பசுமைப் பள்ளி - 1: புதிர்ப் பெட்டி!

By நக்கீரன்

இது வகுப்பறைகளே இல்லாத திறந்தவெளிப் பள்ளி. வானமே கூரை. திசைகளே சுவர்கள். நம் புவிக்கோளமே பாடநூல். இப்பள்ளிக்கு மனிதர் தவிர்த்த மற்ற உயிரினங்கள்தான் ஆசிரியர்கள். இவர்கள்தான் சுற்றுச்சூழல் பற்றி எளிய தமிழில் நமக்குச் சொல்லித்தரப் போகிறார்கள். வாருங்கள் குழந்தைகளே… குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் வாருங்கள், குழந்தைகளாய் மாறுங்கள். பசுமைப் பள்ளியில் பயிலுவோம்.

புங்கை மரங்களின் குளுமையான நிழல். எங்கிருந்தோ கூவிச் சூழலை இனிமையாக்கும் ஓர் ஆண் குயில். புங்கைப் பூக்களை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் போலவே பல நிறங்களில் ஆடையணிந்த குழந்தைகள். அவர்கள் அனைவரும் பசுமைப் பள்ளியின் குழந்தைகள். இப்பள்ளிக் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. மனப்பாடக் கல்வியும் இல்லை. புத்தக மூட்டை இல்லவே இல்லை. பிறகென்ன? ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.

குழந்தைகளின் நடுவே பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. இப்பெட்டிக்குள்தான் இவர்களுக்கான தொடக்கப் பாடம் இருக்கிறதாம். புதிராக இருக்கிறதே! பெட்டிக்குள் என்ன பாடம் இருக்கும்? தெரியவில்லை. ஆனால், பெட்டியின் மேலே ஓர் அறிவிப்பு ஒட்டப்பட்டு இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

“எச்சரிக்கை. உலகிலேயே மிக ஆபத்தான விலங்கு இப்பெட்டியின் உள்ளே இருக்கிறது. ஒவ்வொருவரும் வரிசையில் வந்து மூடியைத் திறந்து பார்க்கவும்.”

அறிவிப்பைப் பார்த்ததும் குழந்தைகளுக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். ஆனாலும், ஆர்வத்தைத் தடுக்க முடியாதே! மற்றவர்கள் கொஞ்சம் அச்சத்துடன் விலகி நிற்க, மூடியை முதலில் திறக்க முன்வருகிறாள் யாழினி. அவளுக்குத் துணிச்சல் அதிகம்.

மூடியைத் திறக்கிறாள். அஞ்சியபடியே எட்டிப் பார்க்கிறாள். ஒரு நொடிதான், அச்சப்பட்ட முகத்தில் இப்போது திகைப்பு. அடுத்த கணம் சிரிப்பு. ஆபத்தான விலங்கைப் பார்த்து யாராவது சிரிப்பார்களா? இந்த யாழினி சிரிக்கிறாளே?

அடுத்து நின்றிருந்த குழந்தை ஆவலுடன் கேட்கிறது. “உள்ளே என்ன விலங்கு இருக்கு யாழினி?”

யாழினி பதில் எதுவும் சொல்லவில்லை. பெட்டியின் கீழே ஒட்டப்பட்டிருந்த இன்னொரு அறிவிப்பைச் சுட்டிக்காட்டினாள்.

“விலங்கைப் பார்த்தவர்கள் என்ன விலங்கென்று யாரிடமும் சொல்லக் கூடாது”

ஆர்வத்துடன் அடுத்த குழந்தையும் மூடியைத் திறக்கிறது. அக்குழந்தையின் முகத்திலும் முதலில் திகைப்பு, அடுத்து சிரிப்பு. அக்குழந்தையும் உள்ளே இருப்பது என்ன என்று அடுத்தவரிடம் சொல்லவில்லை. அடுத்தடுத்து வந்த குழந்தைகள் அனைவருமே திறந்து பார்த்துவிட்டு, சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது என்ன ஆபத்தான விலங்கா? இல்லை வேடிக்கையான விலங்கா?

நமக்கும் ஆர்வம் பொங்குகிறதே? பெட்டியைத் திறந்துப் பார்ப்போமா? அருகில் சென்று மெல்ல பெட்டியைத் திறக்க… உள்ளே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி.

அந்த விலங்கு நாம்தானா?

முகத்தில் அசடு வழிகிறது.

உண்மையில், ஆபத்தான விலங்கு நாம்தான். இப்புவியில் எல்லா உயிரினங்களும் தோன்றிய பிறகு கடைசியில் தோன்றிய இனம்தான், மனித இனம். ஆனால், தனக்கு முன் தோன்றிய அனைத்து உயிரினங்களையும் ஒன்று விடாமல் அழித்துக் கொண்டிருப்பதும் மனித இனம்தான். எனவே ஆபத்தான விலங்கு என்பது சரிதானே?

தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறதா? அடுத்தது என்ன? காத்திருங்கள்.

- கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்