சிவப்பிக்கோழி தனக்குச் சொந்தமான நிலத்தை உழுது, விவசாயம் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து, மகிழ்ச்சியாக வாழ விரும்பியது.
வயல் ஓரத்தில் சில கோதுமை மணிகளைக் கண்டது. அப்போது அருகில் வசிக்கும் வாத்து, பன்றி, எலி ஆகிய மூன்றும் சிவப்பிக்கோழியைப் பார்க்க வந்தன. உடனே, “கோதுமை மணிகளை விதைக்க உங்களில் யாராவது உதவுவீர்களா?" என்று கேட்டது சிவப்பிக்கோழி.
யாரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. வாத்து, “நிலத்தில் இறங்கி வேலை செய்ய என்னால் முடியாது. கோதுமை பயிரிடுவதற்குப் பதிலாக, காபி பயிரிடலாமே? கோதுமையைவிட அதிக விளைச்சல் தரும். கணிசமான லாபம் கிடைக்கும். என்னிடம் உள்ள காபி நாற்றுகளை உனக்கு விற்பனை செய்கிறேன்" என்றது.
அருகில் இருந்த காட்டுப்பன்றி, “அதுவும் சரிதான். நீ அறுவடை செய்யும் காபி விதைகளைநான் விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறேன்" என்றது.
ஓடி வந்த எலி, “காபிச் செடிகளை வாங்க, நான் உனக்குக் கடன் தருகிறேன்" என்றது.
சிவப்பிக்கோழிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று காபி பயிரிட்டது.
நாட்கள் சென்றன. காபிச் செடிகளைப் பராமரிப்பதில் சிக்கல் வந்தது. முறையாகக் களை எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, பக்கக் கன்றுகளை அகற்றி, நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும். அனுபவசாலிகளின் உதவி கிடைத்தால் நல்லது. உடனே வாத்து, பன்றி, எலி ஆகியோரைச் சந்தித்து, உதவி கேட்டது சிவப்பிக்கோழி.
“அதெல்லாம் முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனாலும் வேறு விதத்தில் உனக்கு உதவ முடியும். பயிர்கள் செழித்து வளரவும்விளைச்சலை அதிகரிக்கவும் தரமான உரம் தேவை. நான் வைத்திருக்கும் உரத்தை உனக்குத் தருகிறேன்” என்றது வாத்து.
சற்றும் தாமதிக்காத பன்றி, “காபிச் செடிகளைப் பூச்சிகள் தாக்காமல் பாதுகாப்பது அவசியம். மகசூல் அதிகரிக்க அதுவே வழி. அதற்காக, நான் உனக்குத் தரமான பூச்சிக்கொல்லி மருந்து தருகிறேன். காபிச் செடிகளை நோய் தாக்காமல் காப்பாற்றலாம். விளைச்சலும் அமோகமாக இருக்கும்” என்றது.
இருவருக்கும் இடையில் புகுந்து வந்த எலி, “பூச்சிக்கொல்லி மருந்தும் உரமும் வாங்க உனக்குப் பணம் தருகிறேன்” என்றது.
மகிழ்ந்த சிவப்பிக்கோழி, வாத்து தந்த உரத்தை வாங்கிக்கொண்டது. பன்றியிடம் வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து, பயிர்களைப் பாதுகாத்தது.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சிவப்பிக்கோழிக்கு ஓர் உண்மை புரிந்தது. கோதுமை பயிரிட்டிருந்தால் ஆகும் செலவைவிட, காபிச் செடிகளை வளர்க்க அதிகம் செலவானது.
அறுவடை செய்யும் காபி விதைகளைச் சந்தையில் விற்றால், நிறையப் பணம் கிடைக்கும் என்பது மட்டும் சிவப்பிக்கோழிக்கு ஆறுதலான விஷயமாக இருந்தது. அதை நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டது.
சில மாதங்களுக்குப் பிறகு காபி விதைகளை அறுவடை செய்தது. இப்போது மேலும் ஒரு பிரச்சினை வந்தது. அறுவடை செய்த காபி விதைகளை எங்கே, எப்படி விற்பனை செய்துவது என்று சிவப்பிக்கோழிக்குத் தெரியவில்லை.
வாத்தைச் சந்தித்து, “அறுவடை செய்த காபி விதைகளைச் சந்தையில் விற்க உதவுவாயா?” என்று கேட்டது.
வாத்து,“சந்தை நிலவரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், மொத்தமாக விற்காமல் அவற்றைப் பக்குவமாக வறுத்து, பதப்படுத்தி விற்றால் அதிக லாபம் கிடைக்கும். காபி விதைகளைப் பதப்படுத்த, நீ வேண்டுமானால் என் தொழிற்சாலையைப் பயன் படுத்திக்கொள்” என்றது.
அப்போது அங்கு வந்த பன்றி, “இந்த ஆண்டு, உன்னைப் போல நிறையப் பேர் காபியைப் பயிரிட்டிருக்கிறார்கள். காபியின் சந்தை மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. நீ நிர்ணயம் செய்யும் நியாய விலைக்குக்கூட அவற்றை வாங்க யாரும் வரமாட்டார்கள். குறைந்தபட்ச விலைகூடக் கிடைக்காது” என்று கவலை தெரிவித்தது. சிவப்பிக்கோழி அதிர்ச்சி அடைந்தது.
எலி, “இதுவரை, நீ என்னிடம் கடனாகப் பெற்ற பணத்தை இப்போதே திருப்பித் தந்துவிடு. வட்டியுடன் தர வேண்டும்” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டது.
சிவப்பிக்கோழிக்கு உண்மை புரிந்தது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, காபி பயிர் செய்தது தவறு என்பதை உணர்ந்தது.
உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய சிவப்பிக்கோழி,காபி விதைகளைக் குறைந்த விலைக்கு விற்றது. வாத்துக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைத் திருப்பித் தந்தது. கையில் பணம் இல்லை.
மறுபடியும் உதவியை நாடிச் சென்றது சிவப்பிக்கோழி. “பசியாற ஏதாவது தந்து உதவுவீர்களா? ” என்று நண்பர்களிடம் கேட்டது.
அதைக் கேட்ட வாத்து, “உணவுப் பொருட்களை வாங்க, உன்னிடம் பணம் இருக்கிறதா?” என்று இறுமாப்புடன் கேட்டது.
அருகில் இருந்த பன்றி, “ஊரில் உள்ள நில உரிமையாளர்கள் எல்லோரும் உணவு தானியங்களைப் பயிர் செய்யாமல், காபியை வளர்க்கிறார்கள். ஊர் முழுவதும் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடப் போகிறது. உணவுத் தேவைக்கு மாற்று வழி உண்டா என்று யோசனை செய்” என்றது.
இந்த நிலைமை உருவாக யார் காரணம் என்பதைச் சிவப்பிக்கோழி புரிந்துகொண்டது.
ஓடி வந்த எலி, “நீ என்னிடம் கடனாகப் பெற்ற பணத்தை முழுமையாகத் திருப்பித் தரவில்லை. அதற்குப் பதிலாக, நான் உன் நிலத்தை எடுத்துக்கொள்கிறேன். நான் உனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக எண்ண வேண்டாம். உன்னைக் கைவிட மாட்டேன். நிச்சயமாக நீயும் என்னுடன் தங்கியே இருப்பாய். ஆனால், ஒரு வித்தியாசம். இனி நீ, எனக்காக உழைக்கப் போகிறாய். உன்னை ஒன்றும் ஏமாற்ற மாட்டேன். உழைப்புக்கு ஏற்ற கூலியை உறுதியாகத் தந்து விடுவேன்” என்றது.
ஒரு நிலத்தின் உரிமையாளர் எப்படித் தன் சொந்த நிலத்திலேயே கூலிக்கு வேலை செய்பவராக மாற்றப்படுகிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டது சிவப்பிக்கோழி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago