எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - இந்தியா: தங்க எலி

By யூமா வாசுகி

சேகரனின் குடும்பம் வறுமையில் தவித்தது. ஒரு வேளை உணவுக்குக்கூட அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. சேகரன் பசி தாங்க முடியாமல் வீட்டிலிருந்து புறப்பட்டான். நடந்து நடந்து சந்தைக்கு வந்துவிட்டான்.

வியாபாரிகளுக்கு வட்டிக் கடன் கொடுக்கும் ஆனந்தனின் கடையின் முன்னால் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். என்ன விஷயம் என்று தெரிந்துகொள்வதற்காகச் சேகரனும் அங்கே சென்றான்.

அங்கே கூடியிருந்தவர்கள் ஆனந்தனிடம் வட்டிக்குக் கடன் வாங்கிய சிறு வியாபாரிகள். அவர்கள் சரியாக வட்டி கொடுக்காததால் ஆனந்தன் திட்டிக்கொண்டிருந்தார்: “வியாபாரத்தில் வெற்றி பெற பணம் மட்டும் போதாது. அறிவும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படிப்பட்டவனால்தான், இதோ என் களஞ்சியத்தின் மூலையில் செத்துக் கிடக்கும் எலியைக் கொண்டே பெரிய பணக்காரனாக ஆக முடியும்!”

சேகரன் அதைக் கவனித்தான். பிறகு அவன் வேறு எதுவும் யோசிக்கவில்லை. ஆனந்தனிடம் சென்று கேட்டான்: “அப்படியென்றால், உங்கள் களஞ்சியத்தில் செத்துக் கிடக்கும் எலியை எனக்குக் கொடுங்கள்.அதை வைத்துப் பணக்காரன் ஆக முடியுமா என்று நான் முயற்சி செய்கிறேன்.”

அங்கே கூடியிருந்தவர்கள் சேகரன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். ஆனந்தனும் சிரித்தார். அவர் தன் உதவியாளரிடம் சொன்னார்: “அந்தச் செத்த எலியை இந்தப் பையனிடம் கொடு.”

செத்த எலியுடன் நீண்ட தூரம் நடந்தான்.

தர்ப்பூசணி வியாபாரம் செய்யும் ஒருவரைப் பார்த்தான். அவர் பக்கத்தில், பசியால் கத்திக்கொண்டிருக்கும் ஒரு பூனையும் இருந்தது.

சேகரன் உடனே அந்த எலியைப் பூனைக்குக் கொடுத்தான். அவனது நல்ல குணத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்த வியாபாரி, சேகரனுக்கு ஐந்து தர்ப்பூசணிகளைக் கொடுத்தார்.

மீண்டும் நடக்க ஆரம்பித்தான் சேகரன். வெகுதூரம் சென்றபோது, சிலர் வெயிலில் நின்று மரம் வெட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். தாகத்தால் தவித்த அவர்களுக்குத் தன்னிடமிருந்த தர்ப்பூசணிகளைக் கொடுத்தான். அவர்கள் சந்தோஷத்துடன் சேகரனுக்குக் கொஞ்சம் விறகுகள் கொடுத்தார்கள்.

சேகரன் அந்த விறகுகளைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்றான். அப்படி அவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது.

கிடைத்த பணத்தைக் கொண்டு சேகரன் என்ன செய்தான்?

மீண்டும் தர்ப்பூசணிகள் வாங்கினான். அப்புறம்? ஆட்கள் கடுமையாக உழைக்கும் இடங்களுக்கு எல்லாம் கொண்டு சென்று விற்க ஆரம்பித்தான்.

வெயிலில் வேலை செய்யும்போது தர்ப்பூசணிகள் கொண்டு வந்தால் யார் வாங்காமல் இருப்பார்கள்? எல்லோரும் வாங்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல சேகரனின் வியாபாரம் வளர்ந்தது. சில வருடங்களுக்குள் அவன் நிறையப் பணம் சம்பாதித்துவிட்டான்!

ஒருநாள் சேகரன், தங்கத்தால் எலியைச் செய்து ஆனந்தனிடம் கொடுத்தான். அப்போது வியப்புடன் கேட்டார் ஆனந்தன்: “எனக்கு ஏன் இந்தத் தங்க எலியைக் கொடுக்கிறாய்?”

செத்த எலியிலிருந்து தான் பணக்காரனாக ஆன கதையை விவரித்தான் சேகரன்.

ஆனந்தன் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சொன்னார்: “ஆரம்பம் மோசமாக இருந்தாலும், உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்பதை நீ நிரூபித்துவிட்டாய்!”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்