என் பெயர் ஹிப்போகிரட்டீஸ். நான் ஒரு மருத்துவர். இனி வருவது உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் அளிக்கும் உறுதிமொழி.
‘எனக்கு ஏற்பட்டிருக்கும் வலிக்கு அல்லது வந்திருக்கும் நோய்க்கு கடவுளின் சாபமோ தீய சக்தியின் செயலோதான் காரணம்’ என்று நீங்கள் நம்புவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. உங்கள் உரிமையை நான் மதிக்கிறேன்.
அதே போல் என் நம்பிக்கையை நீங்கள் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் அப்போலோவை வழிபடுபவனா அல்லது வீனஸையா என்பது முக்கியமில்லை. தனிமனிதனாக நான் எந்தக் கடவுளையும் நம்பலாம், எவரையும் நம்பாமலும் போகலாம். ஒரு மருத்துவராக நான் ஏற்கும், மதிக்கும், வழிபடும் ஒரே கடவுள், அறிவியல். அறிவியல் கண் கொண்டே உங்கள் பிணிகளை அணுகுவேன். அறிவியலைக் கொண்டே உங்களுக்குச் சிகிச்சைகள் அளிப்பேன்.
நான் அதிகம் கேள்விகள் கேட்பேன். எவ்வளவு காலமாக இந்தப் பிரச்சினை இருக்கிறது? நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்? எந்த மாதிரியான உணவை உண்கிறீர்கள்? இரவில் உறக்கம் வருகிறதா? சமீபத்தில் எங்காவது வெளியில் சென்று வந்தீர்களா? உங்கள் வீட்டில் வேறு யாருக்காவது இந்தப் பிரச்சினை இருக்கிறதா? இன்னும் பல.
இவன் ஏன் என்னவெல்லாமோ கேட்கிறான் என்று தயவு செய்து எரிச்சல் கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குள் ஊடுவிருவிச் செல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. எனவே, உங்கள் வாழ்க்கைக்குள் ஊடுருவ வேண்டியிருக்கிறது. உங்கள் வாழ்க்கைமுறைக்கும் உங்களை வருத்தும் நோய்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது மட்டுமே என் நோக்கம்.
என்னை நம்பி உங்கள் உடலை ஒப்படைக்கிறீர்கள். என்னை நம்பி அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறீர்கள். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன். உங்கள் உடலை என் உயிரைவிடவும் மேலானதாகக் கருதுவேன். உங்கள் உணர்வுகளை மனப்பூர்வமாக மதிப்பேன். உங்களைப் பற்றிய எந்தத் தகவலும் என்னைவிட்டு ஓர் அங்குலம்கூட அகலாது.
உங்களுக்கும் கிருமிக்கும் உங்களுக்கும் பிணிக்கும் உங்களுக்கும் வலிக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் நான் உங்கள் பக்கம் உறுதியோடு நிற்பேன். உங்கள் வலியை என் வலியாகப் பார்ப்பேன். நேர்மையோடும் மரியாதையோடும் உங்களை அணுகுவேன். என் முழு கவனத்தையும் உங்கள்மீது குவிப்பேன். என் அறிவையும் அனுபவத்தையும் உங்களுக்காகத் திரட்டித் தருவேன்.
சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்தையும் உங்களுக்கு விளக்குவேன். ஒவ்வொரு கட்டத்தையும் உங்களோடு விவாதிப்பேன். உங்களுக்கு விருப்பமில்லாத எதையும் நீங்கள் அனுமதிக்காத எதையும் உங்கள்மீது திணிக்க மாட்டேன்.
நான் உங்களிடம் என்னவெல்லாம் கேட்க மாட்டேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன். நீங்கள் அரசரா, சேவகரா? ஏழையா, பணக்காரரா? செல்வாக்கு மிக்கவரா, ஏதுமற்றவரா? நல்லவரா, கெட்டவரா? நீங்கள் எனக்கு நண்பரா, பகைவரா? உறவினரா, ஊர்காரரா அல்லது அயல்நாட்டுக்காரரா? உங்கள் கடவுள் யார்? உங்கள் அரசியல் என்ன? எதுவுமே எனக்கு முக்கியமில்லை. எதுவுமே எனக்குத் தெரிய வேண்டியதும் இல்லை.
உங்கள் தோலின் நிறம் முக்கியமல்ல. உங்கள் குலப்பெருமையில் எனக்கு ஆர்வமில்லை. நீங்கள் கற்றவரா, கல்லாதவரா என்பது எனக்கொரு பொருட்டல்ல. நீங்கள் என்பது உங்கள் உடலும் உள்ளமும்தான். உங்கள் உடலையும் உள்ளத்தையும் எது வருத்துகிறதோ அதைக் கண்டறிந்து களைவது மட்டுமே என் பணி.
ஆம், எல்லோரையும் போல் எனக்கும் வருமானம் தேவை. எல்லோரையும் போல் எனக்கும் தேவைகள் உள்ளன. ஆனால், உங்கள் நோயை ஒரு போதும் எனக்கான வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன். உன் உயிரைக் காப்பாற்றினால் எவ்வளவு தருவாய் என்று ஒருவரையும் ஒருநாளும் கேட்க மாட்டேன். நீங்கள் மகிழ்ச்சியோடு எவ்வளவு கொடுத்தாலும் முழு மனநிறைவோடு பெற்றுக்கொள்வேன். அளிக்க ஏதுமில்லை என்றாலும் நீங்கள் என் நன்றிக்குரியவர்தான்.
நீங்கள் என்னிடமிருந்து பயனடைவதைப் போல் நான் உங்களிடமிருந்தும் பயனடைகிறேன். நீங்கள் பிணியில்லாமல் இருந்தால்தான் நானும் பிணியில்லாமல் இருக்க முடியும். உங்களால் கிருமிகளை வெல்ல முடியும் என்றால் நாளை என்னாலும் அதே கிருமிகளை வெல்ல முடியும். ஒரு மனிதனின் வலியை எப்படிப் போக்குகிறது என்பதை நீங்களே எனக்கு அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொடுக்கிறீர்கள். உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தைத்தான் நான் இன்னொருவருக்குப் புகட்டுகிறேன். இந்தப் பாடங்கள்தான் அறிவியலின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. அதற்காகவும் சேர்த்து நான் உங்களை மதிக்கிறேன்.
வலியோடு வரும் உங்கள் ஒவ்வொருவரின் உதடுகளிலும் புன்னகை பூக்க வேண்டும். சோர்ந்துகிடக்கும் ஒவ்வோர் உள்ளத்திலும் புத்தொளி தோன்ற வேண்டும். பிணிகள் இல்லா உலகம் அமைய வேண்டும். அப்படி ஒன்று அமையும்வரை உழைத்துக்கொண்டிருப்பேன்.
இது நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் உறுதிமொழி. இந்த உறுதிமொழிதான் என்னுடைய அறம். இதுதான் என் புனிதநூல். இதுதான் என் அடையாளம். நான் என் உறுதிமொழியை என்று மீறுகிறேனோ அன்றே மருத்துவராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறேன்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com n n
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago