குமாரும் சேதுவும் பள்ளியை விட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களோடு படிக்கும் ஜோசப் முன்னால் போய்க்கொண்டிருந்தான். திடீரென்று அவனைப் பார்த்துக் கத்தினான் குமார்.
“ஹேய் ஜோசப்! உன் கால்கிட்ட பாம்புடா..பாம்பு பாம்பு..!
சத்தம் கேட்டுப் பதறிய ஜோசப், தலைதெறிக்க ஓட முயற்சி செய்து தடுமாறிக் கீழே விழுந்தான்.
‘ஹைய்யா..விழுந்தான்டா..ஹாஹ்ஹா!’ கைகொட்டிச் சிரித்தான் குமார். சேதுவுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“ஏன் இப்படிப் பொய் சொல்லி அவனை விழவெச்சே?” கோபத்துடன் கேட்டான்.
“சரி விடுறா.. சும்மா ஜாலிக்குத்தான..”என்றபடி நடந்தான் குமார்.
சட்டையில் படிந்த மண்ணைத் தட்டியபடிக் கோபத்தோடு போய்விட்டான் ஜோசப்.
அன்று இரவு, குமாருக்கு ஒரு விசித்திரமான கனவு வந்தது. தோட்டத்தில் சேதுவோடு விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு குட்டிப் பாம்பைக் கண்டான். ஒளிரும் வண்ணத்தோடு அது மிகவும் அழகாக இருந்தது.அதைத் தொடப்போனான் குமார்.
‘டேய் வேணான்டா குமாரு.. ஆபத்து!’ என்று சேது சொன்னதையும் கேட்காமல் ஆசையோடு அந்தக் குட்டிப் பாம்பை எடுத்துத் தன் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டான்.
மறுநாள் தான் கண்ட கனவைப் பற்றி அம்மாவிடம் கூறினான் குமார்.
“எப்பப்பாரு பாடத்தப் படிக்காம டிஸ்கவரி, அனிமல் ப்ளானெட்டுன்னு பார்த்தா இப்படித்தான் கனவு வரும்” - அவன் தலையில் ஒரு குட்டு வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்த்தார் அம்மா.
குமாரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. எதற்கெடுத்தாலும் பொய் சொல்வதுதான் அது. குட்டிக்குட்டிப் பொய்களைச் சொல்லிக் கலாட்டா பண்ணுவதில் அவனுக்கு ஒரு குட்டி சந்தோஷம். சேது எத்தனையோ முறை சொல்லியும் இவன் கேட்கவே இல்லை.
அன்று பள்ளிக்குத் தன் புது சைக்கிளில் வந்திருந்தான் சேது. அது நீல நிறத்தில் மிகவும் அழகாக இருந்தது. மாலையில் பள்ளி விட்டதும் சேதுவும் குமாரும் சைக்கிளில் ஜாலியாக ரவுண்டு அடித்தார்கள்.
இரவில் வீட்டுப்பாடம் படிக்கும்போது, சைக்கிள் சாவியைக் குமாரின் வீட்டிலேயே மறந்து போய்விட்டான் சேது. அதை எடுத்துத் தன் அலமாரியில் வைத்துக்கொண்ட குமார், அது பற்றிச் சேதுவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டான். அன்று இரவும் குமாருக்கு அதே கனவு வந்தது. கனவில் அந்த அழகான பாம்பு சற்று பெரிதாகியிருந்தது. அது பாசத்தோடு குமாரைச் சுற்றிச்சுற்றி வந்தது. அது சேதுவைக் கடித்துவிட, சேது அழுதுகொண்டே ஓடினான்.
மறுநாள் காலை, சேது வீட்டில் ஒரே சத்தம். குமார் வீட்டுக்கு எதிர் வீடுதான் சேதுவின் வீடு. புது சைக்கிள் வந்த முதல் நாளே சாவியைத் தொலைத்துவிட்டானென்று அவன் அப்பா திட்டிக் கொண்டிருந்தார். அன்று முழுவதும் சேது அழுதுகொண்டேயிருந்தான். அதனாலேயே அவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இவ்வளவு நடந்தும் குமார் உண்மையைச் சொல்லவில்லை. அப்படியே மறைத்துவிட்டான். தன் நண்பனுக்காகத் துளியும் கவலைப்படாமல் எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தான்.
அதன்பிறகு சேதுவின் அப்பா சைக்கிளுக்குப் புது சாவி போட்டுக்கொடுத்தார். நண்பர்கள் எப்போதும் போல் சைக்கிளில் ரவுன்டு அடித்தார்கள்.
ஒருநாள் காலையில் பதினோரு மணிக்கு குமாரின் வீட்டுக்கு ஓர் போன் வந்தது. குமாரின் அப்பா இல்லாத நேரம். அம்மாதான் எடுத்துப் பேசினார். குமாரின் வகுப்பாசிரியை பேசினார். குமாரைப் பற்றிப் பேசவேண்டுமெனவும், உடனே பள்ளிக்கு வருமாறும் கூறினார். மனம் பதபதைக்கப் பள்ளிக்குச் சென்றார் அம்மா.
பரீட்சை விடைத்தாள் கொடுத்து ஒரு வாரமாகியும் ஏன் கையெழுத்துப் போடவில்லை என்று கேட்டார் வகுப்பாசிரியை. அம்மாவுக்குக் குழப்பம். தான் தினமும் விடைத்தாள் பற்றிக் கேட்டதையும், குமார்தான் இன்னும் யாருக்கும் விடைத்தாள் தரவில்லை என்று சொன்னதையும் கூறினார் அம்மா.
“பாருங்க... உங்க பையன் எப்படிப் பொய் சொல்லியிருக்கான்” என்று வகுப்பாசிரியைக்குக் கோபம் வந்தது. எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு மவுனமாக நின்றான் குமார். மகனின் இந்தச் செயலைப் பார்த்து அம்மாவுக்கு அழுகையே வந்துவிட்டது. இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகக் கூறிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அன்று முழுவதும் குமாரிடம் அம்மா பேசவேயில்லை.
அன்று இரவு, கனவில் வந்த பாம்பு குமாரின் அம்மாவையே கடித்துவிட்டது. திடுக்கிட்டு எழுந்தான் குமார். அவனுக்கு அழுகையாக வந்தது. அதன்பிறகு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. விடிந்ததும் அம்மாவிடம் நேரே சென்று அழுதவாறே மன்னிப்புக் கேட்டான்.
“ நான் இனிமேல் பொய் சொல்லமாட்டேன், நன்றாகப் படிப்பேன்” என்று அம்மா கையைப் பித்துக்கொண்டு அழுதான். அம்மாவும் குமாரை கட்டி அணைத்துக்கொண்டார்.
அன்று இரவு குமார் தூங்கப்போனான். கனவில் பாம்பு வரவில்லை. விதவித பொம்மைகள் கனவில் வந்து குமாரை கிச்சுகிச்சு மூட்டின.
பாம்பு ஏன் கனவில் வரவில்லை? ஏனென்றால், குமார் இப்போது மனம் மாறிவிட்டான். அதனால் கனவில் வந்த பாம்பு அவனைவிட்டு போய்விட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago