முகக்கவசத்தின் கதை

By ஸ்நேகா

முகக்கவசத்துடன்தான் வாழ்வோம் என்று நான்கு மாதங்களுக்கு முன்பு வரை யாரும் நினைத்திருக்க மாட்டோம். இன்று கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக முகக்கவசங்களை அணிகிறோம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக முகக்கவசங்கள் அணியும் வழக்கம் பழங்காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது. மரம். தோல், உலோகம், களிமண் போன்றவற்றில் முகக்கவசங்களைச் செய்து பாதுகாப்பு, சடங்கு, பொழுதுபோக்கு என்று பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் முகக்கவசங்களை அணிய ஆரம்பித்துவிட்டனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசங்களில் மிகப் பழமையானவை பிரான்ஸிலும் இஸ்ரேலிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பழங்கால முகக்கவசங்கள் மரம், களிமண் போன்றவற்றில் செய்யப்பட்டிருந்ததால், அவற்றைப் பாதுகாக்க முடியவில்லை.முகக்கவசத்தைப் பார்த்தே அது மகிழ்ச்சிக்குரியதா, பாதுகாப்புக்குரியதா, அச்சத்துக்குரியதா, சடங்குக்குரியதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

பழங்கால கொலம்பிய மக்கள் கடவுளையும் பிசாசையும் முகக்கவசங்களில் கொண்டுவந்தனர். இறந்த பிறகான வாழ்க்கைக்குத் தொடர்புகொள்ளும் வழியாகக் முகக்கவசங்களைப் பயன்படுத்தினர்.

ஆப்பிரிக்க மக்கள் சடங்குகளில் முகக்கவசங்களைப் பயன்படுத்தினர். மூதாதையர்களுடனும் ஆவிகளுடனும் தொடர்புகொள்ளும் வழியாக முகக்கவசங்களைக் கருதினர். மேற்கு ஆப்பிரிக்க மக்கள் விழாக்களில் முகக்கவசங்களை அணிந்தனர். மனித உருவங்களில் மட்டுமின்றி விலங்குகளின் உருவங்களிலும் முகக்கவசங்களை அணிந்தனர். காடுகளில் விலங்குகளின் ஆவிகளுடன் தொடர்புகொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாக, விலங்கு வடிவ முகக்கவசங்களை உருவாக்கினார்கள்.

ஆண்டிலோப் மானின் உருவ முகக்கவசம் விவசாயத்தைக் குறித்தது. மூடிய கண்களுடைய முகக்கவசம் அமைதியைக் குறித்தது. நெற்றியில் வீக்கத்துடன் இருக்கும் முகக்கவசம் அறிவைக் குறித்தது. பெரிய கண்களுடைய பல வண்ண முகக்கவசங்கள் போரில் எதிரிகளை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. முகக்கவசங்கள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டன. நீண்ட காலம் உயிர் வாழும் தன்மையுள்ள மரத்தின் மூலம் முகக்கவசங்களைச் செய்தால், மரத்தின் வலிமை கிடைக்கும் என்று நம்பினார்கள்.

ஆப்பிரிக்கர்கள் தங்களின் அன்பையும் இயற்கையின் மீது இணக்கமாக இருக்க விரும்புவதையும் முகக்கவசங்கள் மூலம் வெளிப்படுத்தினர். தங்களைச் சுற்றியுள்ள அனைத்தின்மீதும் அவர்களுக்கு மதிப்பு இருந்தது. ஒட்டுமொத்த உயிரினங்களில் தாங்களும் ஒரு பகுதி என்று நம்பினர்.

எகிப்து நாட்டில் இறுதிச் சடங்குகளில் முகக்கவசங்களின் பயன்பாடு அதிகம் இருந்தது. இறந்த பிறகு இருக்கும் வாழ்க்கைக்கு இந்த முகக்கவசங்கள் உதவும் என்று நம்பினர். இறந்தவர்களின் முகத்தை மூடும் விதத்தில் உருவாக்கப்பட்ட முகக்கவசங்கள், புதிய வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதாக நினைத்தனர்.

முகக்கவசங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. மன்னர்களின் முகக்கவசங்கள் தங்கத்தால் செய்யப்பட்டன. மரம், களிமண் போன்ற முகக்கவசங்கள் மூலம் எளிதாக அவற்றை அணிந்தவர்களின் அந்தஸ்தை அறிந்துகொள்ள முடியும்.

எகிப்தியர்கள் இறுதிச் சடங்குகளின்போது மட்டுமல்லாமல், புனித விழாக்களிலும் முகக்கவசங்களைப் பயன்படுத்தினர். எகிப்தியர்களின் முகக்கவசங்கள் மூலம் அன்றைய மக்களின் நம்பிக்கைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

கிரேக்கத்திலும் புனிதச் சடங்குகளில் முகக்கவசங்களை அணியும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் திருவிழாக்களில் முகக்கவசங்களை அணிந்து நடனமாடினர். கதைகளை நிகழ்த்திக் காட்டினர். இதன் மூலமே நாடகக் கலை உருவானது என்கிறார்கள் வரலாற்றாளர்கள். மனித முகம் போன்று உருவாக்கப்பட்டாலும் இந்த முகக்கவசங்கள் பெரிய கண்களும் சிறிய வாயும் நீண்ட மூக்குமாக கார்ட்டூன் போன்று இருந்தன. இப்படித்தான் உலகின் முதல் கார்ட்டூன் உருவானது என்கிறார்கள். விலங்குகளின் தன்மைகளை மனிதத் தன்மையுடன் கலக்கும் கார்ட்டூன் முகக்கவசங்கள் அற்புதமாக இருந்தன. இன்றைய திரைப்படம், தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவை காட்சிகளுக்கு கிரேக்கத்தின் முகக்கவசங்களே முன்னோடியாக இருந்தன.

லத்தீன் அமெரிக்காவில் வாழ்ந்த பழங்கால அஸ்டெக் மக்களும் இறந்தவர்களுக்கு முகக்கவசங்களை அணிவித்தனர். ஆரம்பத்தில் தோலால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் பிறகு தாமிரம், தங்கம் போன்றவற்றால் செய்யப்பட்டன.

நவீன காலத்தில் பல்வேறு விதங்களில் மனிதர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். வேட்டைக்குச் செல்லும்போதும் போர்களுக்குச் செல்லும்போதும் பாதுகாப்பு கருதி முகக்கவசங்கள் அணியப்பட்டன. குற்றச்செயல்களுக்குத் தண்டனையாக முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இதை அணிந்தால் எளிதாகப் பேசவோ சாப்பிடவோ தூங்கவோ இயலாது.

நெருப்பு, ரசாயனம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் பாதுகாப்புக்காக முகக்கவசங்களை அணிகிறார்கள். சில விளையாட்டுகளிலும் முகக்கவசங்கள் அணியப்படுகின்றன. ரகசியமான பணியைச் செய்யும்போது தங்கள் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் முகக்கவசங்களை அணிகிறார்கள். இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறும் திருவிழாக்களில் அணியும் முகக்கவசங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஏழை, பணக்காரர், ஆண், பெண், வயது, நாடு, இனம், மொழி போன்ற எந்த வித்தியாசத்தையும் வெளிக்காட்டாமல் இருப்பதற்கு இந்த முகக்கவசங்கள் பயன்படுகின்றன.

வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக முகக்கவசங்கள் அணியும் வழக்கம் இருந்தாலும், இன்று ஒரே காரணத்துக்காகத்தான் உலக மக்கள் முகக்கவசங்களை அணிகிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களும்,தொற்று ஏற்பட்டவர்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்களும் முகக்கவசங்களை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மகிழ்ச்சி தருணங்களுக்காக மட்டுமே முகக்கவசம் அணியக்கூடிய காலம் விரைவில் வரட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்