மலைக்காட்டில் வசித்த முயல், குரங்கு, அணில் ஆகிய மூன்றும் நண்பர்கள். அவை இணைந்தே சுற்றித் திரிந்தன. புல்வெளிகளில் மகிழ்ச்சியாக விளையாடின. அவை ஒவ்வொன்றும் தனக்குக் கிடைக்கின்ற உணவைத் தான் மட்டும் உண்ணாமல் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டன.
குரங்கும், அணிலும் மகிழ்ச்சியாகவே இருந்தன. முயலுக்கு மட்டும் அடிக்கடி கவலை வந்துவிடும். நாய், நரி, ஓநாய் போன்றவற்றால் ஏதேனும் ஆபத்து வந்தால் குரங்கும் அணிலும் மரத்தில் ஏறித் தப்பித்துக்கொள்ளும். ஆனால், முயலுக்கு மரம் ஏறத் தெரியாததால் ஏதேனும் புதரையோ பொந்தையோ தேடி ஓட வேண்டியிருக்கும். உயிர் தப்பிப் பிழைப்பதே பெரிய சவாலாக இருக்கும்.
இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று முயல் யோசித்தது. அதற்கு ஒரு யோசனையும் தோன்றவில்லை.
ஒருநாள் கேரட் தோட்டத்தின் அருகில் சென்ற முயல் திடுக்கிட்டது. அங்கே ஒரு பெரிய கரடி தூங்கிக்கொண்டிருந்தது. ‘ஐயோ, இந்தக் கரடி விழித்தால் நான் உயிர் தப்புவேனா?’ என்று முயல் அச்சம் கொண்டது.
கரடி விழிக்கும் முன் நாம் இங்கிருந்து ஓடிவிடலாம் என்று நினைத்த முயலுக்கு, ஒரு யோசனையும் தோன்றியது. இந்தக் கரடியைத் தன் நண்பனாக்கிக் கொண்டால், காட்டில் அச்சமின்றி வாழ முடியுமே என்று நினைத்தது.
முயல் சத்தமில்லாமல் கேரட்டுகளைப் பறித்தது. அந்தக் கேரட்டுகளை தூங்கிக்கொண்டிருந்த கரடியின் முன்னால் வைத்தது. சற்று தொலைவில் மண்ணில் குழி தோண்டி, அதற்குள் பதுங்கிக்கொண்டது முயல்.
கேரட் வாசனையில் அந்தச் சோம்பேறிக் கரடி கண் விழித்தது. அது பசியோடு இருந்ததால் கேரட்டுகளை ருசித்துத் தின்றது.
குழிக்குள் பதுங்கியிருந்த முயல், “கரடியாரே! இந்தக் கேரட்டுகளை நான்தான் உங்களுக்காகக் கொண்டுவந்து வைத்தேன். என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் தினமும் கேரட்டுகளையும் கிழங்குகளையும் கொண்டு வந்து தருவேன். என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வீரா?” என்று கேட்டது.
சோம்பேறிக் கரடிக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. உழைக்காமல் சாப்பிடலாமே என்று நினைத்த கரடி, “உன்னைப் போல ஒரு நண்பனைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இனி நீயும் நானும் நண்பர்கள்” என்று முயலிடம் சொன்னது.
கரடியின் மீதிருந்த அச்சம் நீங்கிய முயல் மெதுவாக வெளியே வந்தது. அது கரடியிடம், “நண்பரே, நான் தினமும் உங்களுக்கு உணவு கொண்டுவந்து தருகிறேன். ஆனால், நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்தக் காட்டில் சில நாய், நரி, ஓநாய்கள் என்னை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை நீங்கள்தான் விரட்ட வேண்டும்” என்றது.
“நரியும் ஓநாய்களுமா?அவர்களை நான் கவனித்துக்கொள்கிறேன். நீ தினமும் எனக்கு உணவு தந்தால் போதும்” என்றது சோம்பேறி கரடி.
அன்றிலிருந்து முயல் எப்போதும் தனக்குப் பாதுகாப்பாகக் கரடியை அழைத்துக்கொண்டு போனது. தன் பழைய நண்பர்களான அணிலையும் குரங்கையும் தவிர்த்துவந்தது. தான் தேடும் கேரட், கிழங்குகளில் பெரும்பங்கைக் கரடிக்குக் கொடுத்து, தானும் கொஞ்சம் உண்டது.
முயலுக்குக் கரடி நண்பனாக இருப்பதால் நாய், நரி, ஓநாய்களால் நெருங்க முடியவில்லை.
கோடைக்காலம் வந்தது. காடு முன்பு போல செழிப்பாக இல்லை. கேரட்டுகளும் கிழங்குகளும் விளையவே இல்லை. இருப்பினும் முயல் அங்கும் இங்கும் தேடித்தேடி சிறிதளவு கேரட்டுகளையும் கிழங்குகளையும் கொண்டு வந்து கரடிக்குக் கொடுத்தது.
கரடி, “நண்பரே, நீ தரும் கேரட்டுகளும் கிழங்குகளும் என் வயிற்றுக்குப் போதவில்லை. நிறைய உணவு கொண்டுவந்து தந்தால் மட்டுமே நான் உன்னுடன் இருப்பேன். இனி நிறைய உணவு கொண்டுவர வேண்டும்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டது.
முயலும் பல இடங்களுக்குச் சென்று கரடிக்கான உணவைத் தேடியது. கேரட்டுகளும் கிழங்குகளும் கிடைக்கவேயில்லை. கரடியிடம் வந்து உணவு கிடைக்கவில்லை என்று பணிவாகச் சொன்னது முயல்.
கரடி முயலிடம், “நீ இப்படி ஒருநாள் என்னை ஏமாற்றுவாய் என்று எனக்குத் தெரியும். இனி நான் உனக்கு நண்பன் இல்லை. நான் உணவு இருக்கும் இடத்தைத் தேடிப் போகிறேன்” என்று கோபத்தோடு அங்கிருந்து போய்விட்டது.
முயல் வருத்தத்தோடு அமர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் அதன் பழைய நண்பர்களான குரங்கும் அணிலும் முயலைத் தேடி வந்தன.
“என்ன வருத்தமாக இருக்கே?” என்று கேட்டது அணில்.
“நான் உணவு கொடுக்காததால் கரடி என்னை விட்டுவிட்டுப் போய்விட்டது” என்று வருத்தத்தோடு சொன்னது முயல்.
குரங்கு முயலிடம், “உண்மையான நட்பு என்பது ஒருவரின் அன்பினால் வர வேண்டும். பரிசு கொடுத்தெல்லாம் நண்பரை வாங்க முடியாது. ஒருவர் தரும் பரிசுக்காக அவரிடம் நட்பு கொள்பவர், அவர் பரிசு கொடுப்பதை நிறுத்திவிட்டால் நட்பையும் விலக்கிக்கொள்வார். கரடி உன் மீதுள்ள அன்பினால் நட்பு கொள்ளவில்லை. நீ கொடுத்த கேரட், கிழங்குகளுக்காக உன்னுடன் நட்பாக இருப்பது போல நடித்தது. கரடியின் நட்பு கிடைத்ததும் நீ எங்களையும் புறக்கணித்தாய். பரவாயில்லை, நாங்கள் உன்மீது அன்பு வைத்திருக்கிறோம்” என்றது.
“நன்றி நண்பர்களே... ஆனாலும், அந்தக் கரடி இருந்தவரை நாய், நரிகள் என்னை அச்சுறுத்தாமல் இருந்தன. இனி என்ன செய்வது?” என்று கேட்டது முயல்.
அணில், “கரடி வருவதற்கு முன்பு நீ இந்தக் காட்டில் வாழவில்லையா? வாழ்க்கையில் எல்லாருக்குமே துன்பமும் அச்சுறுத்தலும் இருக்கத்தான் செய்கிறது. எனக்குக் காட்டுப்பூனையால் ஆபத்து இருக்கிறது. குரங்குக்குச் சிறுத்தையால் ஆபத்து இருக்கிறது. அதற்காகப் பயந்துகொண்டே வாழ முடியுமா? நாங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறோம். உன்னால் வேகமாக ஓட முடியும். கூடவே மண்ணில் குழி தோண்டி மறைந்திருக்கவும் முடியும். பிறகு எதற்காக நாய், நரிகளுக்காகப் பயப்படுகிறாய்? ஒவ்வொரு நாளும் சவாலைச் சந்தித்து, அதை வெற்றி கொண்டு வாழ்வதில்தானே நம் திறமை இருக்கிறது!” என்றது.
அணிலும் குரங்கும் சொன்னதைக் கேட்டு முயலின் மனத்தில் நம்பிக்கை பிறந்தது. அது மீண்டும் மகிழ்ச்சியாகத் துள்ளிக்குதித்தபடி தன் நண்பர்களுடன் புறப்பட்டுச் சென்றது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago