விஞ்ஞானிகள் என்றால் யாரென்று நமக்கெல்லாம் தெரியும். விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்? ஆராய்ச்சி செய்து ஓர் உண்மையை, புதுமையைக் கண்டறிவார்கள். சரி, இளம்விஞ்ஞானிகள் பற்றித் தெரியுமா? பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் எல்லாருமே இளம்விஞ்ஞானி ஆகலாம். நம் வயதுக்கேற்ப ஆராய்ச்சி செய்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும், அவ்வளவுதான். இதற்காகவே மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும் ‘தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை’ நடத்துகிறது.
இப்படி ஒரு தேசிய மாநாட்டுக்கான ஆராய்ச்சியைத் தன் சக மாணவிகளுடன் தொடங்குகிறாள் மாஞ்சாலை மலைக் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி. 15 கி.மீ.க்கு மேல் தொலைவைக் கடந்து சமவெளிக்கு வந்துதான் லட்சுமி ஏழாம் வகுப்பு படிக்கிறாள். லட்சுமி, அவளுடைய தோழி கோமதி, எட்டாம் வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகள் இதற்காகக் குழுவாகச் சேர்கிறார்கள். இவர்கள் ஐவரும் முத்து டீச்சரின் வழிகாட்டுதலுடன் பனை மரம், அவற்றின் பயன்பாடு, வளர்ப்பு ஆகியவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
மாஞ்சாலை கிராமத்தில் யாருமே ஐந்தாம் வகுப்பைத் தாண்டியதில்லை. லட்சுமிதான் அந்த ஊரிலேயே அதிகம் படித்த பெண். அவள் முதன்முறையாகப் பெற்றோர் இல்லாமல் டீச்சர் முத்து வீட்டில் ஆய்வுக்காகச் சக மாணவிகளுடன் தங்கு கிறாள். மின்விசிறி, கழிப்பிடம் போன்ற மிக அடிப்படையான வசதிகள்கூட மாஞ்சாலையில் கிடையாது. இவற்றை எல்லாம் முதன்முறையாகப் பார்க்கும்போது, அனுபவிக்கும்போது, அவளுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.
அவர்களுடைய ஆய்வை மாநில அளவில் சமர்ப்பிப்பதற்காகச் சென்னையிலுள்ள பெரிய தனியார் பல்கலைக்கழகத்துக்கு ஆசிரியையுடன் செல்கிறாள். அங்கே மாற்றுத்திறனாளி மாணவி ராணியைச் சந்தித்ததும் அவளுடன் லட்சுமி ஒட்டிக்கொள்கிறாள். லட்சுமியின் ஆய்வு தேசிய மாநாட்டுக்குத் தேர்வுபெறுகிறது. தேசிய மாநாட்டில் ஆய்வைச் சமர்ப்பிப்பதற்கு ஒருவர்தான் செல்ல முடியும். சில நிகழ்வுகளால் லட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள காசியில் நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டுக்கு லட்சுமி செல்கிறாள். அந்த மாநாட்டுக்கு ராணியும் உடன் வருகிறாள்.
மாநில மாநாட்டில் விஞ்ஞானிகள் சந்தித்தல் நிகழ்வில் பார்த்த விஞ்ஞானி, ரயில் பயணத்தில் உடன்வந்த பேராசிரியை ஆகியோர் லட்சுமிக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறார்கள். தேசிய மாநாட்டில் லட்சுமியின் ஆய்வு தேர்ச்சி பெற்றதா, இல்லையா என்கிற கேள்விதான் கதையைப் படிக்கும் நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஆனால், அதைவிட முக்கியமான ஒரு விஷயம் லட்சுமிக்கு நிகழ்கிறது. மாநாட்டின் இறுதியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் வாய்ப்பு லட்சுமிக்குக் கிடைக்கிறது. அப்போது இரண்டு முக்கியமான கேள்விகளை லட்சுமி கேட்கிறாள். அந்தக் கேள்விகள்: என்னைப் போல் மலைகிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் படிப்பதற்கான நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி போன்றவை ஏன் எங்கள் கிராமங் களிலேயே இல்லை? பிறகு, பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் ஏன் உரிய கழிப்பிட வசதிகள் இல்லை-இருந்தாலும் பராமரிக்கப்படுவதில்லை?
புதிய கல்விக் கொள்கை, கல்விக்கு அந்த ஒதுக்கீடு, இந்த ஒதுக்கீடு என்றெல்லாம் அறிவிப்புகள் ஆண்டுதோறும் வந்துகொண்டே இருக்கும் நிலையில் லட்சுமி கேட்கும் இந்த அடிப்படைக் கேள்விகள், நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் கேள்விகளாக மட்டுமே தேங்கி நிற்பதை என்னவென்று சொல்வது?
கேள்விகள் கேட்டால்தான் மாற்றம் பிறக்கும். அப்படிக் கேள்வி கேட்கும் லட்சுமியை மலைப்’பூ’ நாவல் வழியாக நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் சிறார் எழுத்தாளர் விழியன். புக்ஸ் ஃபார் சில்ரன் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. கேள்வி கேட்பது குழந்தைகளின் இயல்பு. லட்சுமியைப் போல் நீங்களும் சரியான நேரத்தில் சரியான கேள்விகளைக் கேட்பீர்கள்தானே?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago