கதை: எங்கே கோபுரக் கலசம்?

By செய்திப்பிரிவு

மரகதபுரி நாட்டைச் சித்திரசேனன் மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவர் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்படி இருந்த போதிலும் ஒரு நாள் கோயில் கலசம் திருடு போய் விட்டது.

சித்திரசேனன் ஆட்சியில் யார் திருடியிருப்பார்கள் என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கவலைப்பட்டனர். கோபுரக் கலசத்தைத் திருடியவர்கள் தங்கள் வீடுகளில் கைவரிசையைக் காட்டி விடுவார்களோ என்று பயந்தனர்.

மக்களின் பேச்சுகள் மன்னரின் செவிகளுக்கு எட்டின. அவரின் ஆட்சிக்கு வந்த களங்கமாக எண்ணினார். அந்தக் களங்கத்தை துடைக்க மந்திரியிடம் ஆலோசனை நடத்தினார்.

“மன்னா, எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள்.திருடனைக் கண்டுபிடிக்கும் வழியை யோசிக்கிறேன்” என்றார் மந்திரி.

மன்னரும் மந்திரிக்கு அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மன்னரிடம் வந்தார் மந்திரி.

“மன்னா, நாட்டின் பிரஜைகள் யாரும் வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது. வெளியூர் சென்றவர்கள் உடனே ஊர் திரும்ப வேண்டும் என்றும் தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார் மந்திரி.

“அப்படியே செய்கிறேன்.”

“ஒரு வாரம் கழித்து மக்கள் பொது இடம் ஒன்றில் கூட வேண்டும் என்றும் அறிவிக்க வேண்டும் மன்னா.”

மன்னரும் தண்டோரா மூலம் அந்தச் செய்தியை ஊர் மக்களுக்குத் தெரிவித்தார்.

அன்று ஊர் மத்தியில் பொது மேடை அமைக்கப்பட்டு, அதில் மன்னரும் மந்திரிகளும் அமர்ந்திருந்தனர். மேடைக்கு எதிரே ஒரு பெரிய கொப்பரை வைக்கப்பட்டிருந்தது. கொப்பரையில் நீர் நிரப்பப்பட்டு, அதிலிருந்து குபுகுபுவென ஆவி வந்துகொண்டிருந்தது.

பொது இடத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். அவர்களிடம் ஒரு விதமான அச்சமும் பீதியும் ஏற்பட்டிருந்தது. மேடையில் அமர்ந்திருந்த மந்திரி எழுந்தார்.

“பொது மக்களே, நம் புராதன ஆலயத்தின் கோபுரக் கலசம் திருடு போன விஷயம் நீங்கள் அறிந்ததே.இப்போது நாம் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காகக் கூடியிருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதோ இந்தக் கொப்பரையில் உள்ள நீர் நியாய தேவதையின் அருள் பெற்றது. இதில் நீங்கள் உங்கள் இரு கைகளையும் நனைக்க வேண்டும். குற்றமற்றவர்களை இந்த நீர் எதுவும் செய்யாது. குற்றவாளியின் கைகளை வேக வைத்து விடும். அவர்கள் கைகள் புண்ணாகிச் சிறிது காலத்தில் அழுகி, துண்டாகி விடும். இப்போது எல்லோரும் தங்கள் கைகளை நனைக்க வர வேண்டும்”என்றார்.

திருடரைக் கண்டுபிடிக்கும் முயற்சி ஆரம்பமானது. மக்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து கொப்பரை நீரில் கைகளை நனைத்து விட்டு, கொதிநீர் தங்களை எதுவும் செய்யவில்லை என்று மகிழ்ச்சியுடன் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த இருவருக்குக் கொப்பரையை நெருங்க நெருங்க கைகள் நடுங்க ஆரம்பித்தன.

கொப்பரை நீரில் கைகளை விட்டால் கைகள் போய்விடுமே என்ற அச்சம் அடிவயிற்றைப் பிசைந்தது. அவர்கள் இருவரும் சட்டென்று மன்னர் அமர்ந்திருந்த மேடையின் முன் விழுந்து வணங்கினர்.

“மன்னா, எங்களை மன்னித்து விடுங்கள். தங்கத்துக்கு ஆசைப்பட்டு, கோபுரக் கலசத்தைத் திருடியது நாங்கள்தான். திருடிய பொருளைத் தங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். கைகளை இழக்கும் தண்டனையை எங்களுக்குக் கொடுத்து விடாதீர்கள்”என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.

மன்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார். திருடர்கள் பிடிபட்டது கண்டு மக்களும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்கள்.

அரண்மனையில், “மந்திரியாரே, அடுப்பும் இல்லாமல், நெருப்பும் இல்லாமல் கொப்பரையில் நீர் கொதித்தது எப்படி? உண்மையில் அது நியாய தேவதை வழங்கியதா?”என்று கேட்டார் மன்னர்.

“மன்னா, அது ரகசியம். இருப்பினும் தங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது என் கடமை. இதோ பாருங்கள்” என்று மந்திரி ஒரு கண்ணாடி புட்டியை எடுத்துக் காட்டினார்.

“என்ன இது?”

“இது ஒரு ரசாயன திரவம். இதில் சில துளிகளை நீரில் விட்டால் நீர் கொதி நிலைக்குச் சென்று, ஆவியாகும். பார்ப்பதற்கு நீர் கொதிப்பது போலிருந்தாலும் நீர் குளிர்ந்தே இருக்கும். அதனால் தான் மக்கள் நீரில் கைகளை நனைத்தும் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. திருடர்களுக்கு பயம் ஏற்படும் அல்லவா! அதனால் திருடர்கள் கைகளை நனைக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறாகவில்லை. திருடர்கள் பயத்திலேயே உண்மையை ஒப்புக்கொண்டார்கள்” என்று மந்திரி விளக்கம் அளித்தார்.

மன்னர் மந்திரியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி, பரிசும் கொடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்