இந்த உலகை மேம்படுத்தும் பணிக்குப் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் பங்களித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டில் முக்கியப் பங்களித்த சிறாரும் குழந்தைகளும்:
கிரெட்டா துன்பர்க் (17)
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இளம் போராளி ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க்.அவருடைய நாட்டைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு கிரெட்டாவின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். அத்துடன் போர்த்துக்கீசிய நாட்டின் மனிதநேயத்துக்கான குல்பென்கியன் (Gulbenkian) பரிசை கிரெட்டா பெற்றார். அந்தப் பரிசின் மூலம் கிடைத்த ஒரு மில்லியன் யூரோ பரிசுத் தொகையைப் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கினார். முன்னதாக, ‘டைம்’ இதழின் 2019-ம் ஆண்டின் சிறந்த நபர் என்கிற கௌரவத்தையும் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப் பரிசையும்(2019) அவர் பெற்றிருந்தார்.
கீதாஞ்சலி (15)
அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் முதன்முறையாக ஆண்டின் சிறந்த குழந்தையை அறிவித்தது. அந்த கௌரவத்தைப் பெற்றவர் இந்திய - அமெரிக்கச் சிறுமி கீதாஞ்சலி (15). கொலராடோ மாகாணத்தில் வசித்துவரும் அவர் ஒரு சிறார் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளரும்கூட.அவர் கண்டறிந்த கருவி மூலம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரீயம், குடிநீரில் கலந்திருப்பதைக் கண்டறிய முடியும். கார்பன் நுண்குழாய்கள் மூலம் குடிநீரில் இருக்கும் காரீயத்தை இந்தக் கருவி கண்டறிகிறது. Tethys என்று இந்தக் கருவிக்கு அவர் பெயர் சூட்டியுள்ளார்.
ரிதிமா (12)
சுற்றுச்சூழல் பிரச்சினைகளைச் சரியான விதத்தில் கையாளவில்லை என்று குற்றஞ்சாட்டி மத்திய அரசுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தபோது ரிதிமாவுக்கு ஒன்பது வயது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகளைச்சில நாடுகள் உரிய முறையில் பின்பற்றவில்லை என்பது குறித்து ஐ.நா.வில்புகார் அளித்த இளம் பசுமைப் போராளிகள் 16 பேரில் ரிதிமாவும் ஒருவர். உத்தராகண்டைச் சேர்ந்த இவர் பிபிசி 2020-ம் ஆண்டின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
வினிஷா உமாசங்கர் (14)
திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி வினிஷா, சூரிய ஆற்றல் மூலம் செயல்படும் இஸ்திரிப் பெட்டியைக் கண்டறிந்துள்ளார். இதன்மூலம் இஸ்திரி பெட்டிகளைச் சூடேற்ற கரியைப் பயன்படுத்த வேண்டியதில்லை. காற்றை மாசு படுத்தாமல் இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஆற்றலையே பயன்படுத்த முடியும். இவருடைய இந்த முயற்சியைப் பாராட்டி ஸ்வீடனைச் சேர்ந்த அறக்கட்டளை குழந்தைகளுக்கான பருவநிலை விருதை வழங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வினிஷா கண்டுபிடித்துள்ளது போன்ற முயற்சிகள் பெருமளவு கைகொடுக்கும்.
சாதத் ரஹ்மான் (17)
2020-ம் ஆண்டுக்கான குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த சாதத் ரஹ்மான். இணையவழி மிரட்டல், சித்திரவதைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ‘சைபர் டீன்ஸ்‘ என்கிற செயலியையும் சமூக அமைப்பையும் நடத்திவருவதைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருடைய நாட்டில் 15 வயதுச் சிறுமி ஒருவர் இணையவழி மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டார். இதனால் உத்வேகம் பெற்ற சாதத், இளைஞர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கினார். பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து 45,000 இளைஞர்கள், குழந்தைகளுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
நிஹல் சரின் (16)
கேரளாவைச் சேர்ந்தவர். 6 வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். 2014-ம் ஆண்டு 10 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘வேர்ல்ட் யூத் செஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியில் தங்கம் வென்றார். பிறகு பல்வேறு உலகப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களைக் குவித்தார். 2018-ம் ஆண்டு 14 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்றார்! 2020-ம் ஆண்டு கோவிட்-19 காரணமாக இணையம் மூலம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பாக, ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் நடத்தப்பட்டன. 163 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் நிஹல் சரினும் திவ்யா தேஷ்முக்கும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். அப்போது இணைப்பு துண்டிக்கப்பட்டதால், இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாகப் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. 96 வருட செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறை பட்டம் வென்றிருக்கிறது இந்திய அணி.
டி. குகேஷ் (14)
தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வயது குகேஷ், இந்திய சதுரங்க விளையாட்டின் மற்றும் ஒரு பெருமிதம். 5 வயதிலிருந்து சதுரங்கம் விளையாடி வருகிறார். 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் வரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 5 தங்கப் பதக்கங்களைக் குவித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்றதன் மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2020-ம் ஆண்டு இணையம் வழியாக நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
உதித் சிங்ஹால் (18)
டெல்லியைச் சேர்ந்த உதித் சிங்ஹால், கண்ணாடி பாட்டில்களை வீசுவதன் மூலம் நிலம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தார். ’க்ளாஸ்2சான்ட்’ என்ற அமைப்பை ஆரம்பித்து, பாட்டில்களைச் சேகரித்து, மறு உபயோகம், மறு உருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஐ.நா.வின் ’யங் லீடர் ஃபார் தி சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து 17 இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் உதித் சிங்ஹாலும் ஒருவர்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago