வறட்டாறு என்ற ஊரில் தண்ணி வற்றாத ஒரு குளம் இருந்தது. மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் குளத்தில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும். இந்தக் குளத்தில் மீன்கள், தவளைகள், நண்டுகள் எனப் பெருங்கூட்டம் வாழ்ந்துவந்தது. குளத்துக்குள் மீன்கள் வைத்ததுதான் சட்டம். ஏனென்றால், மீன்கள் ரொம்ப அழகாகவும் கூட்டமாகவும் இருந்தன. அதனால் எதுவாக இருந்தாலும், மீன்களே முடிவு செய்யும்.
மீன்களில் ஜூரி என்ற மீனுக்குத் தன் அழகை நினைத்து ரொம்ப கர்வம். யாரையும் மதிக்கவே மதிக்காது. தவளைகளைக் கண்டால் அதற்கு சுத்தமாகப் பிடிக்காது.
“உங்க தோலு மட்டும் ஏன் சொரசொரன்னு புண்ணு வந்தது மாதிரி இருக்கு? என்னோட தோலைப் பாருங்க, எவ்வளவு பளபளப்பா அழகா இருக்கு” என்று தவளைகளைக் கூட்டி தன்னைப் பற்றி பெருமையாகவும், தவளைகளை மட்டமாகவும் பேசிக்கொண்டே இருக்கும்.
அன்றைக்கு ஜூரி மீனுக்குப் பிறந்த நாள்.
தன் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தது ஜூரி. எல்லோரும் தன்னை வந்து வாழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டது. பிறந்த நாள் அன்று நிறைய மேக்கப் போட்டுக்கொண்டது. ஏற்கெனவே அழகாக இருக்கும் ஜூரி மீன், மேக்கப் போட்டதில் தகதகவென ஜொலித்தது.
பிறந்த நாளுக்குத் தவளைகளையும் ஜூரி கூப்பிட்டது. ஆனால், அவற்றை வீட்டுக்குள் விடவேயில்லை. வாசலுக்கு வெளியே நிற்க வைத்துவிட்டது. வாழ்த்த வந்த தவளைகளுக்கு ரொம்பவும் வருத்தமாகப் போய்விட்டது. அதில் அபி என்ற தவளைக்குக் கோபம் தாங்க முடியலை.
“நண்பர்களே... இந்த அவமானம் நமக்குத் தேவையா? மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று அவ்வை பாட்டி சொன்னது உங்களுக்கெல்லாம் மறந்துபோச்சா? கிளம்புங்க, இங்கே ஒரு நிமிடம்கூட இருக்கக் கூடாது” ன்னு சொல்லி கூட்டிக்கிட்டு போனது.
இதைக் கேள்விப்பட்ட ஜூரிக்கு ஒரே கோபம். “அபி என்ன தவளைகளுக்கு தலைவனா? இருக்கட்டும், என்ன செய்கிறேன் பாருங்க” ன்னு மேலயும் கீழயும் குதித்துக் குதித்து கத்தியது.
ஒரு நாள் குளத்துக்குள் விளையாட்டுப் போட்டி நடத்தினார்கள். நீச்சல், டைவ், ஆட்டம்பாட்டம் என்று போட்டிகள் களைகட்டின. இந்த வருஷம் புதிதாக அழகிப்போட்டியும் அறிவித்திருந்தார்கள். எல்லாவற்றிலும் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் போட்டியிலும் ஜூரி மீன்தான் முதல் பரிசு வாங்கியது.
அதைப் பாராட்டி ‘தண்ணிவத்தா குளம் தங்க மீன்’என்ற பட்டம் வேற கொடுத்தார்கள். ஜூரியைப் பிடிக்க முடியுமா? கை நிறைய பரிசுகளோட தவளைகளிடம் வந்தது.
“என்ன பாக்குறீங்க? என்னை ஜெயிக்க உங்க கூட்டத்துல யாருக்காவது திறமை இருக்கா...” என்று சொல்லி ஹா... ஹா...ஹான்னு சத்தம்போட்டு சிரித்தது.
கூட்டத்தில் இருந்த அபி தவளையைப் பார்த்து, “ஏதோ வீர வசனமெல்லாம் பேசுனியாமே. உன் வீரமெல்லாம் இப்போ எங்க போச்சு?” என்று ஏளனமாகக் கேட்டது. அதோடு விடவில்லை.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. ஏதாவது ஒரு போட்டியில என்னை ஜெயிச்சாக்கூட இந்தப் பரிசையெல்லாம் உனக்கே கொடுத்திடுறேன். என்ன போட்டின்னு நீயேகூட சொல்லலாம்” ன்னு அபியை வம்புக்கு இழுத்தது ஜூரி.
அபிக்குக் கோபம் வந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஜூரியோ விடுவதாக இல்லை. கேலியும் கிண்டலும் அதிகமானது. “என்ன, போட்டிக்குத் தயாரா..?” என்று அபியைப் பார்த்து சீண்டிக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் திடீரென்று, “போட்டிக்கு நான் தயார்” என்று அபி சொன்னதும், ஜூரி மட்டுமல்ல, அங்கே இருந்த எல்லாருமே அபியை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
“என்னால முடியுற ஒண்ணு, உன்னால முடியாது” - அபி தவளை, ஜூரி மீனைப் பார்த்து சொன்னது.
“என்னால முடியாதது எதுவுமே இல்லை” - ஜூரி கர்வமாகப் பேசியது.
“எங்கே என்கூட வா பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டே குளத்துக்கு மேலே கரைக்கு வந்து அமர்ந்துகொண்டது அபி.
ஜூரி மீனும் கரைக்கு மேலே வந்தது. ஆனால், மூச்சு முட்டியதால் அதனால் தாக்குபிடிக்க முடியவில்லை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தோல்வியை ஒப்புக்கொண்டது. உடனே தண்ணீருக்குள் குதித்துவிட்டது.
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும், திறமையும் இருக்கும். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லைங்கிறதை புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று அபியைப் பார்த்துச் சொன்னது ஜூரி.
அப்புறமென்ன? அதற்குப் பிறகு எல்லோரும் நண்பர்களாக சந்தோஷமாக இருந்தார்கள் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டுமா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago