மாய உலகம்: ஒரு கதை சொல்லட்டுமா?

By மருதன்

உனக்கு என்ன தெரியும் என்று யார், எப்போது கேட்டாலும் நான் தயங்காமல் சொல்வேன். எனக்குக் கதை சொல்லத் தெரியும்! தனிமை வாட்டும்போது புதிய கதை ஒன்று என்னை நோக்கிக் கரங்களை நீட்டும். மகிழ்ச்சி பொங்கும்போது கதையும் வளர்ந்து, பொங்கிவரும். சோகமாக இருக்கும்போது கதையின் மடியில் தஞ்சம் அடைவேன். அது என் முதுகைத் தட்டிக்கொடுக்கும். உறங்க ஆரம்பித்தால் கனவு வரும். கனவு வந்தால் அதில் ஒரு புதுக் கதை முளைத்து வரும்.

கதை என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால் இந்த ஈசாப் இன்று உங்கள் முன்பு வந்து உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க முடியாது. கதை என்று ஒன்று இந்த உலகில் தோன்றாமலே போயிருந்தால் நான் வாழ்நாள் முழுக்க அடிமையாகவே நீடித்திருப்பேன்.

ஆம், கோழி, ஆடு, மாடு வாங்குவதுபோல் சந்தைக்குச் சென்று மனிதர்களை விலை கொடுத்து வாங்கும் வழக்கம் கிரேக்கத்தில் ஒரு காலத்தில் இருந்தது. ஒரு செல்வந்தர் அப்படித்தான் என்னை வாங்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் என்னைப் போல் பல அடிமைகள் இருந்தனர். அவர்களுக்கு எல்லாம் அவர் பல வேலைகளை ஒதுக்கி வைத்திருந்தார்.

“ஏய் ஈசாப், உனக்கு என்ன செய்யத் தெரியும்?”என்று அவர் என்னிடம் கேட்டபோது, “எனக்குக் கதை சொல்லத் தெரியும்” என்றேன். “ஓ, இப்போது அதுவும் ஒரு வேலையாக மாறிவிட்டதா? சரி ஒரு கதை சொல், கேட்போம்” என்று சாய்ந்து அமர்ந்துகொண்டார் அவர். முந்தைய இரவு உறக்கம் வராதபோது யோசித்துக்கொண்டிருந்த ஒரு கதையை நான் சொல்லத் தொடங்கினேன்.

ஓர் ஊரில் ஓர் ஓநாய் இருந்தது. மிகவும் சோர்ந்திருந்த அந்த ஓநாய் உண்ண ஏதேனும் கிடைக்குமா என்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தபோது ஒரு நாயைப் பார்த்தது. “நீ மட்டும் எப்படிக் கொழு கொழுவென்று இருக்கிறாய்? உனக்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது?”என்று ஏக்கத்தோடு கேட்டது ஓநாய்.

நாய் சொன்னது: “அதோ அந்த வீட்டில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் எனக்கு வேளா வேளைக்கு விதவிதமாக நிறைய சாப்பிடத் தருகிறான். நான் அவன் வீட்டில்தான் வளர்கிறேன். உன்னையும் அவனிடம் அழைத்துப் போகவா?”

ஓநாய் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டது. பிறகுதான் கவனித்தது. ”அது என்ன உன் கழுத்தில் என்னவோ தொங்கிக்கொண்டிருக்கிறது?”

நாய் புன்னகை செய்தது. “இதுவா? நான் ஓடிவிடாமல் இருக்க ஒரு சின்ன வளையத்தை அந்த மனிதன் எனக்குப் போட்டிருக்கிறான். ஹாஹா, நல்ல உணவு கிடைக்கும்போது யாராவது தப்பித்து ஓடுவார்களா, என்ன?”ஓநாய் நடப்பதை நிறுத்திக்கொண்டது. “நீ போ. நான் வரவில்லை. எனக்கு உணவு தேவைதான். ஆனால், அது என் ஒரே தேவை அல்ல.”

சில விநாடிகள் அமைதியாக இருந்தவர், அவ்வளவுதானா என்றார். ஆமாம் என்றேன். இன்னும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, இந்தக் கதை என்ன சொல்லவருகிறது என்றார் செல்வந்தர். எதுவும் இல்லை என்றேன். சரி, வேறு ஒரு கதை சொல் என்றார். நான் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

ஓர் ஊரில் ஓர் ஓநாய். அந்த ஓநாய் என்னவோ தன் பாட்டுக்கு அமைதியாகத்தான் போய்க்கொண்டிருக்கும் என்றாலும் அது கடந்து போகும் ஒவ்வொரு முறையும் ஒரு சிறுவன் அந்த ஓநாயை வம்பிழுப்பது வழக்கம். நான் எவ்வளவு பலசாலியாக இருந்தால், இந்த ஓநாய் என்னைப் பார்த்துப் பயப்படும்? ஏய் உலகமே, நான்தான் உங்கள் எஜமானன் என்று ஆர்ப்பரித்தான் சிறுவன்.

ஓநாய் அமைதியாக அந்தச் சிறுவனைப் பார்த்துக் கூறியது: “முட்டாளே, நீ அல்ல, நீ ஏறி நின்றுகொண்டிருக்கும் பாறைதான் பலம். உன் உண்மையான பலத்தைச் சோதிக்க வேண்டுமானால் இறங்கி என் பக்கம் வா!”அதன் பிறகு அந்தச் சிறுவன் வாயைத் திறந்தான் என்றா நினைக்கிறீர்கள்?

கதை கேட்டுக்கொண்டிருந்தவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்பியது. “நீ இந்தக் கதை மூலம் என்னவோ சொல்ல வருகிறாய்தானே?”என்றார். எந்தக் கதையும் எதையும் சொல்வதில்லை. ஆனால், அதைக் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான செய்தியை அதிலிருந்து பெறுகிறார்கள். அதுதான் கதையின் மாயம் என்றேன் நான்.

மேலும் சில கதைகள் கேட்ட பிறகு அவருக்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது. “ஈசாப், உன் கதைகளில் ஏன் விலங்குகள் அதிகம் வருகின்றன?”எனக்கு மனிதர்களைக் கண்டு பயம் என்றேன் நான். விலங்குகள் பொய் பேசுவதில்லை. சூழ்ச்சிகள் செய்வதில்லை. பிற உயிர்களை இழிவாக நடத்துவதில்லை. மனிதர்கள் எண்ணற்ற தவறுகள் செய்கிறார்கள் என்பதோடு அவற்றைச் சுட்டிக்காட்டினால் கோபமும் கொள்கிறார்கள். கதைகளை நம்பும் எனக்கோ உண்மையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஒரு முறை நரி பாலைவனத்தில் நடை போட்டுக்கொண்டிருந்தபோது தன்னுடைய நீண்ட நிழலைப் பார்த்து, “அடடா! நான்தான் உலகில் உயரமானவன் என்று செருக்குக் கொண்டது. வெளிச்சம் மறைந்ததும் நிழலும் மறைந்துவிட்டதைக் கண்டு அது வருந்தியது.

இப்படி ஒரு கதையைச் சொன்னால் கேட்கிறார்கள். கொஞ்சம் பணிவோடு நடந்துகொள்ளலாமே என்று நேரடியாகச் சொன்னால் யாராவது கேட்பார்களா? அதனால்தான் மனிதர்களின் குறைகளை விலங்குகள் மீது போட்டுக் கதைகள் பின்ன ஆரம்பித்தேன்.”

விடிந்ததும் செல்வந்தர் என்னை அழைத்தார். “ஈசாப், நான் என் பாறையிலிருந்து இறங்கிவிட்டேன். ஒருபோதும் அதில் ஏற மாட்டேன். இனி நீ சுதந்திர மனிதன்.”

என் சங்கிலிகளை உடைத்த கதையின் கரங்களைப் பற்றிக்கொண்டு ஓநாய் போல் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்