டிங்குவிடம் கேளுங்கள்: கடல் நீரில் தங்கம் உண்டா?

By செய்திப்பிரிவு

தமிழின் சிறப்பே ‘ழ’ என்ற எழுத்துதான். ஆங்கிலத்தில் Tamilnadu என்று எழுதாமல் Tamizhnadu என்று தமிழக அரசு கொண்டு வரலாமே, டிங்கு?

- இளமதி அன்புமணி, 10-ம் வகுப்பு, மணிமேகலை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, மதுரை.

நீங்கள் சொல்வது சரிதான். ஊர்ப் பெயர்களை உச்சரிக்கும் விதத்தில் எழுத்தில் கொண்டு வரும் முயற்சியைத் தமிழக அரசு மேற்கொண்டது. அதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை. எதிர்காலத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது இளமதி.

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்றால் என்ன டிங்கு?

- எஸ். சஹானா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

பிரச்சினை வரும்போது அதை நல்லவிதமாகச் சிந்தித்தால், நல்ல தீர்வு கிடைக்கும் என்பதைத்தான் ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்று சொல்லியிருக்கிறார்கள். பூர்ண சுந்தரி 5 வயதிலேயே பார்வையை இழந்துவிட்டார். தனக்குப் பார்வை இல்லை என்று வருத்தப்பட்டு, முடங்கிப் போகாமல் நன்றாகப் படித்தார். கடினமாக உழைத்தார். இன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்! ‘இந்த முறை தோற்றிருந்தாலும் கொஞ்ச நேரத்துக்குதான் வருத்தப்பட்டிருப்பேன். உடனே அடுத்த தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சிருப்பேன்’ என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார் பூர்ண சுந்தரி. தன்னுடைய குறைபாட்டை எண்ணிக் கவலைப்படாமல், இலக்குடன் உழைத்ததால் இன்று எவ்வளவு பெரிய இடத்துக்குச் சென்றிருக்கிறார்! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார்தானே, சஹானா.

உலகிலேயே மிகப் பெரிய பூகம்பம் எங்கே ஏற்பட்டிருக்கிறது, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

1960-ம் ஆண்டு சிலி நாட்டில் ஏற்பட்ட வால்டிவியா பூகம்பம் தான் இதுவரை நிகழ்ந்த பூகம்பங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. 9.5 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட இந்தப் பூகம்பம் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. பூகம்பத்தின் விளைவாக சிலி, ஹவாய், ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து, தென்கிழக்கு ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. சிலி கடற்கரை சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்டது. 82 அடி உயரத்துக்கு அலைகள் தோன்றின. இந்தப் பூகம்பத்தால் சுமார் 7 ஆயிரம் மனிதர்கள் இறந்து போனார்கள், மஞ்சரி.

நான் கல்லூரியில் சேரப் போகிறேன். இனிமேல் என் நண்பன் டிங்குவிடம் கேள்வி கேட்க முடியாதா?

- ஆர். அரவிந்த் குமார், ஓசூர்.

ஓ... வாழ்த்துகள் அரவிந்த் குமார்! இனி உங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாது என்பது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. புளியங்குடியைச் சேர்ந்த மேஹசூரஜ், ஓசூர் அரவிந்த் குமார் போன்ற வாசகர்கள் என்னிடம் சவாலான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அதற்காக நான் நிறைய படித்திருக்கிறேன், நிபுணர்களிடம் பேசியிருக்கிறேன். பல விஷயங்களை இந்தக் கேள்விகள் மூலம் அறிந்திருக்கிறேன். என்னை அதிகம் வேலை வாங்கிய இருவரும் கல்லூரிக்குச் சென்றுவிட்டீர்கள். இனியும் என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்காமல், நீங்களே பதில்களைத் தேடித் தெரிந்துகொள்ள முடியும். அந்த வாய்ப்பு கிடைக்காத பள்ளி மாணவர்களுக்குப் பதில் சொல்வதுதானே சிறந்ததாக இருக்க முடியும்!

கடல் நீரில் தங்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே உண்மையா, டிங்கு?

- பா. பரத்ராஜா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கடல் நீரில் தங்கம் இருப்பது உண்மைதான் பரத்ராஜா. ஆனால், அதை எடுப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. 1872-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் சோன்ஸ்டாட் என்ற விஞ்ஞானி, கடல் நீரில் தங்கம் இருப்பதைக் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, கடல் நீரில் தங்கம் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், எவ்வளவு நீரில் எவ்வளவு தங்கம் கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

ஜெர்மனியைச் சேர்ந்த பிரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி, உலகப் போரால் நலிவடைந்த தன்னுடைய நாட்டுக்கு உதவும் வகையில் கடல் நீரிலிருந்து தங்கத்தை எடுக்கும் யோசனையை முன்வைத்தார். 1925-ம் ஆண்டு கடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்த நீரைச் சேமித்து, கப்பல்கள் மூலம் கொண்டுவந்தது ஜெர்மனி. 4 ஆயிரம் மாதிரிகளை ஆராய்ந்தபோது, கடல் நீரில் மிக மிகக் குறைவான அளவுக்கே தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் குறைவான தங்கத்தை எடுப்பதற்கு ஏராளமாகச் செலவு செய்ய வேண்டியிருந்ததால், ஜெர்மனி அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. எனினும் கடல் நீரில் உள்ள தங்கத்தை எடுக்கும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் குறைந்த செலவில், எளிதாக எடுக்கும் விதத்தில் தொழில்நுட்பம் வரலாம். அப்போது தங்கம் எடுப்பது சாத்தியமாகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்