நான், மணிமேகலை. நான் கடவுளோ தேவதையோ அல்ல. என்னிடம் எந்த மந்திர சக்தியும் இல்லை. எந்த அற்புதத்தையும் நான் நிகழ்த்துவதில்லை. நான் ஓர் எளிய துறவி. எனக்கென்று தனியே வீடு கிடையாது. உடைமைகள் கிடையாது. உறவுகள் கிடையாது. எனவே இந்த உலகம் என் வீடு. அதில் வாழும் ஒவ்வோர் உயிரும் என் உறவு. உறவுதான் என் உடைமை.
காடு, மலை, கிராமம், தீவு என்று பல பகுதிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை இரண்டாகப் பிளவுப்படுத்தி வைத்திருப்பதைப் பார்க்கிறேன். படித்தவர், படிக்காதவர். பணக்காரர், ஏழை. ஆண், பெண். நல்லவர், கெட்டவர். வலிமையானவர், வலுவிழந்தவர். ஆரோக்கியமானவர், நோயாளி. மேன்மக்கள், கீழ்மக்கள்.
நான் என் நெஞ்சில் புத்தரை ஏந்திக்கொண்டிருப்பதால் இந்த வேறுபாடுகள் எதையும் நான் பொருட்படுத்துவதே இல்லை. உண்மையில் அவை என் கண்களுக்குத் தெரிவதும் இல்லை.
ஒரு செல்வந்தர் எப்போது வேண்டுமானாலும் ஏழையாக மாறமுடியும். நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் எவருக்கும் நாளை ஏதேனும் ஓர் உபாதை தோன்றலாம். அந்த உபாதை மறந்து நாளையே அவர் ஆரோக்கியம் பெறலாம். ஏடெடுத்து வாசிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் கல்லாதவர்கள் அல்லர். அவர்கள் வேறு வகையில் அறிவைத் திரட்டி வைத்திருப்பவர்கள்.
எந்த மனிதனையும் மேல் என்றோ கீழ் என்றோ ஆண் என்றோ பெண் என்றோ பாகுபடுத்துவதில்லை நான். ஒருவரிடம் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை வைத்து அவரை நான் மதிப்பிடுவதும் இல்லை. அப்படியானால் நீ எல்லோரையும் சமமாகப் பாவிக்கிறாயா மணிமேகலை என்று கேட்டால் இல்லை என்பேன்.
ஒரு மெல்லிய கோடு மனிதர்களுக்கு இடையில் நதி போல் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தக் கோட்டுக்கு இரு பக்கமும் மனிதர்கள் பிரிந்துகிடக்கிறார்கள். அந்தக் கோட்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோள். புத்தர் எனக்கு இட்ட பணி அது ஒன்றுதான்.
எல்லா மனிதர்களுக்கும், இல்லை இல்லை, எல்லா உயிர்களுக்கும் அடிப்படையான ஓர் அம்சம், பசி. எந்த உடலில் பசி வளர்கிறதோ அந்த உடல்தான் வளர்கிறது. எந்த உடலில் பசி வளர்வதில்லையோ அந்த உடல் வதைக்கப்படுகிறது. பசிதான் கடவுள். பசிதான் சாத்தான். பசி ஒரு வரம். பசி ஒரு சாபம். எல்லோருக்கும் பொருந்தும் உலகப் பொதுவான உண்மை என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இதுதான்.
மிகச் சரியாக இந்த இடத்தில்தான் கோடு வந்து விழுகிறது. இந்தக் கோடுதான் மனிதர்களை இரண்டாக வகுக்கிறது. கோட்டுக்கு இந்தப் பக்கம் உள்ள மனிதர்களால் பசி என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பே பலவிதமான பண்டங்களை உண்ண முடிகிறது. அந்தப் பக்கத்தில் இருப்பவர்களோ பசியால் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, இருவிதமான உயிர்களைப் பார்க்கிறேன். உண்ண முடிந்தவர்கள், உண்ண இயலாதவர்கள். வளரும் உடல்கள், வளர இயலாத உடல்கள். வலுவான எலும்புகள், வலுவற்ற எலும்புகள். மின்னும் சதைகள், சோர்ந்த சதைகள். சிரிக்கும் உதடுகள், உலர்ந்த உதடுகள். ஒளிமிக்க கண்கள், இருளடைந்த கண்கள். வாழும் உயிர், வதைபடும் உயிர்.
என்னை ஏன் இது பாதிக்கிறது என்றால் வலுவற்ற எலும்புகளை வலுவான எலும்புகள் வெறுமனே கடந்து செல்கின்றன. ஒளிமிக்க கண்கள் இருளடைந்த கண்களைக் கண்டவுடன் மூடிக்கொள்கின்றன. வாழும் உயிர் வதைபடும் உயிரைக் கண்டு கலங்கமாட்டேன் என்கிறது.
சிறு பொறி போல் கிளம்பும் பசியை விரைந்து அணைக்காவிட்டால் குபுகுபுவென்று முழு காடும் பற்றி எரிந்துவிடும். ஒரே ஓர் உயிர் பசியால் வாடினாலும் ஒட்டுமொத்த உயிர்களும் இருளில்தான் இருக்கும். அந்த ஒற்றைப் பசியை நீக்குவதற்குதான் நான் அட்சயப் பாத்திரத்தை எடுத்து வந்திருக்கிறேன். எங்கெல்லாம் பசியின் முனகல் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் விரைந்து செல்கின்றன.
உங்களில் பலர் நினைப்பதைப் போல் இது ஒன்றும் மந்திரப் பாத்திரமல்ல. உலகிலுள்ள எல்லா உயிர்களின் பசியையும் இந்த அட்சயப் பாத்திரத்தைக் கொண்டு என்னால் போக்கிவிட முடியாது. அள்ள, அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிக்கொண்டே இருக்கும் ஆற்றலை எந்த ஒரு கடவுளும் யாருக்கும் இதுவரை அளித்துவிடவில்லை.
புத்தர் எனக்கு அளித்த அட்சயப் பாத்திரம் உண்மையில் ஒரு பாத்திரமல்ல. அது என் இதயம்தான். அவர் எனக்கு அளித்த ஒரு துளி அன்பை அதில் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த அன்பைத்தான் நான் எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறேன். அந்த அன்பைத்தான் எல்லோருக்கும் அள்ளி அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறேன். அதுதான் அள்ள, அள்ள ஊற்று போல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
நான் உங்களுக்கு எல்லாம் அளிக்க விரும்புவது அன்னத்தை அல்ல, என் அட்சயப் பாத்திரத்திலுள்ள அன்பைத்தான். உயிர்களின் பசியைப் போக்க, மனிதர்களைப் பிரிக்கும் கோட்டை அழிக்க, பல கோடி அட்சயப் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன. பல கோடி மணிமேகலைகள் தேவைப்படுகிறார்கள். உங்களில் யார் அடுத்த மணிமேகலை?
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago