கதை: தவளை ராஜாவின் கர்வம்

By கு.அசோகன்

மரங்கள் அடர்ந்த குளத்தூரில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்தது. ஆண்டு முழுவதும் அந்தக் குளத்தில் தண்ணீர் வற்றவே வற்றாது. அதனால் ஊர் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், இரவு நேரத்தில் அவர்களின் தூக்கம் தொலைந்து போனது. காரணம், தவளைகளின் இரைச்சல். மழைக் காலம் என்றால் இரைச்சல் அதிகமாகிவிடும்.

அந்த ஊரே தவளைகளின் சாம்ராஜ்யமாக இருந்தது. இந்தக் குளத்தூருக்கே ராஜா என்று ஒரு தவளை தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்டது.

அடிக்கடி தவளைகளைக் கூப்பிட்டு கூட்டம் நடத்தும் தவளை ராஜா. “நண்பர்களே, நம் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதில் மகிழ்ச்சி. இந்தக் குளம் வற்றாமல் இருப்பதற்குக் காரணம், மழை. நாம் போடும் ‘குர்...குர்...’ சத்தத்தால்தான் மழை வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது.

“ஆமாம் ராஜா...ஆமாம் ராஜா...” என்று எல்லாத் தவளைகளும் குரல் கொடுத்தன.

அந்த வழியே வந்த நரி ஒன்று, தவளை ராஜா சொன்னதைக் கேட்டது. ‘என்னது, தவளைகள் கத்தினால்தான் மழை வருமா? புதுக் கதையாக இருக்கிறதே! ஒருவேளை இந்தத் தவளை ராஜா சொல்வது உண்மையாக இருக்குமோ? இல்லாவிட்டால், இப்படி உறுதியாக எப்படிச் சொல்ல முடியும்? யாரிடமாவது இந்தச் சந்தேகத்தைக் கேட்டு, தெளிவு படுத்திக்கொள்ளாவிட்டால் என் தலையே வெடித்துவிடும்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது நரி.

உடனே காட்டுக்குள் சென்றது. வழியில் ஒரு குதிரை தென்பட்டது.

“குதிரை அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம்...”

“என்ன சந்தேகம்?”

“தவளைகள் குர்குர் என்று கத்துவதால்தான் மழையே வருகிறதா?”

“அப்படியா! எனக்குத் தெரியாது. நேரம் ஆகிறது. நான் போறேன்” என்று வேகமாக ஓடிவிட்டது குதிரை.

சிறிது தூரம் சென்றவுடன் எருமைக் கூட்டம் வந்தது. குதிரையிடம் கேட்ட அதே கேள்வியை ஓர் எருமையிடம் கேட்டது நரி.

“என் மேல் மழை பெய்யுதான்னுகூட எனக்குத் தெரியாது. இதுல தவளை கத்தி மழை பெய்யுதா,கத்தாமல் இருக்கும் போது மழை பெய்யுதா என்ற கவலை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்று சொல்லிவிட்டு, கிளம்பியது அந்த எருமை.

காட்டில் நீண்ட தூரம் நடந்ததால் நரிக்குக் களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கியது. அங்கே பூனை ஒன்று குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

“என்ன பூனை, ஒரே உற்சாகமாக இருக்கறே? நீ புத்திசாலி. என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வைக்கறீயா?” என்று கேட்டது நரி.

“உனக்குச் சந்தேகமா? சரி கேள். தெரிந்தால் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் குட்டிகளோடு விளையாடறேன்” என்று அந்தப் பூனை அவசரப்படுத்தியது.

“தவளைகள் கத்தினால்தான் மழையே வருமா?”

“அப்படியா! இது என்ன புதுக் கதையா இருக்கு! எங்க இனம்கூட கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடும்னு மக்கள் பேசிக்கிறாங்களே...அது உண்மையா?” என்று நரியை மடக்கியது பூனை.

‘நான் ஒரு சந்தேகம் கேட்டால் இந்தப் பூனை ஒரு சந்தேகம் கேட்குதே’ என்று நினைத்த நரி, அங்கிருந்து வேகமாகச் சென்றது.

சிறிது தூரத்தில் நரியின் கண்களில் பெரிய உருவங்கள் தென்பட்டன. ‘அடடா! யானைக் கூட்டம் வருது! சந்தேகத்தைக் கேட்டுப் பார்ப்போம்’ நினைத்தது.

யானைகளின் உடல் முழுவதும் புழுதியாக இருந்தது.

“குளித்து நாளாச்சு போல! உடம்பெல்லாம் ஒரே புழுதியா இருக்கே?” என்று பேச்சுக் கொடுத்தது நரி.

“ஆமாம், குளிப்பதற்குத் தண்ணீரைத் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பெரிய குளம் இருந்தால் சொல்லேன்” என்று கேட்டது ஒரு யானை.

“சொல்றேன். அதுக்கு முன்னால எனக்கொரு சந்தேகம். அதுக்கு பதில் சொன்னா குளத்துக்கு நானே வழி காட்டுறேன்” என்றது நரி.

“என்ன சந்தேகம்? சீக்கிரமா கேள்.உடம்பெல்லாம் அரிக்குது” என்றது யானை.

“தவளைகளுடைய சத்தத்தால்தான் மழை வருகிறதா?”

“யார் சொன்னது? மேகம் திரண்டால் மழை வரும். தவளைக்கும் மழைக்கும் தொடர்பில்லை. ஆனால், மழையைக் கண்டால் தவளைகள் குஷியில் அதிகமாகச் சத்தம் போடும். சரி, குளத்தைக் காட்டு” என்றது யானை.

பதில் கிடைத்தும் நரிக்குத் திருப்தி இல்லை. அனுபவப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியது.

“இதோ வழி காட்டுறேன், வாங்க” என்று நரி முன்னால் சென்றது.

வழியில் பாம்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.

“பாம்புகளே, எங்கே போறீங்க?“ என்றது நரி.

“பெரிய குளமா தேடிப் போறோம்” என்றது ஒரு பாம்பு.

“அப்படியா! யானை அண்ணன் அங்கேதான் போறார். நீங்களும் வாங்க நான் வழி காட்டுறேன்” என்று பாம்புக் கூட்டத்தையும் சேர்த்துக்கொண்டது.

சற்று நேரத்தில் பெரிய குளத்தைக் கண்டது யானைக் கூட்டம். சந்தோஷத்தில் பிளிறியது. பாம்பு கூட்டம் உஸ்... உஸ்... என்று சீறியது.

ஒரு கரையில் யானைகள் குளத்திற்குள் இறங்கின. இன்னொரு கரையில் பாம்புகள் இறங்கின. அவற்றைக் கண்ட தவளைகள் பயத்தில் அலறின.

“ஓடுங்க... ஓடுங்க... ஆபத்து” என்று எச்சரிக்கை செய்தது தவளை ராஜா.

தவளைகளின் சத்தத்தைக் கேட்டு, பாம்புகளுக்கு உற்சாகமாகிவிட்டது.

“தவளைகளே, சத்தம் போடாமல் தப்பிச் செல்லுங்க. இல்லையென்றால் பாம்புகளுக்கு இரையாகிவிடுவீங்க” என்றது தவளை ராஜா.

“ராஜா, சத்தம் போட்டால்தானே மழை வரும்னு சொன்னீங்க? இப்ப சத்தம் போடாதீங்கன்னு சொல்றீங்களே?” என்று கேட்டது ஒரு சுட்டித் தவளை.

“உயிர் முக்கியமா? மழை முக்கியமா? முதலில் உயிர் பிழைக்க உங்கள் வாயை மூடிக்கொண்டு தாவி ஓடுங்கள்” என்று கட்டளையிட்டது தவளை ராஜா.

தவளைகள் அனைத்தும் மௌனமாக இடத்தைக் காலி செய்தன. சட்டென்று மழை கொட்ட ஆரம்பித்தது.

தூரத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த நரி, “அப்பாடா! என் சந்தேகம் தீர்ந்தது. தவளைகள் சத்தம் போடா விட்டாலும் மழை பெய்யும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதே நேரம் தவளை ராஜாவின் கர்வத்தையும் தந்திரத்தால் அடக்கிவிட்டேன்” என்ற பெருமிதத்துடன் காட்டை நோக்கி நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்