ஜோக்கிஸ்தான் நாட்டை குய்யோமுறையோ என்ற மன்னர் ஆண்டு வந்தார். எவரையும் மதிக்க மாட்டார். அவருடைய முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாது. அரசவையில் வேலை செய்பவர்களுக்கு, மன்னர் எந்த நேரத்தில் என்ன சொல்வாரோ என்று பதற்றமாகவே இருக்கும். மக்களின் நிலைமையோ இன்னும் மோசமாக இருந்தது.
அன்று அரசவையில் மன்னர் குய்யோமுறையோ மந்திரிகளைப் பார்த்துக் கேட்டார்: “என்னை இந்த நாட்டில் எல்லோரும் மதிக்கின்றனரா?”
உடனே அவையில் கூடியிருந்த அனைவரும் “ஆம் மன்னா!” என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
முக்கிய மந்திரி அப்பிராணியார் முன்னால் வந்து, “மன்னா,உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்.காலையில் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உங்கள் படத்தை வணங்கிய பிறகே தங்கள் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். உங்கள் பெயரைச் சொன்னால், தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள்கூட வணக்கம் சொல்கின்றனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகள்கூடத் தங்கள் பெயரைக் கேட்டால், அவற்றின் மொழியில் வணக்கம் என்று கத்துகின்றன. இவற்றை எல்லாம் கண்காணிக்கவே நாடு முழுக்கப் பல்லாயிரக்கணக்கான படை வீரர்களை நீங்கள் தானே நியமித்துள்ளீர்கள்! இப்போது ஏன் திடீரென்று சந்தேகம், மன்னா?”என்றார்.
உடனே மன்னர், “இல்லை மந்திரியாரே, இல்லை” என்று ஆவேசமாகக் கூறினார்.
என்ன சொல்லப் போகிறாரோ என்று பதறிய அப்பிராணியார், “தாங்கள் சொல்வது புரியவில்லை மன்னா” என்றார்.
“உலகிலேயே தலைசிறந்த மன்னனான என்னை இந்த நாட்டில் வணங்காதவர்களும் இருக்கின்றனர்.”
“தங்களை எதிர்த்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். தங்களை வணங்காதவர்கள் நம் நாட்டில் இருக்கவே முடியாது மன்னா” என்றார் அப்பிராணியார். எதிர்த்துப் பேசியதற்கு என்ன தண்டனை தரப் போகிறாரோ என்ற அச்சத்தில் அவருடைய உடல் நடுங்கியது.
“அப்படியா வாருங்கள் என்னோடு” என்று சொன்ன மன்னர், விறுவிறுவென்று அரண்மனைத் தோட்டம் நோக்கிச் சென்றார். வேறு வழியில்லாததால் முக்கிய மந்திரியான அப்பிராணியாரும் மற்ற மந்திரிகளும் அவர் பின்னே சென்றனர்.
மன்னர் குய்யோமுறையோ அப்பிராணியாரைப் பார்த்து, “பார்த்தீர்களா மந்திரியாரே, இந்தத் தோட்டத்தில் நான் வந்து நின்று சில நொடிகள் ஆகியும், அந்த மரம் என்னை வணங்கவில்லை, இந்தச் செடி கொடிகள் என்னை வணங்கவில்லை. அதோ மேலே தெரிகிறதே வானம் அது என்னை வணங்கவில்லை, இவ்வளவு ஏன் அதோ தூரத்தில் தெரிகிறதே அந்த மலைகூட என்னை வணங்கவில்லை” என்று கோபப்பட்டார்.
“மன்னா, தாங்கள் எங்களுக்குத்தான் மன்னர். அதனால் நாங்கள் வணங்குகிறோம். இயற்கையைத்தான் மனிதர்கள் வணங்க வேண்டுமே தவிர, இயற்கை மனிதர்களை வணங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தன்னை அறியாமல் பேசிவிட்டார் அப்பிராணியார்.
என்ன நடக்கப் போகிறதோ என்று மற்ற மந்திரிகள் பயந்தனர்.
மன்னர் கோபத்துடன், “யாரிடம் பேசுகிறீர்கள் என்று தங்களுக்கு மறந்துவிட்டதோ?” என்று கேட்டார்.
“மன்னா, அவை எல்லாம் எப்படி வணங்கும்? நீங்களே சொல்லுங்கள்?”
“என் நாட்டில் இருக்கும் அனைத்துக்கும் நான் தான் மன்னன். மனிதர்களோ மரங்களோ என்னை வணங்காவிட்டால் அது ராஜ குற்றம்தான்?”
“மன்னா... ”
”முக்கிய மந்திரி என்பதால் நீங்கள் எதிர்த்துப் பேசியதை நான் குற்றமாகக் கருதவில்லை. என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம். அதற்குள் என் அருமை பெருமைகளை அவற்றிடம் எடுத்துச் சொல்லி, என்னை வணங்க வைக்க வேண்டியது தங்களுடைய பொறுப்பு. இல்லையேல் உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது” என்று குய்யோமுறையோ பற்களைக் கடித்தார்.
மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியுமா?
அப்பிராணியாருக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. மனைவியிடம், “மன்னரின் முட்டாள்தனங்களை இனியும் சகிக்க முடியாது. நாம் பக்கத்து நாட்டுக்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம்” என்று வருத்தத்துடன் கூறினார்.
காரணத்தை அறிந்துகொண்ட அப்பிராணியாரின் மனைவி, “இது நம் நாடு. நாம் ஏன் இன்னொரு நாட்டுக்குச் செல்ல வேண்டும்? முட்டாள்தனமான மன்னருக்குப் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு, அப்பிராணியாரின் காதில் தன் திட்டத்தைச் சொன்னார்.
“இது நல்ல யோசனையா என்று தெரியவில்லை. ஆனால், ஏதாவது செய்துதானே ஆக வேண்டும்? இதை மன்னர் ஏற்றுக்கொண்டால் நாம் தப்பிப்போம். இல்லாவிட்டால், என்ன கதி ஆவோம் என்றே தெரியாது” என்று கவலையுடன் கூறினார். அப்பிராணியார்.
“நமக்கு வேறு வழியில்லை. நம் மன்னர் இதுபோன்ற யோசனைகளை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்” என்று தைரியம் கொடுத்தார் அப்பிராணியார் மனைவி.
அடுத்த இரு தினங்களில் அப்பிராணியார் அதைச் செய்து, ஒரு ஒரு பட்டுத் துணியில் சுற்றிக்கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
“என்ன அப்பிராணியாரே, என்னைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதெல்லாம் மரம் செடி கொடிகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீரா? எந்த அளவில் உள்ளது அந்தப் பணி?” என்றார் மன்னர் குய்யோமுறையோ.
“மன்னா, நான் நினைத்ததைவிட அவை வெகு விரைவில் உங்களைப் புரிந்துகொண்டுவிட்டன.”
“அப்படியா!”
“ஆமாம் மன்னா, இப்பொழுதே என்னுடன் தோட்டத்துக்கு வாருங்கள், அவை எல்லாம் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும்.”
இப்படிச் சொன்னவுடன் மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவையிலிருந்த மற்றவர்களோ பயத்தில் அப்பிராணியாருக்குப் புத்தி பேதலித்துவிட்டது என்றே எண்ணினார்கள்.
தோட்டத்துக்குள் நுழையும் முன் மன்னரை நிறுத்திய அப்பிராணியார், “மன்னா, இதை அணிந்துகொண்டு நுழையுங்கள்” என்று பட்டுத்துணியில் சுற்றி வைத்திருந்த காலணிகளை எடுத்துக் கொடுத்தார். வேலைப்பாடு நிறைந்த அந்தக் காலணிகளின் மேல் புறத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது.
அதை அணிந்துகொண்டு மன்னர் தோட்டத்துக்குள் நுழைந்த உடன் வானம் அவரது காலணியில் இருந்த கண்ணாடியில் தெரிந்தது, அதைச் சுட்டிக் காட்டிய அப்பிராணியார், “மன்னா, அதோ பாருங்கள் வானம். உங்கள் காலடியில் விழுந்து வணக்கம் சொல்கிறது” என்றார்.
மன்னருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரத்தின் பக்கம் போய் நின்றார். மரத்தின் உருவமும் அவர் காலணிகளின் காண்ணாடியில் பிரதிபலித்தது. இப்படியே செடிகொடிகள் எல்லாம் மன்னர் காலடியில் வணக்கம் தெரிவிக்க, மகிழ்ந்து போனார் மன்னர் குய்யோமுறையோ.
இதைச் சாதித்த அப்பிராணியாருக்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago