கதை: எதிரிகள் நண்பர்களானது எப்படி?

By செய்திப்பிரிவு

தொலைதூரத்தில் உள்ள கிராமத்தில் நிறைய பூனைகள் வசித்து வந்தன. கிராமத்துக்கு நடுவில் ஒரு நீளமான ஆறு ஓடியது. கிராமத்தின் இரு பகுதிகளை இணைக்கும்படியாக, ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது.

ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கறுப்புப் பூனைகளும் மறுபக்கம் மஞ்சள் பூனைகளும் வசித்தன.கோடைகாலத்தில், அந்தக் கிராமத்தைக் கறுப்புப் பூனைகளும் குளிர் காலத்தில் மஞ்சள் பூனைகளும் ஆட்சி செய்தன.

சிறிது நாட்களில் பூனைகளுக்குள் போட்டி பொறாமை அதிகரித்தது. ஆட்சியில் குறைகளைச் சுட்டிக்காட்டி சண்டைச்சச்சரவுகள் தொடர்ந்தன. அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டது. ஒரே கூச்சல். பூனைகளுக்குள் ஒற்றுமை சீர்குலைந்தது.

அதன் விளைவாக, கிராமத்தின் இருபுறங்களிலும் வசித்த பூனைகளால் பாலத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது. கறுப்புப் பூனைகள், மஞ்சள் பூனைகளை எதிரிகளாகப் பார்த்தன. மஞ்சள் பூனைகள், கறுப்புப் பூனைகளை விரோதிகளாக எண்ணின.

மஞ்சள் பூனைகள் ஆட்சி செய்தபோது, “நீங்கள் நிர்வாகத் திறமை இல்லாதவர்கள்.எங்கள்மீது தேவையற்ற அதிகாரம் செலுத்துகிறீர்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது”என்று கறுப்புப் பூனைகள் கோபித்துக்கொண்டன.

மஞ்சள் பூனைகள், “இதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. இத்தனை நாட்களாக உங்களுடன் சேர்ந்திருந்து ஏமாற்றப்பட்டோம். எமது ஆட்சியாளர், உங்கள் தலைவர்களைவிடத் திறமையானவர்”என்று கூச்சலிட்டன.

பூனைகளுக்குள் மணிக்கணக்கில் விவாதம் தொடர்ந்தது. அவை, மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டன. அமைதி திரும்பவில்லை.

ஒரு நாள், அந்தக் கிராமத்துக்குச் சாம்பல் நிறப் பூனை ஒன்று வந்தது. அது, மிக அழகாக இருந்தது. மற்ற பூனைகளுக்கு மத்தியில் தனித்துவமான பூனையாக அறியப்பட்டது. கொண்டாடப்பட்டது.

மஞ்சள் பூனைகளும் கறுப்புப் பூனைகளும் சாம்பல் பூனையை நேசித்தன. அன்போடு பழகின.

“இரண்டு குழுக்களிலும் இவ்வளவு அழகான பூனை இல்லவே இல்லை” என்றது கூட்டத்திலிருந்த ஒரு பூனை, சாம்பல் பூனையைப் புகழ்ந்தது.

“அது, அழகான பூனை மட்டுமல்ல. அறிவாளியும்கூட” என்றது அருகிலிருந்த பூனை.

“சாம்பல் பூனை, நம்மைவிடப் பலசாலி” என்றது மூன்றாவது பூனை.

தினமும், சாம்பல் பூனை கிராமத்தின் இரு பகுதிகளில் உள்ள நண்பர்களையும் சந்தித்தது.

கிராமத்தில் அப்போது ஆட்சி மாற்றத்துக்கான நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. பூனைகள் எல்லாம் கூடிப் பேசி, புதிய பூனைக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றன.

ஒட்டுமொத்த கறுப்புப் பூனைகளும் யோசனையை ஏற்றுக்கொண்டன. எதிரில் கூடியிருந்த மஞ்சள் பூனைகளுக்கு வேறு வழி தெரியவில்லை. சாம்பல் பூனையைத் தலைவனாக ஏற்க ஒப்புக்கொண்டன.

மறுநாளே, சாம்பல் பூனை தலைமைப் பொறுப்பை ஏற்றது.பதவியேற்பு விழா கோலாகலாமாகக் கொண்டாடப்பட்டது.

அடுத்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அன்று, கறுப்புப் பூனைகள் சேர்ந்து ஓர் எலியைத் துரத்திச் சென்றன. ஆனால், அந்த எலி ஆற்றுப் பாலத்தில் ஏறித் தப்பித்தது. கறுப்புப் பூனைகள் அதைப் பின்தொடர்ந்து ஓடின. அதே நேரத்தில் பாலத்தின் மறுபக்கம் மஞ்சள் பூனைகள், எலியைப் பிடிக்கக் காத்திருந்தன.

எதிர்பாராத விதமாக ஆற்றுப் பாலத்தில், எதிரெதிரே சந்தித்துக்கொண்ட இரண்டு பூனைக் குழுக்களுக்குள் சண்டை மூண்டது. எல்லாப் பூனைகளும் சேர்ந்து கிராமத் தலைவரான சாம்பல் பூனையிடம் சென்று முறையிட்டன.

கறுப்புப் பூனை கூட்டத்திலிருந்த சில பூனைகள் பேசத் தொடங்கின. மஞ்சள் பூனைகள் பேச விடாமல் இடைமறித்தன.

தலைவர் பூனையால் மற்ற பூனைகள் சொன்ன புகார்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை.என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தது.

“கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா? எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுவதால் என்னால் எதையும் சரியாகக் கேட்க முடியவில்லை”என்று கோபத்துடன் கத்தியது, சாம்பல் பூனை.

பூனைகள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து கடுமையாக விவாதம் செய்தன.

அவை எல்லாம் அமைதியாகும் வரை காத்திருந்த சாம்பல் பூனை, இரு பிரிவுகளைச் சேர்ந்த பூனைகளும் தங்களது காதுகளைக் கழற்றி ஒரு பெரிய கூடையில் போடும்படி உத்தரவிட்டது. பிறகு, எல்லாப் பூனைகளும் இரண்டு மணிநேரம் கழித்து தன்னைச் சந்திக்க வருமாறு சொன்னது.

பூனைகள் அவசர அவசரமாகக் காதுகளைக் கழற்றி, கூடைக்குள் போட்டுவிட்டுச் சென்றன.

வீடு திரும்பும் வழியில்தான், பூனைகளுக்கு ஓர் உண்மை புரிந்தது. காது கேட்காமல் எலிகள் பேசிக்கொள்வதை எப்படிக் கேட்க முடியும்?

அப்படியானால் எலிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. உணவுக்கு என்ன செய்வது? பூனைகள் மனதில் பயம் தொற்றிக்கொண்டது.

இரண்டு மணி நேரம் கழித்து, தலைவரைப் பார்க்க விரைந்தன.

சாம்பல் பூனை கூடைக்கு அருகில் சென்றது. கூடையில் இருந்த காதுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பூனைகளிடம் ஒப்படைத்தது.

“இப்போது உங்களால் நான் பேசுவதைக் கேட்க முடியும் என்று நினைக்கிறேன். முதலில் ஒருவர் சொல்வதை அடுத்தவர் காதுகொடுத்துக் கேட்கப் பழக வேண்டும். அப்போதுதான் அடுத்தவர் பக்கம் உள்ள நியாயம் தெரியவரும்.பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படலாம். நீங்கள் அப்படிச் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே அமைதிக்கு வழி காண முடியும். வாழ்க்கையை நிம்மதியுடன்கழிக்கலாம். ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்தால் எதையும் சாதிக்கலாம். மறந்து விடாதீர்கள்”என்றது.

கறுப்புப் பூனைகளின் காதை மஞ்சள் பூனைகளிடமும், மஞ்சள் பூனைகளின் காதை கறுப்புப் பூனைகளிடமும் மாற்றிக் கொடுத்தது, சாம்பல் பூனை.

அப்போது, ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. காதுகள் மாறிப் போனதால், கறுப்புப் பூனைகள் சொல்வதை மஞ்சள் பூனைகளால் தெளிவாகக் கேட்கமுடிந்தது. மஞ்சள் பூனைகளின் பேச்சு கறுப்புப் பூனைகளுக்குப் புரிந்தது. பூனைகள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டன.எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தன.

கிராமத்தில் அமைதி திரும்பியது.

மூலம்: காலித் ஜுமா,

தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்