கரோனா ஊரடங்குக் காலம் பலவித அனுபவங்களையும், புதிய பழக்கங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஊரடங்குக் காலத்தில் வீட்டில் இருக்கும் நேரத்தில் எளிய மக்களின் வாழ்க்கை முறை, வரலாற்றை தற்காலக் குழந்தைகளிடம் பேச அப்பாவும் மகளும் கூட்டாக யோசித்திருக்கும் முயற்சி 'குட்டி ஸ்டோரி' என்ற யூடியூப் அலைவரிசை. பெல்ஜியத்தில் வாழும் சிந்தன், அவருடைய 12 வயது மகள் யாநிலா இருவரும் சேர்ந்து நம் காதுகளுக்கு வராத பல கதைகளை இந்த அலைவரிசையில் சொல்கிறார்கள். தம் குழந்தைகளுடன் உரையாட பல பெற்றோர்களுக்கு இந்த வீடியோக்கள் வாய்ப்பாக அமைந்துள்ளன.
ஸ்டோரி உருவான கதை
"என்னுடைய மகளுக்கு ஒரு வயது இருந்தபோது யூட்யூபில் சில கதைப் பாடல்களைக் காட்டுவோம். அவள் அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் இருப்பதாகவே நம்பினாள். ஒரு மான் கதை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். லேப்டாப்பில் அந்த மான் வரும்போதெல்லாம், அதற்கு சோறு ஊட்டுவாள். அந்த அளவுக்குக் கதையில் வரும் கதாபாத்திரங்களோடு அவள் ஒன்றிப்போனாள்.
ஒன்றரை வயதிலிருந்து தினமும் இரவு தூங்கப்போகும்போது நான் அவளுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் புதுசா சொல்லுப்பா என்று கேட்க ஆரம்பித்துவிட்டாள். அப்போதுதான் சிறுவர்களுக்கான நூல்களைத் தேடத் தொடங்கினேன். பல நவீன சிறுவர் எழுத்தாளர்களின் நூல்கள் எனக்கு அறிமுகமாகின. அவற்றில் சிறிய கதையாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒன்று, பெரிதாக இருந்தால் ஒரு நாளைக்கு சிறிய பகுதியாக வாசித்துக் காட்டத் தொடங்கினேன்.
அவள் வளர வளர, அவளுடைய வயதுக்கேற்ற நூல்களாகத் தேடி வாங்கி, அவற்றைப் படித்தும் கதைசொல்லியும் வந்தேன். இரண்டு வயதாக இருந்தபோது, ஒரு கதை சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கேட்டவள், 5-6 வயதானபோது கதையை வாசிக்கும்போதே, அது என்ன சொல்லவருகிறது என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டாள்.
இன்று அவளுக்கு வயது 12 ஆகிறது. இந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான கதைகளை அவளுக்குச் சொல்லியிருக்கிறோம். இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இன்றைக்கு அவளே தமிழ், ஆங்கிலம், டச்சு மொழிகளில் சரளமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 50 நூல்களாவது படித்துவிடுகிறாள். தினமும் அரை மணி நேரத்தைப் படிப்பதற்கு என்று எங்கள் வீட்டில் ஒதுக்கியிருக்கிறோம். நான், மனைவி, மகள் என மூவரும் அந்த அரை மணி நேரமும் அமைதியாக வாசிப்போம்.
மகளுக்குக் கதை சொல்வதால் அவளோடு கூடுதல் நெருக்கம் உருவாகியிருக்கிறது. எங்கள் இருவருக்குமே நூல்களும் கதைகளும் விருப்பமானதாக மாறியிருக்கின்றன. அந்தந்த வயதுக்கேற்ற தலைப்புகளில் எங்களால் விவாதம் செய்யமுடிகிறது. மற்ற குழந்தைகளுக்கும் அந்த உணர்வைக் கடத்தினால் என்ன என்று தோன்றியது. மகளுக்கு நேரடியாகக் கதையைச் சொல்லி, அதை வீடியோவாக எடுக்கலாம் என்று முயன்றேன். அப்படித்தான் குட்டி ஸ்டோரி யூடியூப் அலைவரிசை உருவானது" என்கிறார் அந்த அலைவரிசையை நடத்திவரும் சிந்தன்.
சமூகமும் அறிவியலும்
குழந்தைகளுக்கு அவர்களைச் சுற்றி வாழும் மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைமுறை, பிரச்சினைகள் குறித்தும் புரியும் வகையில் கதைகளாகச் சொல்ல வேண்டியதும் முக்கியம். சிறுவயதிலிருந்தே இவ்வுலகம் குறித்து ஏராளமான சந்தேகங்களும் கேள்விகளும் குழந்தைகளுக்கு வந்துகொண்டேதான் இருக்கும். அவற்றுக்குச் சரியாகப் பதிலளிக்கவில்லை என்றால், பொய்யான வதந்திகளை நம்பி, மூடநம்பிக்கைகளை உண்மையென்று அவர்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அதனால் அவர்களுக்குப் புரியும்படி கதைகளின் வழியாக அறிவியலைச் சொல்லியாக வேண்டும் என்ற நோக்கங்களுடன் செயல்பட்டுவருகிறது #KuttiStory / #குட்டிஸ்டோரி அலைவரிசை.
அன்றாட வாசிப்பு
"நம்ம சமூகத்துல இருக்குற பிரச்சினைகளை இன்னைக்கு சரிசெய்ய முடியலன்னாகூட, இன்னும் 10-20 ஆண்டுகள் கழித்து சரிசெய்யனும்னா, இன்னைக்கு குழந்தைகளா இருக்குறவங்ககிட்ட அந்தப் பிரச்சினைகளை எல்லாம் நேரடியாவோ மறைமுகமாகவோ சொல்லணும். அப்போதான் நாம விட்ட இடத்துல இருந்து, அதைச் சரிசெய்றதுக்கு நாளைக்கு அவங்களால முடியும்.
அமெரிக்காவில் 1960கள்ல கறுப்பின மக்களுடைய பெரிய எழுச்சி நடந்தது.
மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், ரோசா பார்க்ஸ் அப்படின்னு நிறைய பேர் குரல் கொடுத்தாங்க. அந்தக் காலகட்டத்துல அந்தப் போராட்டங்கள்ல வெள்ளையின மக்களோட பங்களிப்பு ரொம்ப ரொம்பக் குறைவு. ஆனா, இப்ப ஜார்ஜ ஃபிளாய்ட் என்கிற கறுப்பினத்தைச் சேந்த ஒருவர் நடுத்தெருவில் வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்டதற்குப் பின்னால பெரிய போராட்டம் வெடிக்குது. அந்த போராட்டங்கள்ல வெள்ளையின மக்கள் பெரிய அளவுல பங்கெடுத்தாங்க. எப்படி இது சாத்தியமாச்சு? இனவெறி தப்புங்குற பிரச்சாரம் வெள்ளையின மக்களிடமும் கொண்டுசெல்லப்பட்டதுதான் முக்கியக் காரணம். அமெரிக்காவுல மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட ஏராளமான கறுப்பினப் போராளிகள் பற்றிய ஏராளமான சிறுவர் இலக்கிய நூல்கள் வந்திருக்கு.
கதைகள் வழியாகக் குழந்தைகளுக்கு நிறைய சொல்லமுடியும். சமத்துவத்தை, அன்பை, சமூக நீதியை, விட்டுக்கொடுத்தலை, பகிர்தலை கதைகள் மூலமாகச் சொல்லி குழந்தைகளுடன் உரையாடுவது அவசியம். மேற்கு ஐரோப்பிய, ஸ்காண்டிநேவியப் பள்ளிகள், பள்ளி நேரத்திலேயே தினமும் அரை மணி நேரமாவது எல்லாக் குழந்தைகளும் பாடப்புத்தகம் அல்லாத ஒரு நூலை வாசிக்க வைக்கிற பழக்கத்தைச் செயல்படுத்துகின்றன. இதற்காகவே ஒவ்வொரு வகுப்பிலும் சிறு நூலகம் உண்டு. இது போதாதென்று, தினமும் அரை மணி நேரம் வீட்டில் ஏதாவது நூலை வாசிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனால், ஒவ்வொரு வயதுக்கேற்ற சிறுவர் நூல்கள் அங்கே வெளியாகின்றன" என்று குறிப்பிடுகிறார் சிந்தன்.
முன்மாதிரி
பல காட்சி ஊடகங்கள் வந்தாலும் புத்தகங்களை, கதைகளை வாசித்து நமக்கான காட்சியை நாமே உருவாக்கிக்கொள்ளும் திறன் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். இந்த குட்டி ஸ்டோரி அலைவரிசையைப் போன்று பல கதைகளுடன் குழந்தைகளுடன் உரையாட வேண்டும். எந்த ஒரு சமூகத்தை மேம்படுத்தவும் உரையாடல் அவசியம். நம் குழந்தைகளை சமூகத்தின் மீது அன்பு கொண்டவர்களாக மாற்ற, தொடர்ந்து உரையாடவும் கதைகள் கூறவும் வலியுறுத்துகிறது இந்த குட்டி ஸ்டோரி.
- மதன்குமார் U.S.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago