வாண்டு: ஏய் பாண்டு, ஒரு வாரமா உன்னைப் பார்க்கவே முடியலை. எங்க இருந்த?
பாண்டு: வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன் வாண்டு. மழை பெய்யுறதனால வெளியே போகக் கூடாதுன்னு அம்மா உத்தரவு போட்டுடாங்க. இன்னிக்கு அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்துட்டு வந்துட்டேன். சரி, நீ மழையில நல்லா ஆட்டம் போட்டியா?
வாண்டு: ஸ்கூலுக்கு வேற லீவு விட்டுட்டாங்க. மழையில ஆட்டம் போடணும்னு எனக்கும் ஆசையாத்தான் இருந்துச்சு. எங்கம்மாவும் என்னை வெளியே விடலை. வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கவும் முடியல.
பாண்டு: இப்பவும் தெருவுல தண்ணி தேங்கிக் கிடக்கு. எப்படி வெளியே வந்த?
வாண்டு: உன்னை மாதிரி நானும் டிமிக்கி கொடுத்துட்டு வந்திருக்கேன். இப்போ நான் திரும்பப் போய்டுவேன். தேங்கிக் கிடக்குற மழைத் தண்ணில நீயும் ரொம்ப நேரம் நிக்காதே.
பாண்டு: நானும் தேங்கிக் கிடக்குற மழைத் தண்ணில நிக்க மாட்டேன்பா. வாண்டு நீ வீட்டுக்குப் போனவுடனே கால்களை நல்லா சோப்பு போட்டுக் கழுவிடு.
வாண்டு: எப்பவும் வெளியே வந்துட்டு வீட்டுக்குப் போறப்ப காலை கழுவிட்டுத்தான் போவேன் பாண்டு.
பாண்டு: அது எனக்கும் தெரியும். இப்போ போறப்ப சோப்பு போட்டுக் கழுவிட்டுப் போன்னு சொன்னேன்.
வாண்டு: ஏன் பாண்டு அப்படிச் சொல்ற? சாதாரணமா காலைக் கழுவிட்டுப் போனா போதாதா?
பாண்டு: மழைத் தண்ணில நடந்து வந்தா காலை சோப்பு போட்டுக் கழுவணும்னு எங்கப்பாகிட்ட டாக்டர் அங்கிள் சொன்னாராம். அதைத்தான் உன்கிட்ட சொல்றேன்.
வாண்டு: ஓ... அப்படியா பாண்டு? டாக்டர் அங்கிள் வேற எதுவும் சொன்னாரா?
பாண்டு: இன்னும் நிறைய சொல்லியிருக்காரு. மழைக் காலத்துல வெப்பத்தோட அளவு குறைஞ்சு போறதால நம்மைச் சுத்தியிருக்குற இடத்துல பாக்டீரியாக்கள் இஷ்டத்துக்கு பெருகுமாம். வெப்பம் குறைவா இருக்குறதால, அந்த பாக்டீரியாக்களை சுலபத்துல அழிக்க முடியாதாம். இப்படி பாக்டீரியா, கிருமிகளோடதான் மழை நீர் சேர்ந்து ரோட்டுல தங்குமாம். அது மட்டுமா, நம்ம ஊர்லதான் மழை தண்ணீயோட சாக்கடைத் தண்ணியும் கலந்து நிற்கும்னு உனக்குத் தெரியாதா?
வாண்டு: ஆமா, பாண்டு நீ சொல்றது சரிதான்.
பாண்டு: அதனாலதான சோப்பு போட்டுக் கழுவணும்னு டாக்டர் அங்கிள் சொல்லியிருக்காரு. அது மட்டுமல்ல, தண்ணியையும் நல்லா சூடாக்கி, ஆற வைச்சே குடிக்கணுமாம். தேவையில்லாம பாக்டீயா தாக்கிக் காய்ச்சல், சளின்னு படுத்தா நமக்குத்தான் கஷ்டம்; அதனால நம்ம அம்மா, அப்பாவுக்கும் கஷ்டம்.
வாண்டு: புரியுது பாண்டு… டாக்டர் அங்கிள் சொன்ன மாதிரியே நடந்துக்குறேன். அப்புறம், ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்லணும்னு ஒரு வாரமா நினைச்சுக்கிட்டே இருந்தேன். உன்னைத்தான் பார்க்கவே முடியலையே, இப்ப சொல்லிடுறேன்.
பாண்டு: ரொம்ப முக்கியமான விஷயமா வாண்டு.
வாண்டு: அப்படி இல்லை பாண்டு. நம்மள மாதிரி ஒரு குட்டி ஃபிரண்டோட விஷயம்.
பாண்டு: ஓ... அப்போ சொல்லேன்.
வாண்டு: சரி பாண்டு; கம்ப்யூட்டர்ல நெட் மூலமா இமெயில் அனுப்புறோம் இல்லையா? அப்படி அனுப்புற இ-மெயிலுக்கு விதவிதமா பாஸ்வேர்டு கண்டுபிடிச்சு அமெரிக்காவுல இருக்குற, ஒரு இந்தியச் சிறுமி சாதனை படைச்சிருக்காளாம்.
பாண்டு: ஓ... புதிய விஷயமா இருக்கே. கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன் வாண்டு.
வாண்டு: முதல்ல என்னை முழுசா சொல்லவிடு. இப்போல்லாம் ஒருத்தர் ஒண்ணுக்குப் பதிலா ரெண்டு மூணு இ-மெயில் கணக்கு வைச்சுருக்காங்க, இல்லையா? நிறைய கணக்கு இருக்குறதால ஒவ்வொரு பாஸ்வேர்டையும் ஞாபகத்துல வைச்சுக்க முடியாம மறப்பது சகஜம்தானே?
பாண்டு: ஆமா வாண்டு, எங்கப்பாக்கூட ஒரு நாள் பாஸ்வேர்டை மறந்துட்டுப் புலம்பிட்டு இருந்தாரு.
வாண்டு: ம்... கரெக்ட்டு. அதுபோல நிறைய பேரு திண்டாடுவாங்க, இல்லையா? இந்தப் பிரச்சினைக்குதான் இந்தியச் சிறுமி மீரா மோடி தீர்வு சொல்லியிருக்கா. அந்தக் குட்டிப் பொண்ணுக்கு 11 வயசுதான் ஆகுது. நியூயார்க்குல படிச்சுக்கிட்டு இருக்காளாம். இந்தக் குட்டிப் பொண்ணு தாயம் உருட்டி, அதன்மூலம் பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை உருவாக்குறாளாம். தாயங்களை 5 முறை உருட்டி அதன்மூலம் கிடைக்குற வார்த்தைகளை ஒழுங்குபடுத்தி பாஸ்வேர்டுகளை உருவாக்குறாளாம்.
பாண்டு: தாயத்தை வைச்சு விளையாட மட்டும்தான் முடியும்ணு நினைச்சேன். இப்படிப் பாஸ்வேர்ட்கூட உருவாக்கலாமா?
வாண்டு: குறுக்கக் குறுக்கப் பேசாத பாண்டு. கமுக்கமா தாயத்தை உருட்டி பாஸ்வேர்ட் உருவாக்குறாளாம் மீரா. அதுக்கு இங்கிலீஷ்ல ‘கிரிப்டோகிராபி’ன்னு பேரு. இப்படிப் பாஸ்வேர்டு வேணும்னு யாராவது கேட்டா 2 அமெரிக்க டாலர்கள் (1 அமெரிக்க டாலர் 66 ரூபாய்க்குச் சமம்) வாங்கிட்டு பாஸ்வேர்டு தராளாம். படிச்சுக்கிட்டே இதை ஒரு தொழிலா செஞ்சுக்கிட்டு இருக்கா அந்தக் குட்டிப் பொண்ணு.
பாண்டு: அந்தப் புத்திசாலி குட்டிப் பொண்ணைப் பாராட்டியே ஆகணும் வாண்டு.
வாண்டு: நிச்சயமா பாண்டு. அய்யய்யய்யோ அம்மா வராங்க. தண்ணில நின்னு பேசுறத பார்த்தா திட்டுவாங்க. நான் வரேன் பாண்டு.
பாண்டு: நானும் வரேன் வாண்டு. வீட்டுக்குப் போன உடனே மறக்காம சோப்பு போட்டுக் காலைக் கழுவிடு.
வாண்டு: சரி..சரி... டாட்டா பை...பை..
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
24 mins ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago