கதை: காட்டுத் தீயை அணைத்த குருவி

By கீர்த்தி

கோடை காலம் ஆரம்பமாகியிருந்தது. காட்டில் வெயில் கடுமையாகவே இருந்தது. மேற்கு திசையிலிருந்து கோடைக் காற்று வீசியது. அப்போது உயரமான இரு முற்றிய மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் சட்டென்று தீப்பற்றிக்கொண்டது. அருகில் நின்றிருந்த மற்ற மூங்கில் மரங்களுக்கும் தீ பரவியது.

நெருப்பைக் கண்டு குரங்குகள் அலறின. அந்தச் சத்தத்தைக் கேட்ட மற்ற விலங்குகள் ஓடிவந்தன.

“ஐயோ... காட்டுத் தீ சீக்கிரம் பரவிவிடுமே... இங்கிருந்து ஓடிவிடுவோம். ஆற்றின் அக்கரைக்குச் சென்றுவிடுவோம்” என்று சொல்லிவிட்டு, மான்கள் ஓடின.

மான்களைக் கண்ட கரடிகள் இன்னொரு திசையில் ஓட ஆரம்பித்தன. நரிகள் வடக்கு திசை நோக்கி ஓடின. குருவி ஒன்று இவற்றை எல்லாம் மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தது.

‘மண்ணைக் கொட்டினால் நெருப்பு அணைந்துவிடுமே’ என்று நினைத்தது.

உடனே மரத்திலிருந்து ஆற்றங்கரைக்குப் பறந்து போனது. ஆற்றில் மூழ்கி எழுந்தது. பிறகு ஆற்று மணலில் புரண்டது.

குருவி நெருப்புக்கு அருகே வந்து தன் உடலை உதறியது. மணல் துகள்கள் நெருப்பில் விழுந்தன. மூங்கில் புதரே பற்றி எரியும்போது குருவியின் உடலிலிருந்து விழுந்த சிறிதளவு மணலால் எப்படி நெருப்பை அணைக்க முடியும்?

ஆனாலும் குருவி அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஆற்றங்கரைக்கு ஓடுவதும் மணலில் புரள்வதும் மீண்டும் பறந்துவந்து நெருப்பில் உதறுவதுமாக இருந்தது.

அதற்குள் மூங்கில் புதரில் நெருப்பு பரவிய செய்தி காட்டுராஜாவான சிங்கத்துக்கு எட்டியது. உடனே ஓடிவந்தது.

குருவி நெருப்பின் மீது பறந்து கொண்டிருப்பதைப் பார்த்த சிங்கம், “குருவியாரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்? காட்டிலுள்ள மற்ற விலங்குகள் எல்லாம் இந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வேறு திசைக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன. உயிரின் மீது அக்கறை இல்லையா?” என்று கேட்டது.

“அரசே, நெருப்பின் மீது தண்ணீரைக் கொட்டினாலும் மணலைக் கொட்டினாலும் நெருப்பு அணைந்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் ஆற்று மணலில் புரண்டு என் மீது ஒட்டுகின்ற மணலை நெருப்பின் மீது போட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றது குருவி.

குருவி சொன்னதைக் கேட்டுச் சிங்கம் ஆச்சரியப்பட்டது. ஒரு சிறு குருவி இந்த நெருப்பை அணைக்க முடியும் என்று நம்பி, தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், பெரிய விலங்குகள் எல்லாம் பயந்து ஓடுகின்றன. இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்த சிங்கம், கர்ஜித்தது.

நெருப்புக்குப் பயந்து ஓடிக்கொண்டிருந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிங்கராஜாவின் அழைப்புக் குரல் கேட்டது. அவை திரும்பி வந்தன.

“நண்பர்களே, நெருப்பின் மீது தண்ணீரையும் மணலையும் கொட்டினால் நெருப்பு அணைந்துவிடும் என்று இந்தக் குருவி சொல்கிறது. நாம் ஏன் அப்படி முயற்சி செய்து பார்க்கக் கூடாது? சிறிய மூங்கில் புதரில் மட்டும்தானே இப்போது நெருப்பு பற்றியிருக்கிறது... முதலில் மூங்கில் புதரைச் சுற்றி ஈர ஆற்றுமணலைக் கொண்டு வந்து போடுங்கள். அப்படிச் செய்தால் நெருப்பு மற்ற மரங்களுக்குப் பரவாது. பிறகு மணலையும் தண்ணீரையும் கொண்டுவந்து நெருப்பின் மீது கொட்டுங்கள்” என்றது.

சிங்கராஜாவின் உத்தரவைக் கேட்ட விலங்குகள் உடனே களத்தில் இறங்கின. சிங்கராஜாவும் தன் பங்குக்கு வேலை செய்தது.

மான்கள் ஆற்றங்கரைக்குச் சென்று கொம்புகளால் ஆற்று மணலைக் கிளறிக் கொடுத்தன. முயல்களும் கரடிகளும் ஆங்காங்கே கிடந்த தென்னம்பாளைகளில் ஆற்று மணலை நிரப்பிக் கொண்டு வந்து நெருப்பைச் சுற்றிப் போட்டன. நெருப்பு ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது.

யானைகள் ஆற்று நீரைத் தும்பிக்கையால் உறிஞ்சி, நெருப்பின் மீது பாய்ச்சின. நெருப்பு அணையத் தொடங்கியது. குரங்குகளும் சிறிய மூங்கில் துண்டுகளில் ஆற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றின. காண்டாமிருகங்கள் சிறுசிறு நெருப்புக் கங்குகளைக் காலால் மிதித்து அணைத்தன.

சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு மூங்கில் புதரில் பற்றியிருந்த நெருப்பு அணைந்தது. விலங்குகள் எல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

சிங்கராஜா அனைத்து விலங்குகளையும் அழைத்து, “நண்பர்களே, நாம் அனைவரும் சேர்ந்து காட்டுத் தீயை அணைத்துவிட்டோம். கோடை காலத்தில் மூங்கில் மரங்கள்தான் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றிக் கொள்ளும். அதனால் மூங்கில் புதர்களைச் சுற்றியுள்ள செடிகொடிகள், சருகுகளை அப்புறப்படுத்திவிடுங்கள். ஒருவேளை மூங்கில்கள் தீப்பற்றினாலும் நெருப்பு மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும். இப்போதே அந்தப் பணியை நாம் செய்யத் தொடங்குவோம்” என்றது.

சிங்கராஜா சொன்னதை மற்ற விலங்குகளும் பறவைகளும் ஏற்றுக்கொண்டன.

“காட்டுத் தீயை அணைத்த குருவியை மனதாரப் பாராட்டுகிறேன்” என்றது சிங்கராஜா.

“யானை, மான், காண்டாமிருகம், முயல் என அனைத்து விலங்குகளும் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. குருவியை மட்டும் பாராட்டுவது ஏன்?” என்று கேட்டது சிறுத்தை.

“காட்டுத் தீ பற்றியதைப் பார்த்து மற்றவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். ஆனால், சிறிய குருவி நாம் வாழும் காட்டைக் காப்பாற்ற நினைத்தது. அது நெருப்பைத் தன்னால் அணைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ஆற்று மணலில் புரண்டு, தன் சிறகுகளில் ஒட்டிய மணலை நெருப்பின் மீது போட்டது. அந்த நம்பிக்கைக்குதான் இந்தப் பாராட்டு” என்றது சிங்கராஜா.

விலங்குகளும் பறவைகளும் கைதட்டின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்