“கோதை, பச்சை மிளகாயும் இஞ்சியும் வாங்கிட்டு வரச் சொன்னேன்ல. பச்சை மிளகாய் மட்டும் வாங்கிட்டு வந்திருக்கே... இஞ்சி வாங்கறதுக்கு இன்னொரு தடவை கடைக்குப் போகணுமா?” என்று கேட்டார் அம்மா.
“ஐயோ, மறந்துட்டேன்மா. இதோ ஓடிப்போய் இஞ்சி வாங்கிட்டு வந்துடறேன்” என்றபடி பூங்கோதை மீண்டும் கடைக்கு ஓடினாள்.
நடப்பதை எல்லாம் பூங்கோதையின் அப்பா பார்த்துக்கொண்டிருந்தார்.ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வத்தில் அம்மா சொன்னது பூங்கோதையின் காதில் சரியாக விழவில்லை என்பது அவருக்குப் புரிந்தது.
பள்ளிக்குச் செல்லும்போதும் அடிக்கடி மதிய உணவை மறந்துவிட்டுப் போய்விடுவாள். பிறகு அப்பாதான் கொடுத்துவிட்டு வருவார்.
பள்ளிப் பாடங்களைப் படிக்கும்போதும் டிவியைப் பார்த்துக்கொண்டே படிப்பாள்.படித்து முடித்த பிறகு கேள்வி கேட்டால், படித்ததில் பாதியை மறந்து போயிருப்பாள் பூங்கோதை.
‘ஆறாம் வகுப்பு வந்த பிறகும் இப்படிக் கவனக்குறைவாக இருக்கிறாளே’ என்று பூங்கோதையின் அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவார்கள்.
அம்மாவிடம் இஞ்சியைக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தாள் பூங்கோதை. விடுமுறை என்பதால் காலையில் எழுந்ததிலிருந்தே விளையாடிக்கொண்டிருந்தாள்.
“கோதை, அம்மா சொன்னதை முழுசா காதில் வாங்கிட்டுப் போயிருந்தால் இப்ப மறுபடியும் கடைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லைதானே?” என்று அப்பா கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் பூங்கோதை.
“தோட்டத்துல கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம், வா” என்று அப்பா அழைத்தவுடன் மகிழ்ச்சியாகச் சென்றாள்.
தோட்டத்தில் நின்றிருந்த மாமரத்தில் பருமனான கிளை ஒன்று சற்றுத் தாழ்வாக இருந்தது.“கோதை, இதில் ஊஞ்சல் கட்டலாமா?” என்று கேட்டார் அப்பா.
“என் பிரெண்ட்ஸ் வீட்ல எல்லாம் ஊஞ்சல் இருக்கு. நம்ம வீட்டில் இல்லையேன்னு நினைச்சேன். இப்பவே கட்டறீங்களா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் பூங்கோதை.
“இதோ, கட்டித் தர்றேன். ஆனா ஒண்ணு, காலையிலயும் சாயங்காலத்திலும் மட்டும்தான் ஊஞ்சல் ஆடணும். எந்நேரமும் ஊஞ்சல்ல ஏறி உட்கார்ந்துக்கக் கூடாது சரியா?”என்று அப்பா கேட்க, பூங்கோதை சரி என்று தலையாட்டினாள்.
வீட்டின் பின்புறம் கிடந்த நீளமான கயிறையும் ஏணியையும் எடுத்து வந்தார் அப்பா. அலமாரி செய்வதற்காக வாங்கிய இரண்டு அடி நீள மரக்கட்டை ஒன்றும் கிடந்தது. அதையும் எடுத்து, அதன் இரு பக்கங்களிலும் சிறு துளைகளைப் போட்டார். பிறகு மாமரத்தில் ஏணி வைத்து ஏறி கயிற்றை இரண்டு அடி இடைவெளியில் கட்டி, மரக்கட்டையின் துளைகள் வழியாகக் கோத்து அழகான ஊஞ்சலாக மாற்றினார். பூங்கோதை ஏறி அமர்வதற்குத் தகுந்தாற்போல தரையிலிருந்து மூன்றடி உயரத்திலேயே ஊஞ்சலைக் கட்டியிருந்தார் அப்பா.
“இப்ப ஊஞ்சல்ல உட்காரலாமா?”என்று கேட்டபடியே ஊஞ்சலின் அருகில் வந்தாள் பூங்கோதை.
“இரு இரு...” என்று சொன்ன அப்பா, ஊஞ்சலை சற்று வேகமாக ஆட்டிவிட்டார். அது முன்னும் பின்னுமாக ஆடியது.
“கோதை, இப்ப ஊஞ்சல்ல ஏறி உட்கார்.”
அங்குமிங்கும் ஆடுகின்ற ஊஞ்சலில் பூங்கோதையால் எப்படி ஏறி உட்கார முடியும்? அவளால் ஏற முடியவில்லை.
“ஊஞ்சலை நிறுத்துங்கப்பா. அப்பதானே என்னால ஏறி உட்கார முடியும்?” என்று சிணுங்கினாள் பூங்கோதை.
“ஆடிக்கிட்டிருக்கிற ஊஞ்சல்ல ஏறி உட்கார வேண்டியதுதானே?”
“அது எப்படிப்பா முடியும்? ஊஞ்சல் அசையாம இருந்தால்தானே அதில் ஏறி உட்கார முடியும்?”
அப்பா சிரித்தார்.
“கோதைம்மா, நம்ம மனசும் ஊஞ்சல் மாதிரிதான். நம்ம மனசு அங்கேயும் இங்கேயும் ஆடிக்கிட்டு இருந்தா அதுல எதுவும் ஏறி உட்கார முடியாது. புரியுதா?”
“என்னப்பா சொல்றீங்க?”
“பச்சை மிளகாய், இஞ்சின்னு ரெண்டே பொருள்களைத்தான் அம்மா வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ஆனா, நீ போனில் விளையாடிட்டு அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக்கல. அப்புறம் மறுபடியும் போய் இஞ்சி வாங்கிட்டு வந்தே. நிறைய நாள் கவனக்குறைவா ஸ்கூல் போகும்போது டிபன் பாக்ஸை மறந்துட்டுப் போயிடறே. டிவி பார்க்கிற ஆர்வத்துல பாடங்களை மறந்துடுறே. இதுக்கெல்லாம் என்ன காரணம், சொல்லு பார்க்கலாம்?”
“கவனக்குறைவுதான்ப்பா.”
“சரியா சொன்னே. நாம செய்யற வேலையில முழுக்கவனமும் இருந்தா இப்படித் தவறுகள் நிகழாது. அதுக்கு மனசு ஒரு நிலையா இருக்கணும். ஆடிட்டு இருக்கிற ஊஞ்சல்ல எப்படி ஏறி உட்கார முடியாதோ, அதே மாதிரி அங்கேயும் இங்கேயும் ஆடிட்டு இருக்கிற மனசுல எதையும் ஏற்றி உட்கார வைக்க முடியாது. அதாவது மனசுல பதிய வெச்சுக்க முடியாது. ஆடாம நிலையா நிக்குற ஊஞ்சல்ல ஏறி உட்கார முடியுற மாதிரி, மனசு நிலையா இருந்தாதான் எதையும் வெச்சுக்க முடியும். அது ஸ்கூல் பாடங்களா இருந்தாலும் சரி, மத்த வேலைகளாக இருந்தாலும் சரி. புரிஞ்சுதா?”
“நல்லா புரிஞ்சுதுப்பா. இனி செய்யற வேலையில மட்டும் கவனம் வைக்கறேன். ஒரு வேலையைச் செய்யும்போது இன்னொரு வேலையில கவனத்தைத் திருப்ப மாட்டேன்” என்று பூங்கோதை சொல்லி முடிக்கவும் ஊஞ்சல் அசையாமல் நின்றது.
“ஊஞ்சல்ல போய் ஏறிக்கோ. இப்ப உன் கவனம் எதுல இருக்கணும்?” என்று குறும்பாகக் கேட்டார் அப்பா.
“தெரியுதுப்பா... இப்ப என் கவனம் முழுவதும் ஊஞ்சல் ஆடுறதுல இருக்கணும்”என்று சொல்லிவிட்டு, ஆடத் தொடங்கினாள் பூங்கோதை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago