நான் புலியை நேசிப்பவன் என்பது உலகுக்கே தெரியும். என் அரண்மனைக்கு வந்தால் விதவிதமான புலி ஓவியங்களையும் பெரிய, பெரிய புலி சிற்பங்களையும் நீங்கள் பார்க்கலாம். திப்பு என்பதைவிட மைசூரின் புலி என்று என்னை அழைப்பதையே விரும்புவேன். அது சரி, எனக்கு ஏன் புலியை இவ்வளவு பிடித்திருக்கிறது?
எனக்குப் புலியின் விழிகள் பிடிக்கும். அதன் பார்வை கூர்மையானது. முற்றிலும் இருள் சூழ்ந்து மறைத்தாலும் நம்மைவிடப் பல மடங்கு தெளிவோடு ஒரு புலியால் அனைத்தையும் காண முடியும். நம் கண்களுக்குப் புலப்படாத அபாயம் அதன் கண்களுக்குப் புலப்பட்டுவிடும். எவ்வளவு அருகில் இருந்தாலும் நமக்குத் தெரியாத எதிரியைத் தொலை தூரத்திலிருக்கும்போதே புலி உணர்ந்துவிடும்.
பதறாதே திப்பு, அவர்கள் வணிகம் செய்ய வந்தவர்கள் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தபோது, நான் இருளைக் கிழித்துக்கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் நிஜ முகத்தைக் கண்டேன். அடடா, எவ்வளவு பண்பானவர்கள் என்று எல்லோரும் ஆங்கிலேயர் நீட்டிய கரங்களைப் பாய்ந்து பற்றிக் குலுக்கி மகிழ்ந்துகொண்டிருந்தபோது, என் விழிகள் அவர்கள் முதுகுக்குப் பின்னால் மறைந்திருந்த துப்பாக்கியைக் கண்டுகொண்டது.
நண்பர்களே, மினுமினுப்பைக் கண்டு மயங்காதீர்கள். உங்கள் முன் நிற்பது ஒரு கொழுத்த மலைப்பாம்பு. அதன் பசி அளவற்றது. நம் ஊர், நம் கிராமம், நம் நகரம், நம் வீதி, நம் மலை, நம் கடல் எதுவும் அதற்குப் போதாது. சற்று சுதாரித்தாலும் அதன் வயிற்றுக்குள் நாம் ஒவ்வொருவரும் போய்விடுவோம் என்று பலமுறை எச்சரித்தேன். ஐயோ திப்பு, உன் சொல்லைக் கேட்காமல் போனேனே என்று வருந்தத் தொடங்கும்போது, அவர்கள் பாம்பின் அடிவயிற்றுக்குப் போயிருந்தனர்.
புலிக்கு அஞ்சத் தெரியாது. இப்படி ஆகிவிட்டதே என்று அது தேம்புவதில்லை. என் எதிரி இவ்வளவு பெரியவனா என்று மலைப்பதும் இல்லை. சீறிப் பாய மட்டுமே தெரியும் அதற்கு. சிலிர்த்து எழ மட்டுமே பழகியிருக்கிறது அதன் உடல். ஒரு புலியின் கண்முன்னால் அதன் இனத்துக்கு ஒருவரும் பாதகம் செய்துவிட முடியாது.
எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை புலி. புதிது புதிதாகக் கற்கவும் தேவைக்கு ஏற்ப புதிய புதிய உத்திகள் வகுத்துக்கொள்ளவும் ஒருபோதும் அது தயங்குவதில்லை. என் தேசத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிரிட்டனிடம் கப்பல் இருக்கிறதா? நானும் கட்டுவேன் நூறு கப்பல்கள். துப்பாக்கி ஏந்தியிருக்கிறானா? அவனை நோக்கிப் புறப்பட்டு வரும் என் பீரங்கிகள். அறிவியல் கற்றவனா? தேசத்தைக் காக்க நானும் கற்பேன்
அறிவியல். ஆக்கிரமிப்பவனுக்குத் துணை போகும் என்றால் விடுவிக்கப் போராடும் என் கரங்களுக்கு மட்டும் சிக்காமல் போய்விடுமா தொழில்நுட்பம்?
முழு இந்தியாவும் வீழ்ந்துவிட்டது. மைசூர் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது என்றால் என் மைசூர் மட்டும் தனித்து நின்று போராடும். மைசூரில் வேறு யாரும் இல்லாது போனாலும் திப்பு மட்டும் தனித்து நின்று தன் வாளை இறுதிவரை சுழற்றிக்கொண்டிருப்பான். புலி தனித்திருக்க அஞ்சியதில்லை.
உயிரா, சுதந்திரமா என்று கேட்டால் நானும் என் புலியைப் போல் முழங்குவேன், சுதந்திரம். எப்படிப் புலியிடமிருந்து அதன் இதயத்தில் உறைந்திருக்கும் காட்டை அகற்ற முடியாதோ, அதே போல் என் இதயத்தில் நான் ஏந்தியிருக்கும் என் நாட்டையும் ஒருவராலும் அகற்ற முடியாது. என் படை, என் பதவி, என் குடும்பம், என் குழந்தைகள், என் வாழ்க்கை எதை இழக்க நேர்ந்தாலும், என் தன்மானத்தை மட்டும் இழக்க மாட்டேன். என் கண்களிலிருந்து ஒளி மறையும்வரை, என் இறுதிச் சொட்டு குருதி நிலத்தில் கலக்கும்வரை திப்பு போராடிக்கொண்டிருப்பான்.
புலி என்பது உருவில் பெரிய பூனை. அதன் தோல் மெய்யாகவே மிருதுவானது. அழகிய வரிகளைக் கொண்டது. தான் உண்டு தன் காடு உண்டு என்று ஒரு மூலையில் சலசலப்பின்றி அடங்கிக் கிடக்கத்தான் அது விரும்புகிறது. பறந்து திரியும் பறவைகளோடு, மரங்களோடு, செடிகளோடு, மலர்களோடு, விலங்குகளோடு, சக உயிர்களோடு இணைந்து வாழும் ஓர் எளிய உயிர்தான் அது. ஆனால், அதன் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், அதன் உரிமைகளை மதிக்காமல் அத்துமீறும்போது காடு போல் சிலிர்த்து எழுகிறது புலி.
அவ்வாறே என் நாடும் சிலிர்த்து எழும். ஆதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கா திரண்டதுபோல், கொடுங்கோன்மைக்கு எதிராக பிரான்ஸ் திரண்டதுபோல், ஆக்கிரமிப்புக்கு எதிராக எனது இந்தியா திரண்டு நிற்கும். சிங்கத்தைத் தன் சின்னமாக வைத்துக்கொண்டிருக்கும் பிரிட்டனை, புலி போல் பாய்ந்து எனது இந்தியா வீழ்த்தும்.
நான் சுதந்திரத்தை நேசிப்பதால் புலியை நேசிக்கிறேன்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago