இந்தக் கதையில் வரும் சின்னப் பையனோட பேரு சுரேசு. மீனவ கிராமத்தைச் சேர்ந்தவன். ஒரு தடவ, சில நகரத்துப் பசங்க கடலுக்குள்ள போகணும்னு மீனவ கிராமத்துக்கு வந்தாங்க. அவங்களைக் கட்டுமரத்துல ஏத்திக்கிட்டு கடலுக்குள்ளே கூட்டிட்டுப் போய் காமிச்ச மீனவர்கள்ல நம்ம சுரேசும் ஒருத்தன்.
இந்தக் கட்டுமரம் இருக்கில்ல, அது தண்ணில மூழ்கவே மூழ்காதாம். அதுக்குக் காரணம், பெரிய பெரிய கட்டைகளை நெருக்கமா வைச்சு கட்டினதுதான் கட்டுமரம். அந்தக் கட்டைகளுக்கு நடுவுல சின்னதா இடைவெளி இருக்கும். அதனால, கட்டுமரத்துக்குள்ள கடல் தண்ணி வந்தாலும், இடைவெளி வழியா திரும்பவும் கீழயே போயிடும், படகு போல நிரம்பறது இல்ல. அதனால கட்டுமரம் முழுசா மூழ்கறதே இல்ல.
கடல் சவாரி
அன்னைக்குக் கட்டுமரத்துல கொஞ்ச தூரம் கடலுக்குள்ள போன பின்னாடி, நங்கூரத்தைப் போட்டு தண்ணில நிறுத்திட்டு, சுரேசும் அவனோட அண்ணனும் நீந்துறதுக்குக் கடலுக்குள்ள குதிச்சிருக்காங்க. அந்த இடத்தில் ரொம்ப ஆழம் கிடையாது. அப்போ நகரத்துப் பசங்கள்ல ஒருத்தன், தவறி கடல்ல விழுந்திட்டான். அப்போ அந்தப் பையனைக் காப்பாத்தி, கட்டுமரத்துக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்தது யாரு தெரியுமா? சின்னப் பையன் சுரேசுதான்.
மீனவப் பசங்க சின்ன வயசுலேர்ந்தே நீளமான ஒரு கட்டைய கட்டுமரம் மாதிரி வைச்சுக்கிட்டு, கடல்ல நீச்சலடிச்சு பயிற்சி பண்ணுவாங்க. கடல்ல நீச்சல் அடிச்சு நல்லா பழகியிருப்பாங்க. கரைய நோக்கி வரும் அலைகளை எதிர்த்து நீந்துறதுன்னா சும்மா இல்லையே.
வீரன், தீரன்
கடல் சவாரி முடிஞ்சு எல்லோரும் கட்டுமரத்துல கரைக்கு வந்த பின்னாடி, அந்த நகரத்துப் பசங்க கரையோரமா வெளையாடிட்டு இருந்தப்ப, திடீர்னு ஒரு பெரிய அலை இன்னொரு பையனை ‘சடக்’குனு இழுத்துக்கிட்டுப் போச்சு. அந்தப் பையன் பின்னாடியே நீந்திப்போய், அவனைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு கரையில கொண்டு வந்து சேர்த்ததும் நம்ம சின்னப் பையன் சுரேசுதான்.
கரைக்கு அவங்க ரெண்டு பேரும் வந்த உடனேயே, மத்த பசங்கள்லாம் சுரேசை ‘வீரன், தீரன்'னு பாராட்டுனாங்க. ஆனா, மீனவப் பசங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒரே விஷயம் கடல், கடல், கடல் மட்டும்தான். கடல் அவங்களுக்கு அம்மா மாதிரி.
மலை போன்ற அலை
ஆனா, அந்தப் பெருங்கடலில் திடீர்னு ஒரு நாள் உருவான பெரிய மலை போன்ற அலை மீனவர்கள், மீனவ கிராமங்கள் மேல சாய்ஞ்சிடுச்சு. அதுதான் ஆழிப் பேரலை - சுனாமி. மீன் பிடிச்சுட்டு கரைக்குத் திரும்புன சுரேசோட அப்பாவையும் தாத்தாவையும் அந்தப் பேரலை தூக்கியடிச்சுச்சு. தாத்தா ஒரு பெரிய கட்டையப் பிடிச்சுக்கிட்டு நீந்தி தப்பிச்சாராம்.
ஆனா, அவங்க அப்பாவைக் கடல் அடிச்சுட்டு போயிருச்சு. அவர் திரும்பி வரவேயில்லை. சுரேசுக்குச் சின்ன கட்டுமரம் செஞ்சு கொடுத்து, கடல்ல இறக்கிவிட்டு, நீச்சல் வித்தையெல்லாம் கத்துத் தந்தவர் அவனோட அப்பாதான்.
நல்லவேளையா பேரலை வந்தப்ப சுரேசு கடல் பக்கமா போகல. ரோட்டுக்கு எதிர்ப்பக்கமா இருக்குற கடைக்குப் போயிருந்தான். திரும்பி வந்து பார்த்தா, அவன் வீட்டைக் காணோம். அதையும் பேரலை அடிச்சுக்கிட்டுப் போயிருந்துச்சு. அவனோட அம்மாவும் அக்காவும் பக்கத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க. எல்லோரும் ரொம்ப பயந்து போயிருந்தாங்க.
கடல் பிடிக்கும்
ஆனா, எவ்வளவு நாளைக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? தன்னோட கூட்டாளிப் பசங்களத் தேடி சுரேசு போனான். சிலர் கிடைச்சாங்க, நிறைய பேரைக் காணோம். சுரேசோட பள்ளிக்கூடத்த திரும்பவும் திறக்கப் போறதா சொன்னாங்க. அப்படித் திறந்தா நல்லாயிருக்கும். அப்பதானே அவனோட கூட்டாளிகளைத் தெனமும் பார்க்க முடியும். மறுபடியும் அவங்களோட சேர்ந்து கடல் அலை மேல தெனமும் சவாரி போக முடியும்.
சுரேசுக்கு அவங்க அண்ணன் புதுசா ஒரு சின்ன கட்டுமரம் செஞ்சு தரேன்னு வேற சொல்லியிருக்கான்... சுரேசுக்கு இப்போ ரொம்ப சந்தோசம். எப்பவுமே அவனுக்குக் கடல் பிடிக்கும், இப்பவும் ரொம்பப் பிடிச்சிருக்கு.
தூலிகா பதிப்பகம் வெளியிட்ட ‘கடலும் நானும்’ குழந்தைகள் கதையோட ஒரு பகுதிதான் இது. இந்தக் கதையை எழுதினவர் சந்தியா ராவ், தமிழில் மொழிபெயர்த்தவர் சுபஸ்ரீ.
பேரலையும் வெள்ளமும்
இந்தக் கதையில வர்ற மீனவச் சிறுவன் சுரேசு, மத்த மீனவப் பசங்களப் போலவே கடலைப் பத்தி நல்லா தெரிஞ்சவன். ஆனா, அவனோட தாத்தா, அப்பாவாலகூட ஆழிப் பேரலை வர்றத தெரிஞ்சுக்க முடியல. 2004-ல வந்த ஆழிப் பேரலைல, அவனை மாதிரி மீனவ சமூக மக்கள் தமிழகத்துல நிறையா பாதிக்கப்பட்டாங்க. ஆனா, அவங்க உடைஞ்சுப் போகல. அந்தப் பேரழிவுலேர்ந்து மீண்டு வந்தாங்க. மீனவ சமூகங்கள் கடலைப் பார்த்து பயப்படுறதில்ல, ஆழிப் பேரலைக்கு கொஞ்சம் பயந்தாங்க. இப்ப திரும்பவும் மீண்டு வந்துட்டாங்க.
அதே மாதிரித்தான் அடைமழை பெய்யும்போதும், வெள்ளம் வரும்போதும் மழையும் தண்ணீரும் நமக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. ஆனால், இயற்கைச் சீற்றங்கள் எல்லா காலமும், எல்லா நேரமும் வர்றதில்லை. எப்போதாவது வரும்போது, அவை நமக்குத் துன்பங்களைத் தந்துவிடுகின்றன. அதற்காக மழையையோ, கடலையோ, இயற்கையையோ வெறுக்க முடியாதில்லையா.
ஏன்னா, நாம பிறக்குறதுக்கு முன்னாலேர்ந்து இறக்கிறது வரைக்கும் நாம உயிர் வாழ்றதுக்குத் தேவையான அனைத்தையும் இந்த இயற்கைதான் தருது. நாம எந்த வேலையைச் செஞ்சாலும், அதுல எப்போதாவது தவறு நடக்க வாய்ப்பு இருக்கில்லையா? அதேபோலத்தான் இயற்கையிலும், அதன் செயல்பாடுகளில் எப்போதாவது தவறு நிகழ்ந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது மனிதர்களான நாம எல்லாரோட உதவியோடவும் அதிலிருந்து மீண்டு வந்து, பழையபடி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புறதுதானே நல்லது.
நன்றி: கடலும் நானும், சந்தியா ராவ்,
தமிழில்: சுபஸ்ரீ, தூலிகா வெளியீடு.
தொடர்புக்கு: 044-2433 1639/1117/1118
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago