இளவேனிற் காலம்.
வெயில் பற்றிய கவலையே இல்லாமல், இலந்தைப் பழம் பறிக்க வந்திருந்தனர் பசுமைப் பள்ளிக் குழந்தைகள். பறித்த பழங்களோடு நாட்டுக் கருவேலம் மரத்தினடியில் வந்து நின்றனர். அம்மரத்தில் குட்டி மஞ்சள் பந்துகளாய் கருவேலம் பூக்கள்.
குழந்தைகள் பழங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். திடீரென அவர்களுக்குள் சிறு சண்டை. கணியன் எனும் சிறுவன் மற்றொரு சிறுவனைப் பார்த்து திட்டுகிறான்.
“போடா, மரமண்டை…”
அப்போது, சட்டென்று ஒரு சிரிப்பொலி கேட்கிறது. அதைக் கேட்டதும் குழந்தைகள் மிரண்டு, சுற்றும் முற்றும் பார்த்தனர். அவர்களைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. முகங்களில் திகில் பரவியது. சிரித்த குரல் இப்போது பேசியது.
“பயப்படாதீங்க குழந்தைகளா… நான்தான் மரம் பேசுகிறேன்”
குரல் வந்த திசையை நோக்கினர். அவர்களிடம் பேசியது, அங்கிருந்த கருவேல மரம்தான்.
“நீதான் சிரித்தாயா மரமே?”
“ஆமாம். நான்தான் சிரித்தேன். நீங்கள் சண்டையிடும்போது ‘மரமண்டை’ எனத் திட்டியதைக் கேட்டுச் சிரித்தேன். மரங்களுக்கு அறிவில்லை என்றுதானே அப்படித் திட்டினீர்கள்?”
அப்படித் திட்டிய கணியன் விழித்தான். அவனைப் பார்த்து சிரித்தபடியே மரம் தொடர்ந்து பேசியது.
“தவறு உன்னிடம் இல்லை தம்பி. எல்லோருமே அப்படித்தான் நினைக்கிறார்கள். மரங்களின் அறிவைப் பற்றி உங்களுக்கொரு கதைச் சொல்கிறேன். கேட்கிறீர்களா?”
கதையல்லவா? குழந்தைகள் ஆர்வமானார்கள். “சரி… சரி…”
“இது ஒரு உண்மைக் கதை. தென்னாப்பிரிக்கக் காடுகளில் நடந்தது. அங்கு ‘குடு’ என்கிற இரலைகள் (மான்கள்) வசிக்கின்றன. ஒருசமயம் அங்கு ஏறக்குறைய 3,000 இரலைகள் தொடர்ந்து இறந்தன. இறப்புக்குக் காரணம் மட்டும் தெரியவில்லை. எனவே, உயிரியலாளர்கள் ஆய்வில் இறங்கினர்.”
“என்ன கண்டுபிடித்தார்கள்?”
“மரங்களுக்கு அறிவு உண்டு எனக் கண்டுபிடித்தார்கள். இறந்த இரலைகளை ஆய்வு செய்தபோது, அவற்றின் வயிற்றில் ‘டானின்’என்கிற வேதிப்பொருள் இருந்தது. இது எப்படி இரலைகளின் வயிற்றுக்குள் போனது என யோசித்தார்கள்.”
“அது எப்படிப் போனதாம்?”
“அந்தக் காட்டில் என் இனத்தை சேர்ந்த அகேசிய மரங்கள் நிறைய இருக்கின்றன. இம்மரத்தின் இலைகளில் டானின் சிறிய அளவில் இருக்கிறது. இரலைகள் இம்மரத்தின் இலைகளை விரும்பி உண்ணும். முதல் அகேசிய மரத்தின் இலைகளை அவை மேயும்போது, அம்மரம் உடனே எத்திலின் ஆவியைச் சுரக்கும். அந்த ஆவியை காற்று அது வீசும் திசையில் 45 மீட்டர்வரை எடுத்துச் செல்கிறது. அந்த ஆவிதான் மற்ற அகேசிய மரங்களுக்கான சமிக்ஞை.”
“அதனால் என்ன நடந்தது?” ஆவலுடன் கேட்டான் கணியன்.
“சமிக்ஞைக் கிடைத்ததும் மற்ற மரங்கள், உடனே தம் இலைகளில் டானின் அளவை அதிகரித்தன. இந்த நஞ்சு இரலையைக் கொல்லுமளவுக்கு போதுமானதாக இருந்தது. எனவேதான், இதைத் தின்ற இரலைகள் இறந்தன.”
கணியனுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் திகைப்பு.
நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டைப் போடுகிறோம். ஆனால், மரங்களோ ஒன்றையொன்று காப்பாற்றிக் கொள்கின்றன. ஆனால் மரத்துக்கு ஓரறிவு என்கிறோம்.
ஓரறிவு மரத்துக்கா? மனிதருக்கா?
(அடுத்த முறை: பொறியாளர் மண்புழு)
கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago