சித்திரக் கதை: அரசரை வென்ற புளியம்பழம்

By உதய சங்கர்

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலகத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவருக்கு ஆசை. அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே அவருக்கு ஆசை. அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தார்கள். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து விடுவார்கள்.

இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார். உடைகளா? உலகத்திலேயே மிகச் சிறந்த உடைகள் அவரிடம் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் உடுத்தி உடுத்தி அவருக்குச் சலிப்பு வந்துவிட்டது.

அதேபோல உலகிலே மிகச் சிறந்த உணவுகளைச் சாப்பிட ஆசை கொண்டார் ராஜா. உடனே அவருடைய மந்திரிகள் உலகத்திலுள்ள அத்தனை சிறந்த சாப்பாடுகளையும் சமைக்கும் சமையல்காரர்களை கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆசை ராஜாவுக்கு விதவிதமாய் சாப்பாடு செய்து கொடுத்தார்கள். சில நாட்களிலே ஆசைராஜாவுக்கு அதிலும் சலிப்பு வந்துவிட்டது.

உலகத்திலே மிக மென்மையான மெத்தை அவருக்குக் கசந்துவிட்டது. மிகச் சிறந்த கலைப்பொருட்களும் அவருடைய ஆசைக்கு முன்னால் வெகு நாட்கள் நிற்க முடியவில்லை.

ஆசைராஜாவுக்கு இப்போது எதுவும் ஆர்வமூட்டவில்லை. அவர் எப்போதும் எரிச்சலுடனும் கோபத்துடனும் இருந்தார். இதனால் மந்திரிகள் கவலை கொண்டார்கள். உடனே நாடெங்கும் முரசு கொட்டி ஆசைராஜாவின் ஆசையை யார் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு ஆசைராஜாவின் அருமை மகளான இளவரசியைத் திருமணம் செய்துக் கொடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். கூடவே பாதி நாட்டையும் தருவதாக அறிவிப்பு செய்தார்.

இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்டு உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் இளைஞர்கள் வந்தார்கள். ஒவ்வொருத்தரும் விதவிதமாகப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவுப் பொருட்கள், கலைப் பொருட்கள், கவிதைகள் என்று ஆசைராஜாவின் முன்னால் வந்து காண்பித்தார்கள். ஆசைராஜாவுக்கு எதுவும் ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆசையை மூட்டவில்லை. வந்த எல்லோரும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள்.

அப்போது அரண்மனைக்குத் துணி துவைக்கும் சலவைக்காரன் சலவைத்துணியைக் கொடுக்கப்போகும்போது இளவரசியைப் பார்த்துட்டார். மணம் முடித்தால் இளவரசியைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டான். ஆசைராஜாவின் அறிவிப்பை அவனும் கேட்டான்.

அவனும் என்னவெல்லாமோ யோசித்துப் பார்த்தான். எதுவும் பிடிபடவில்லை. இளவரசியைக் கல்யாணம் முடிக்க முடியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டான். கவலை அவனைப் பாடாய்படுத்தியது. அவன் மெலிந்து துரும்பாகி விட்டான்.

அதைப் பார்த்த அவனுடைய பாட்டி, “ ஏண்டா பேரப்புள்ள என்னடா கவலை.. எதாயிருந்தாலும் சொல்லு..” என்று கேட்டாள். கடைசியில் அவன் பாட்டியிடம் தன் கவலையைச் சொன்னான்.

அவனுடைய பாட்டியும், “ அட லூசுப் பயலே, இதுக்குத்தானா இம்புட்டு கவலைப்பட்டே…” என்று சொல்லி அவனை அருகில் அழைத்து காதில் ரகசியம் சொன்னாள். அதைக் கேட்ட அவனும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

அன்று அரசவையில் வழக்கம்போல ஆசைராஜா எரிச்சலுடன் உட்கார்ந்திருந்தார். சற்று முன்னர் அவர் முன்னால் பல்லியையும் பாச்சாவையும் கொண்டுவந்த இரண்டு பேரை சிறையில் அடைக்கச் சொல்லிவிட்டார். மூன்றாவதாக அரண்மனைச் சலவைக்காரன் போனான். அவன் கையில் எதுவும் கொண்டு போகவில்லை. மந்திரிகள் அவனிடம், “ ராஜாவுக்கு என்ன கொண்டு வந்தாய்? ” என்று கேட்டார்கள்.

அவன் அமைதியாக அரசவையில் உள்ளவர்களை ஒரு முறை நிதானமாகப் பார்த்தான். பின்னர் மடியிலிருந்து ஒரு புளியம்பழத்தை எடுத்து எல்லோருக்கும் காண்பித்து விட்டு வாயில் வைத்து ருசித்து சப்புக் கொட்டினான். அதைப் பார்த்த ஆசைராஜாவுக்கு வாயில் தானாக எச்சில் ஊறியது. அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோருடைய வாயிலும் எச்சில் வழிந்தது. ஆசைராஜா சிம்மாசனத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார்.

“என்னால ஆசைய அடக்க முடியல.. அடக்க முடியல..” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டே சலவைக்காரனிடம் கையேந்தினார். அவனும் தயாராக வைத்திருந்த இன்னொரு புளியம்பழத்தை எடுத்து ஆசைராஜாவிடம் கொடுத்தான். ஆசைராஜா முகத்தைச் சுளித்து, பல் கூச சப்புக் கொட்டி புளியம்பழத்தை ருசித்தார். மந்திரிகளும் ருசித்தார்கள்.

ஆசைராஜா சொன்ன மாதிரி பாதி நாட்டையும் கொடுத்து இளவரசியையும் கல்யாணம் செய்துக் கொடுத்தார். அதன் பிறகு என்ன செய்தார் தெரியுமா? நாடெங்கும் புளிய மரங்களை நட்டு வளர்த்தார். அதன் பிறகு அவருடைய ஆசைநோய் அடங்கிவிட்டது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்