காட்டுக்கு ராஜான்னா எப்பவுமே சிங்கம்தான் இருக்கணுமா? ஏன், எலி இருக்கக் கூடாதா? யார் சொன்னது? எலியும் இருக்கலாம்தானே. நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்.
நம்ம கதையிலே வர்ற காட்டுக்கு எலி அண்ணன்தான் ராஜா. காட்டுக்கு மட்டும் ராஜா இல்லே, அண்ணனோட பேரும் ராஜாதான். என்ன பொருத்தம்… ஆகா, நல்ல பொருத்தம்!
நம்ம எலி ராஜா பார்க்க குள்ளமா இருந்தாலும் ரொம்ப அழகா இருப்பாரு. எதையும் பாய்ஞ்சு பிடிக்கிறதில படுகில்லாடி. எப்பவும் சுறுசுறுப்பா இருப்பாரு. யாரோட உணவையும் திருட மாட்டாரு. யாருக்காவது ஏதாவது உதவின்னா முதல் ஆளா போயி நின்னு உதவி செய்வாரு. அவ்வளவு நல்லவரு.
ஒரு நாளைக்கு ரெண்டு முறையாவது காட்டைச் சுத்தி வந்திடுவாரு. எந்த பிரச்சினைன்னாலும் நேரா போயி பாத்து, எலி ராஜாவே தீர்த்து வைப்பாரு.
எலி ராஜாவுக்குக் கல்யாணம் செய்யணும்னு அவரோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஆசைப்பட்டாங்க.
எலி ராஜாக்கிட்டே போய் விஷயத்தைச் சொன்னாங்க.
எல்லாரையும் போலவே, “இப்ப எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்?”ன்னு மறுத்தாரு நம்ம எலி ராஜா.
அப்பாவும், அம்மாவும் விடாம வற்புறுத்தினாங்க.
“எனக்கு இப்ப கல்யாணம் செஞ்சிக்கிறதுலே விருப்பமில்லே. நீங்க ரொம்ப வற்புறுத்துறதாலே சொல்றேன். நல்ல அழகா, என்னைவிட பலசாலியான பொண்ணா இருந்தா பாருங்க.நான் கட்டிக்கிறேன்!” என்று எலி ராஜா அரை மனசோட சம்மதம் சொன்னாரு.
அப்பா, அம்மா ரெண்டு பேரும் யோசிச்சாங்க.
“பொண்ணு அழகாவும் இருக்கணும். நல்ல பலசாலியாகவும் இருக்கணும். ம்ம்ம்…!”
ரெண்டு பேரும் கலந்து பேசினாங்க.
“அழகு, பலம் ரெண்டும் உள்ளது கடற்பறவைதான். நம்ம எலி ராஜாவுக்கு அதையே பாத்துப் பேசிடலாம்!”
பக்கத்திலிருந்த கடலுக்குச் ரெண்டு பேரும் போனாங்க. அங்கேயிருந்த கடற்பறவையைப் பார்த்து, வந்த விவரத்தைச் சொன்னாங்க எலி ராஜாவோட அம்மா.
“எலி ராஜா கேட்கிற மாதிரி அழகும், பலமும் என்னைவிட அதிகமா கொண்ட திமிங்கிலத்துக்கிட்டே போயி கேளுங்க!” அப்படின்னு சொல்லிடுச்சு கடற்பறவை.
கொஞ்ச தூரம் தள்ளி, கரையோரமா ஓய்வெடுத்துக்கிட்டிருந்த திமிங்கிலத்தைப் போயிப் பார்த்தாரு எலி ராஜாவோட அப்பா.
எலி ராஜாவோட விருப்பத்தைச் சொல்லி, “எலி ராஜாவைக் கட்டிக்கிறீயா?”ன்னு திமிங்கிலத்துக்கிட்டே கேட்டாரு.
“எனக்கும் எலி ராஜாவைக் கல்யாணம் செய்ய ஆசைதான். ஆனா, அவரு கேட்ட மாதிரி அழகும், பலமும் கொண்ட மீனவப் பெண் ஒருத்தி இருக்கா. அவளைப் போயி கேளுங்க!” - திமிங்கிலம் இப்படி சொல்லிடுச்சு.
அந்த மீனவப் பெண்ணோட வீட்டைத் தேடிப் போனாங்க அப்பாவும், அம்மாவும்.
வீட்டிலிருந்த மீனவப் பெண்ணிடம் வந்த விஷயத்தைச் சொன்னாங்க ரெண்டு பேரும்.
“எலி ராஜாவோட விருப்பம் சரிதான். ஆனா, அவரு கேட்கிற மாதிரியான பலசாலிப் பொண்ணு ஒருத்தி பக்கத்து ஊருல இருக்கா. அவ பேரு சக்திதேவி. அவ பின்னித் தர்ற வலைய திமிங்கலத்தால கூட அறுக்க முடியாது. அவ்வளவு உறுதியா வலை பின்னுற சக்திதேவிதான், எலி ராஜாவுக்கு ஏத்த சரியான ஜோடி!”ன்னு சொல்லிட்டு, சக்திதேவியோட வீட்டுக்குப் போற வழியையும் காட்டினா அந்த மீனவப் பெண்.
சக்திதேவி பார்க்க ரொம்ப அழகா, பலசாலியா இருந்தா. எலி ராஜாவோட அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் பொண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு.
விஷயத்தைச் சொல்லி, “எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்!”ன்னு கேட்டாங்க.
“எலி ராஜாவைக் கட்டிக்க எனக்கும் சம்மதம்தான். திமிங்கலத்தாலேயே அறுக்க முடியாத உறுதியான வலையை நான் பின்னுறேன். ஆனா, அந்த வலையவே அறுக்கிற உறுதியான ஒருத்தங்க இருக்காங்களே!” அப்படீன்னு இழுத்தபடி சக்திதேவி சொன்னா.
ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே புரியலே.
“நீ சொல்ற மாதிரி அப்படியொரு பொண்ணு இருந்தா, கண்டிப்பா அவளையே கட்டி வச்சிடலாம்.சொல்லும்மா!” என்று உறுதியா சொன்னாங்க ரெண்டு பேருமே.
“பார்க்க அழகா, கூரான பல்லால திமிங்கலத்தோட வலையையும் அறுக்கிற பலம் எலிக்கிட்டேதான் இருக்கு. நீங்க எலி பொண்ணாப் பாத்து நம்ம ராஜாவுக்கு கல்யாணம் பண்ணி வையுங்க…!”
சக்திதேவி சொன்னதும்தான், ரெண்டு பேருக்கும் தெளிவு வந்துச்சு.
“ஓகோ, எலிகிட்டேயும் இம்புட்டு பலம் இருக்கில்லே. நாம எங்கெங்கோ போயி பொண்ணு தேடி அலைஞ்சோமே…!” என்று நினைத்த அப்பாவும், அம்மாவும் நல்ல எலிப் பொண்ணாப் பாத்து,எலி ராஜாவுக்கு நல்லா ஜாம்ஜாம்னு கல்யாணத்தை நடத்தினாங்க.
“என்ன… எல்லாரும் கூட்டமா எங்கே போறீங்க…? ஓ… எலி ராஜாவோட கல்யாண விருந்துக்கா?
‘பீப்பீ… பீப்பீ… டும்டும்… டும்டும்…’.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago