன்பு மட்டுமே. அதற்கு இணையான பரிசை எப்படிக் கண்டுபிடிக்கிறது?” என்றாள் நிகினி.
“வா! வெளியே சென்று தேடுவோம்” என்ற மின்மினி, காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அம்மாவின் அன்புக்கு இணையான பரிசைத் தேடினார்கள். கடைசிவரை அப்படி ஒன்று கிடைக்கவே இல்லை.
எதிரில் வந்த மைனா நிகினியைப் பார்த்து, “இருட்டில் எங்கே கிளம்பிட்டே?” என்று கேட்டது.
“நாளை, என் அம்மாவின் பிறந்தநாள். அம்மா, என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். ஓய்வு இல்லாமல் உழைக்கிறார். அம்மாவின் அன்பு மதிப்புமிக்கது. அதற்கு இணையான, உலகின் விலையுயர்ந்த ஒரு பரிசை எங்கே கண்டுபிடிப்பேன்?” என்றாள் நிகினி.
“அதற்குப் பதிலாக அழகான முத்துகளையும் அபூர்வ மலர்களையும் பரிசாகத் தரலாம்” என்றது மைனா.
“அம்மாவைப் போல அழகாக ஒரு பூ அல்லது முத்து கிடைக்குமா? அப்படியானால் எங்கே?” என்று கேட்டாள் நிகினி.
“நான் உனக்கு உதவுகிறேன்” என்ற மைனா அவளுடன் சென்றது. ஆனால், அம்மாவின் அழகுக்கு இணையான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியில், முயல் வளைக்குச் சென்றார்கள். தூங்கிக்கொண்டிருந்த முயல் எழுந்து வந்து, “இருட்டில் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டது.
“நாளை, என் அம்மாவின் பிறந்தநாள். அம்மா என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். உலகில் மிகவும் அழகானவர் அம்மா. அவரின் அழகுக்கு நிகரான ஒன்றைப் பிறந்தநாள் பரிசாகத் தர வேண்டும். ஆனால், அழகான எதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று சோகம் ததும்பும் குரலில் சொன்னாள் நிகினி.
“வானத்து நிலா, நட்சத்திரங்கள் போன்றவை விலைமதிப்பற்றவை” என்றது முயல்.
நிகினி யோசித்தாள். “வானத்து நிலாவை அம்மாவின் கழுத்து அணிகலனாகவும், நட்சத்திரங்களைக் காதணிகளாக மாற்றினாலும் அவை அம்மாவைப் போல விலைமதிப்பற்றவை ஆகிவிடாது. அப்படி என்றால் விலைமதிப்பற்ற பரிசை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்று கேட்டாள்.
நிகினி, மின்மினி, மைனா, முயல் ஆகிய நால்வரும் காட்டில் நீண்ட தூரம் பயணம் செய்தார்கள். வழியில் ஒரு பெரிய சிலந்திவலை இருப்பதைக் கவனிக்காத நிகினி, தவறுதலாக அதில் சிக்கிக்கொண்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த சிலந்தி, “இருட்டில் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டது.
“நாளை, என் அம்மாவின் பிறந்தநாள். அம்மா என்னை மிகவும் நேசிக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது தூங்காமல் கவனித்துக்கொண்டார். அம்மாவின் அன்பை ஈடுசெய்ய ஒரு சிறந்த பரிசைப் பிறந்தநாளன்று தர வேண்டும்” என்றாள் நிகினி.
“வண்ணமயமான ஆடை தரலாமே?”
சிலந்தியின் யோசனை அவளைச் சிந்திக்க வைத்தது. “அம்மா, புடவையை விரும்புவார். அம்மாவுக்கு, உலகின் மிக அழகான புடவையைப் பரிசாகத் தர விரும்புகிறேன்” என்றாள் நிகினி.
“உலகின் மிக அழகான புடவையை, நான் உனக்கு நெய்து தருகிறேன்” என்ற சிலந்தி உடனே வேலையில் இறங்கியது. புடவையை அலங்கரிக்க அழகான பூக்களைக் கொண்டு வந்தது மின்மினி. காட்டைச் சுற்றி அழகான பல வண்ணங்களைக் கொண்டு வந்து கொடுத்தது முயல். மரக்கிளையை உலுக்கி இலைகளில் ஒட்டியிருந்த பனித்துளிகளை அலங்காரமாகப் புடவையில் வைத்தது மைனா. இறுதியில் உலகின் மிக அழகான புடவை தயாரானது.
அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நண்பர்களுடன் வீட்டுக்குக் கிளம்பினாள் நிகினி. பாதி வழியில் பலத்த காற்று வீசியது. மழை பெய்யத் தொடங்கியது. எல்லோரும் சேர்ந்து புடவையைப் பாதுகாக்க முயன்றார்கள். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
புடவை, பல துண்டுகளாகக் கிழிந்தது. நிகினி மழையில் நனைந்தபடி அழுதாள். மறுநாள் காலை, சூரியன் உதித்தபோது அவளை யாரோ பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டாள்.
மகளைத் தேடி, நிகினியின் அம்மா வந்திருந்தார். அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுத நிகினி, “நான், உங்களுக்குப் பிறந்தநாள் பரிசு தர விரும்பினேன். நீண்ட முயற்சிக்குப் பிறகு, நண்பர்கள் உதவியால் அழகான புடவை தயாரானது. ஆனால், இரவில் வீசிய பேய்க்காற்றில் சிக்கி, புடவை பல துண்டுகளாகக் கிழிந்தது” என்றாள்.
“நிகினி, இந்த உலகில் மதிப்புமிக்க, மிகவும் அழகான, மிகச் சிறந்த பரிசு என்றால் அது நீதான். இந்தச் சிறு வயதில் உனக்கு என் மீது உள்ள அன்பும் நேசமும் இந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய, அழகான, மதிப்புமிக்கப் பரிசு” என்ற அம்மா, நிகினியைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் நிகினி. நண்பர்களுடன் சேர்ந்து அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாட வீடு திரும்பினாள்.
ஜானகி சூர்யரச்சி
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago