குட்டைக்குட்டைச்சம்பா, நெட்டைக்குட்டைச்சம்பா ஆகிய இரண்டு நெல் விதைகளுக்கும் மகிழ்ச்சி.
ஆஹா! தப்பித்து விட்டோம்!
இத்தனை நாள் சாக்கு மூட்டையில் மூச்சுவிட முடியாமல் அடைந்து கிடந்தார்கள். இப்பொழுது கீழே குதித்து மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். எப்படித் தெரியுமா?
டிய்யாலோ டிய்யாலோ டிய்யில டிய்யா
ஊர்கோலம் போறோமே டிய்யில டிய்யா
மண்ணைத் தேடிப் போறோமே டிய்யில டிய்யா
நல்ல ஈரம் தேடிப் போறோமே டிய்யில டிய்யா
பயிராக நாம் வளர்வோம் டிய்யில டிய்யா
டிய்யாலோ டிய்யாலோ டிய்யில டிய்யா
அவர்கள் இருந்த மூட்டையில் ஆயிரக்கணக்கான விதைநெல்கள் கண்ணை மூடித் தூங்கிக்கொண்டிருந்தன. தூக்கம் என்றால் தூக்கம் அப்படி ஒரு தூக்கம்! நல்ல குளிரில் போர்வையைப் போர்த்தி நிம்மதியாகத் தூங்குவோமே... அப்படி ஒரு தூக்கம்.
தூக்கம் எப்போது கலையும் தெரியுமா? விதைநெல்கள் எப்போது கண்விழிக்கும் தெரியுமா?
எப்போது? எப்போது? எப்போது?
தெரியுமா?
ஈரமான மண்ணில் விழுந்ததும் விதைநெல்லின் உடல் சிலிர்க்கும். அதன் உடல் அப்படியே ஈரத்தை உறிஞ்சும். எப்படி உறிஞ்சும்? அதற்குத் தான் கூர்மையான மூக்கு இருக்கிறதே!அந்த மூக்குதான் வாய். வாய்தான் மூக்கு. அப்படி உறிஞ்சி தனக்குள் இருக்கிற உயிர்ச்சக்தியை வேராக, தளிராக மாற்றும். அப்படியே சில நாட்களில் விதைநெல் விழுந்த இடத்தில் நெல்பயிர் முளைக்கத் தொடங்கும். இரண்டு தளிர் இலைகளாகப் பச்சை நிறத்தில் இந்த உலகத்தைப் பார்க்கும்போது என்ன ஆனந்தம்!
அதுவரை அமைதியாக மூட்டைக்குள் காத்திருக்க வேண்டும். ஆனால், குட்டைக்குட்டைச்சம்பாவுக்கும் நெட்டைக்குட்டைச்சம்பாவுக்கும் அவசரம். மூட்டையில் இருக்கும்போதே அடிக்கடிக் கண்ணைத் திறந்து திறந்து பார்த்தன. தூங்கிக்கொண்டிருந்த மற்றவர்களைக் கிள்ளி விட்டன. ஒருவர் மீது ஒருவர் ஏறிக்குதித்தன. எல்லோரையும் தள்ளிவிட்டன. சேட்டை! சேட்டை! அப்படி ஒரு சேட்டை! எல்லோரும் ஆழ்ந்து உறங்கியதால் யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இரண்டு விதைநெல்களும் கூடிப் பேசின.
“நண்பா,எப்போ வெளிச்சம் தெரியுதோ...அப்பவே குதிச்சி ஓடிடணும்.“
“ ஆமாமா தூக்கமே வரமாட்டேங்குது. எப்படா மண்ணைப் பார்ப்போம்ன்னு இருக்குது” என்று பேசியபடியே காத்திருந்தன. அவர்கள் காத்திருந்த அந்த நாளும் வந்தது. அவர்கள் இருந்த மூட்டையை யாரோ அவிழ்த்தார்கள். உடனே இரண்டு நெல்விதைகளும் தையா தக்கா தையா தக்கா என்று குதிக்க ஆரம்பித்தன. ஒரு கூடையில் நெல்விதைகளைக் கொட்டினார் விவசாயி மணி. அதைத் தலையில் தூக்கி வைக்கும்போது அந்த இரண்டு விதைநெல்களும் துள்ளிக் கீழே விழுந்தன.
“அப்பாடி! இப்பதான் நிம்மதி! என்னா புழுக்கம்“ என்று குட்டைக்குட்டைச்சம்பா சொன்னது.
“நாம நல்ல மண்ணாகப் பார்த்து முளைப்போம்” என்றது நெட்டைக்குட்டைச்சம்பா.
நல்ல காற்று. குட்டைக்குட்டைச்சம்பாவும் நெட்டைக்குட்டைச்சம்பாவும் அப்படியே உருண்டு கொண்டே சென்றன. காற்று நின்றது. விதைகளும் அப்படியே நின்றன.
“ இங்கே எப்படி?“ என்று கேட்டது குட்டைக்குட்டைச்சம்பா.
“ஒரே பாறை... இறுக்கமான பாறையில் தண்ணீரும் கிடைக்காது. வேரும் உள்ளே போகாது.. இங்கே வேண்டாம்” என்றது நெட்டைக்குட்டைச் சம்பா.
அப்போது அந்த நெல்விதைகளின் மீது ஒரு நிழல் விழுந்தது. பார்த்தால் ஒரு சேவல். நல்ல உயரம். உச்சந்தலையில் ஒரு பூவைச் செருகி வைத்த மாதிரி சிவந்த கொண்டை. வாலில் அரிவாளைப் போல வளைந்த கறுப்பு, சிவப்பு, நீல வண்ணச்சிறகுகள் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்தன.
அந்தச் சேவல் அவர்களைப் பார்த்தது. அவ்வளவு தான் குட்டைக்குட்டைச்சம்பாவும் நெட்டைக்குட்டைச்சம்பாவும் பயந்துவிட்டன. சேவலின் சிவந்த கண்களைப் பார்த்தாலே பயமாக இருந்தது. ஐயோ நெருங்கிவிட்டது. ஒரே கொத்து. இரண்டு பேரும் சேவலின் வயிற்றுக்குள் போய் விடுவார்கள். இரண்டும் கண்களை மூடிக்கொண்டன.
சேவல் தலையைக் குனிந்து கொத்தியது. அட! அவர்களைக் கொத்தவில்லை. அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு புழுவைக் கொத்திச் சாப்பிட்டது சேவல். உடனே இரண்டு நெல்களும் ஓடிப் போய், சேவலின் கால்களுக்குக் கீழே ஒட்டிக்கொண்டன. சேவல் அப்படியே நடந்தது. நடந்து போனபோது காலை உதறியது. குட்டைக்குட்டையும் நெட்டைக்குட்டையும் கீழே விழுந்தன.
“டேய் குட்டை,இங்கேயாவது முளைப்போமா?“
“போடா நெட்டை! இது சரளைத் தரை. ஒரே கல்லாகக் கிடக்கு. மண்ணில் சத்தே இருக்காது. வேரும் போகாது. வெயிலும் தாங்காது” என்று பேசியபடியே நடந்தது. அப்போது எதிர்பாராமல் ஒரு மணிப்புறா குட்டைக்குட்டையையும் நெட்டைக்குட்டையையும் கொத்தி எடுத்தது.
விழுங்கவில்லை. அப்படியே வாயில் வைத்துக்கொண்டே பறந்தது. உடைமரப்புதரில் தரையில் கட்டிய கூட்டில் இரண்டு மணிப்புறாக் குஞ்சுகள் இருந்தன. அவை தன்னுடைய சிவந்த வாயைத் திறந்து கொண்டேயிருந்தன. தாய்ப்புறா அதன் வாயிலிருந்து ஒரு குஞ்சுக்குக் கொடுக்கும்போது இன்னொரு குஞ்சு தட்டி விட்டது. குட்டைக்குட்டையும் நெட்டைக்குட்டையும் துள்ளி விழுந்தன.
அதை மணிப்புறா கவனிக்கவில்லை.
“அப்பாடி! உயிர் பிழைத்ததே பெரிய காரியம்! வா வா சீக்கிரம்” என்று நெட்டைக்குட்டை சொன்னது.
“ஆமாம்.இங்கேயாவது முளைச்சிடலாமான்னு பாரு” என்று குட்டைக்குட்டை கேட்டது.
“அடடா! இது கரிசல் மண். இங்கே தண்ணியே இருக்காது. மழை பெய்தால் தான் விவசாயம் பண்ணுவாங்க. மானாவாரி மண். இது லாயக்குப்படாது”என்று வருத்தத்துடன் சொன்ன நெட்டைக்குட்டை, கவலையுடன் கன்னத்தில் கை வைத்தது.
“நாம் அவசரப்பட்டுட்டோமோ? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்” என்று குட்டைக்குட்டை சொல்லிக்கொண்டிருந்த போது ஓர் அழகான ஆண் மயில் பறந்து வந்தது. குட்டைக்குட்டையும் நெட்டைக்குட்டையும் ஓடிச் சென்று அதன் வண்ணத் தோகையில் ஏறிக்கொண்டன.
அந்த இடத்தில் கொஞ்சநேரம் மேய்ந்த ஆண்மயில் இரை தேடி அப்படியே பறந்தது.
குட்டைக்குட்டையும் நெட்டைக்குட்டையும் வானத்தில் பறந்தன.
“ஐய் சக்கா! ஐய் சக்கா! வானத்தில பறக்கிறோம்...
ஐய் சக்கா! ஐய் சக்கா! இறக்கை விரித்துப் பறக்கிறோம்...” என்று கத்திக்கொண்டே மயில் தோகையைப் பிடித்திருந்த பிடியை விட்டுவிட்டன. அவ்வளவுதான்!
சொய்ங்..சொய்ங்.. சொய்ய்ய்ங்க்….
அப்படியே காற்றில் ஆடி ஆடி கீழே இறங்கின.
குட்டைக்குட்டையும் நெட்டைக்குட்டையும் மண்ணில் விழுந்தவுடன் அவர்களின் உடல் குளிர்ந்தது. வண்டல் கலந்த ஈரமான மண். மண்ணில் இருந்த உயிர்ச்சத்துகள் பசியைக் கிளப்பிவிட்டன. அந்த நிலத்தை அப்போது தான் உழுதிருந்தார்கள்.
“என்ன தம்பி குட்டை இப்ப எப்படி?”என்று கத்திய நெட்டைக்குட்டைச்சம்பா மண்ணுக்குள் வழுக்கிச் சென்றது.
“ ஆஹா! ஆனந்தம்! நெட்டையண்ணே“ என்று சொல்லியபடியே குட்டைக்குட்டைச்சம்பாவும் மண்ணுக்குள் புதைந்தது.
அருகில் அவர்களுடன் மூட்டையில் இருந்த விதைநெல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அவை கேட்டன: “ டேய், எங்கேடா போயிருந்தீக?”
“பறந்து பறந்து சென்றாலும்
பாறைத்தரையில் முளைக்க முடியாது.
ஓடி ஓடிச் சென்றாலும்
சரளைத்தரையில் முளைக்க முடியாது.
பாடிப்பாடிச் சென்றாலும்
கரிசல் தரையில் முளைக்க முடியாது.
டிய்யாலோ டிய்யாலோ டிய்யில டிய்யா
டிய்யாலோ!” என்று குட்டைக்குட்டைச்சம்பாவும் குட்டைநெட்டைச்சம்பாவும் பாடிக்கொண்டே சிரித்தன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago