சாபிராவும் தாராவும் ஜிமாவுக்காகக் காத்திருந்தார்கள். ஏதோ முக்கியமான விஷயம் பேச அழைத்திருந்தாள்.
“சனிக்கிழமை எப்படிச் செலவழிஞ்சுதுன்னே தெரியலை. நேரம் வீணாகிப் போனதை நெனைச்சா கஷ்டமாக இருக்கு” என்று எரிச்சலோடு சொன்னாள் சாபிரா.
“இதென்ன புதுக்கதை? ஒன்னோட நேரம் மட்டும் என்ன பணமா? எப்படிச் செலவழிஞ்சுதுன்னு தெரியலைங்கறே?”
பதில் தெரியாமல் விழித்தாள் சாபிரா. அந்த நேரம் வந்து சேர்ந்தாள் ஜிமா.
“நமக்குக் கிடைக்கிற நேரத்தைப் பயனுள்ளதா செலவு செய்யணும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, நான் இப்போ புதுசா ஒரு விஷயத்தைச் சொல்லப் போறேன். நேரத்தைச் செலவு செய்றதுக்குப் பதிலா சேமிக்கலாம்” என்று புதிர் போட்டாள், ஜிமா.
அவள் சொல்வதைக் கேட்டு இருவரும் வியப்படைந்தனர். தாரா, ஆர்வம் மிகுதியில், “நேரத்தை வீணடிக்காமல் எப்படிச் சேமிச்சு வைக்கிறது?” என்றாள்.
அதற்கு ஜிமா, “இப்ப ஒரு ரகசியத்தைச் சொல்றேன். நேற்றைக்கு எனக்கு 26 மணிநேரம் கிடைச்சது” என்றாள்.
எதுவும் புரியாமல் தோழிகள் இருவரும் திகைத்து நின்றார்கள்.
“உனக்கு மட்டும் எப்படி 2 மணிநேரம் அதிகமா கெடைச்சது?” என்று சந்தேகத்தைக் கேட்டாள் தாரா.
“நேத்து நான் சிறப்புக் குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தேன். 10 பிள்ளைகளுக்கு ஓவியப் பயற்சி தந்தேன், ஓரிகாமி செய்யவும், பனை ஓலை விளையாட்டுப் பொருட்கள் செய்யவும் கற்றுத் தந்தேன்” என்றாள் ஜிமா.
தாமதிக்காத சாபிரா, “அப்படின்னா, உன்னோட நேரம் முழுவதும் செலவாகி இருக்குமே... இப்போ என்ன பண்ணுவே?” என்றாள்.
“நான் செய்த உதவியை வியந்து பாராட்டிய பள்ளி நிர்வாகம், பணத்துக்குப் பதிலாக 2 மணி நேரத்தைப் பரிசாகத் தந்தாங்க” என்றாள் ஜிமா.
உண்மையில், சாபிராவும் தாராவும் இதற்கு முன் இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதில்லை. ஜிமா தன் கைபேசியைத் திறந்து காண்பித்தாள். அதில் ‘நேர வங்கி’ என்ற ஒரு மென்பொருள் பதிவிறக்கம் ஆகி இருந்தது. அழகான ஒரு சின்னம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
“இந்த ‘நேர வங்கி’யைப் பத்தி விளக்கமாகச் சொல்லேன்” என்று ஆசையாகக் கேட்டாள் தாரா.
“இந்த மென்பொருளை, மங்கை அத்தை உருவாக்கி இருக்காங்க. சேவை செய்ய விரும்புற யார் வேணும்னாலும் இதில் உறுப்பினராகலாம். இதுவரை 50 ஆயிரம் பேர் சேர்ந்திருக்காங்க. நேரத்தைச் சம்பாதிக்கிற வழியையும் செலவிடும் முறையையும் இந்த மென்பொருள் உதவியால் தெரிஞ்சுக்கலாம்” என்ற ஜிமா, அதை வடிவமைத்த மங்கை அத்தை பற்றி விவரித்தாள்.
இருவருக்கும் அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசை பிறந்தது. நேர வங்கி உறுப்பினர் ஆவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.
உடனே ஜிமா, கைபேசியில் ஏதோ தட்டச்சு செய்யவே, அடுத்த சில நொடிகளில் இருவரின் கைபேசியும் ஒலி எழுப்பியது. வங்கிக் கணக்கு எண், உறுப்பினர் அட்டை இரண்டுமே கிடைத்திருந்தன. இருவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.
அந்தக் குழுவில் இணைந்தால் என்னென்ன உதவிகள் செய்யலாம் என்ற யோசனைகள் வந்தன.
முதியோர் இல்லங்களில் உள்ள வயதானவர்களுக்கு உதவும் திட்டம், மருத்துவ உதவித் திட்டம், உடற்பயிற்சி கற்றுத் தரும் திட்டம், பெரியவர்களைப் பூங்காக்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.
“நமக்குப் பிடிச்ச வேலையைக் கைபேசி வழியாகவே தேர்வு செய்யலாம். வயசானவங்க, சிறப்புக் குழந்தைங்க, தொண்டு நிறுவனங்கன்னு நிறையப் பேருக்கு உதவலாம். காசுக்குப் பதிலாக நேரத்தைப் பெறலாம். நம்மளோட நேர வங்கிக் கணக்கில், எத்தனை மணி நேரம்ங்கிற விவரம் வரவு வைக்கப்படும்” என்று விளக்கினாள், ஜிமா
பிறகு, மூவரும் மங்கை அத்தையைச் சந்திக்கச் சென்றார்கள். ஜிமா, தனது தோழிகள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். அவர், நேர வங்கி, பயன்பாடு, நேரச் சேமிப்புத் திட்டம் போன்றவற்றை விளக்கினார்.
“கடந்த காலத்தை நம்மால் இனி மீட்டுக் கொண்டுவர முடியாது. ஆனால், இப்போது செலவழிக்கப் போகும் நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்யலாம். மன்னிக்கணும், சேமிக்கலாம். இந்தச் சேமிப்பு நேரம் பல வகைகளில் நமக்கு உதவும்” என்ற மங்கை அத்தையின் பேச்சு அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
“எங்களுக்கும் சேவை செய்ய ஆசையா இருக்கு. அதுல கெடைக்கிற நேரத்தை வங்கியில சேமிக்கணும்” என்றாள் தாரா.
மங்கை அத்தை, திரையில் ஒரு குறும்படத்தைக் காட்டினார். அவர் சொன்ன திட்டத்தின்படி அடுத்த ஞாயிறு அன்று 40 தன்னார்வலர்கள் ‘நன்னூர்’ கிராமத்துக்குச் செல்ல இருக்கிறார்கள். 20 வருடங்களாகப் பராமரிப்பு செய்யாமல் கிடக்கும் குளத்தைத் தூர்வாருவது எப்படி என்று குறும்படத்தில் விவரமாகக் காண்பிக்கப்பட்டது.
“பயன்பாட்டில் இல்லாத இந்தக் குளத்தைச் சுத்தம் செய்தால் ஊர்மக்களுக்கு உதவியாக இருக்கும். தூர்வாரிய பிறகு, தன்னார்வலர்களின் கணக்கில் 6 மணி நேரம் வரவு வைக்கப்படும்” என்றார் மங்கை அத்தை.
மூவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த சாபிரா, “அடுத்த ஞாயிற்றுக் கிழமை, எனக்கு 6 மணிநேரம் கிடைக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள்.
ஜிமாவின் கைபேசி ஒலித்தது. தொடுதிரையைத் தொட்ட ஜிமா திடுக்கிட்டுப் போனாள்.
“ஐயோ... என்னோட வங்கிக் கணக்கில இதுவரை நான் 40 மணிநேரம் சேமிச்சு வைச்சிருந்தேன். திடீர்னு 2 மணி நேரம் குறைஞ்சு போச்சு. இப்போ நான் என்ன செய்யணும்?” என்று கவலையுடன் கேட்டாள்.
''நாம சேமிச்ச நேரம் இப்படியும் தொலையுமா? யாராவது எடுத்திருப்பங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் சாபிரா.
அப்போது குறுக்கிட்ட அத்தை, “இன்று நான் உங்களுக்கு 2 மணி நேரமாக ‘நேர வங்கி’ பத்தின வகுப்பு எடுத்தேனே. அதற்கான காசு யார் தருவார்கள்? அதனாலதான் ஜிமாவோட கணக்கில் இருந்து 2 மணிநேரத்தை எடுத்து என்னோட வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொண்டேன்” என்றார்.
ஜிமாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்தாள்.
கடைசியில் மங்கை அத்தை, “நேரத்தை எப்படிச் செலவு செய்யலாம்னு விளக்கத்தான் அதைச் செய்தேன். கவலை வேண்டாம். அதே வங்கிக் கணக்கில் 2 மணி நேரத்தைத் திரும்ப அனுப்பி வைக்கிறேன்.” என்றார்.
”இந்தத் தங்கமான நேரத்தை வைத்து என்ன செய்வது? இதனால் என்ன நன்மை?” என்று கேட்டாள் தாரா.
“நாம் வீணா செலவு செய்யும் நேரத்தின் அளவு குறையும். நல்ல விஷயங்களைச் செய்கிறோம் என்ற திருப்தி கிடைக்கும். நம்மால் உதவி பெற்றவர்கள் வாழ்த்தும்போது மகிழ்ச்சி உண்டாகும். இதனால் உடலும் உள்ளமும் உற்சாகமாக இருக்கும். நம் ஆயுளும் கூடும். பணம், பொருளைவிட இந்த நேரம் விலை உயர்ந்ததுதானே?”
“ஆமாம், தங்கமான நேரம்” என்றார்கள் மூவரும்.
ஜிமாவின் தங்கமான நேரம் திரும்பக் கிடைத்திருந்தது. மூவரும் அத்தைக்கு நன்றி சொல்லி மகிழ்ச்சியோடு விடைபெற்றார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago